வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (02/01/2019)

கடைசி தொடர்பு:16:03 (02/01/2019)

''நார்மல் பள்ளியில் ஆட்டிசம் குழந்தைகளைச் சேருங்கள்'' - மருத்துவரின் புதிய முயற்சி

"ஆட்டிசத்தை முழுமையாகக் குணப்படுத்திவிட முடியாது என்றாலும், உரிய பயிற்சிகளின் மூலமாகக் குழந்தைகளின் நடவடிக்கைகளில் நிச்சயம் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும்."

''நார்மல் பள்ளியில் ஆட்டிசம் குழந்தைகளைச் சேருங்கள்'' - மருத்துவரின் புதிய முயற்சி

சிறப்புக் குழந்தைகள் எனச் சமூகத்தால் தனியாக அடையாளம் காணப்படும் குழந்தைகள் அன்பால் தனித்துவமானவர்கள். நாம் அவர்களைப் புரிந்துகொண்டால் உலகையே தன் அன்பால் நிரப்பிவிடும் வல்லமை அவர்களுக்கு உண்டு'' என்று நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் மானு. நார்மல் குழந்தைகளுடன்தான் ஆட்டிசம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற கொள்கையில் தீவிரமாக இயங்கி வருபவர். ஆட்டிசம் குழந்தைகளுக்காக பிளே ஸ்கூல் ஒன்றையும் நடத்தி வருபவர். அதற்கான காரணமே அத்தனை இயல்பாக இருக்கிறது. 

``பிறவியில ஏற்பட்ட குறைபாட்டால ஆட்டிசம்ங்கிற நிலைக்குப் போன குழந்தையை, நாம ஒதுக்குகிறது கொடுமையான பாவம். அவங்களை ஒதுக்குறவங்ககிட்ட எல்லாம் அந்தக் குழந்தைகள் எதிர்பார்க்கிறது அளவில்லாத அன்பை மட்டும்தான். நாம அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாம தட்டிக்கழிக்கும்போது, அலட்சியப்படுத்தும்போது அவங்க ஆக்ரோஷமா ஆகுறங்க அவ்வளவுதான். மத்தபடி அவங்க மனசுல எந்தக் கபடமும் இருக்காது'' என்று மருத்துவமும், மனிதாபிமானமும் கலந்து வருகிறது அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும்.

``குழந்தை நார்மலா இல்லை ஆட்டிசம் குறைபாடு இருக்கா என்பதில் குழந்தையின் எட்டு மாதத்திற்குள்ளாக நிச்சயம் கண்டுபிடித்துவிட முடியும். ஆட்டிசத்தை முழுமையாகக் குணப்படுத்திவிட முடியாது என்றாலும், உரிய பயிற்சிகளின் மூலமாகக் குழந்தைகளின் நடவடிக்கைகளில் நிச்சயம் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும். என்னிடம் ஆட்டிசம் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வரும் பெற்றோர்களுக்கு கவுன்சலிங் வழங்குவேன். பெற்றோர்கள், நண்பர்கள் எனச் சமூகத்தோடு பயணிக்கும் ஆட்டிச குழந்தைகளிடம் நல்ல மாற்றத்தைப் பார்க்க முடியும். பொதுவாக இயல்பான குழந்தைகளின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பைவிட  சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம் இருக்கும் அவர்களிடம் ``உங்க குழந்தைகிட்ட இப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு'' என்கிற வார்த்தையை நாங்கள் சொல்லும்போது மிகப்பெரிய தன்னம்பிக்கையை, உற்சாகத்தை அவர்களிடம் காண முடியும். அதற்கு இந்தச் சமூகமும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடத்த வேண்டும். 

ஆட்டிசம்

சிறப்புக் குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவேண்டும் என்றால் அவர்களை நார்மல் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேருங்கள் என்பேன். `எங்க டாக்டர் விடறாங்க...' என்று விரக்தியான குரலில் பெற்றோர்கள் புலம்புவதைக் கேட்டுவிட்டு நானே பள்ளி தொடங்க நினைத்தேன். முதலில் பிரபலமான பள்ளியின் கிளையை எடுத்து நடத்தினேன். ஆனால், அதன் கல்வி முறைகள் ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஏற்ப இல்லை. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்ததால் மாண்டிசோரி கல்வி முறையை அடிப்படையாக வைத்து, நுங்கம்பாக்கத்தில் நானே சொந்த பள்ளியைத் தொடங்கினேன்.

நார்மல் குழந்தைகளுக்கு முதலில் அட்மிஷன் அளித்து, அதன் பின் அவர்களுடன் சிறப்புக் குழந்தைகளையும் சேர்க்க அட்மிஷன் தொடங்கினோம். பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள் பெற்றோர்கள். சிலர் கோபித்துக்கொண்டு சென்றார்கள். அவர்களின் பயமெல்லாம், ஆட்டிசம் குழந்தைகளைப் போல துப்புவது, எடுத்து எறிகிற பழக்கத்தை தங்கள் குழந்தைகளும் செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்று பயந்தார்கள். ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன்.

அதனால் சிறப்புக் குழந்தைகளுக்கு அட்மிஷன் அளித்தது முதல் ஆறு மாதங்கள், அந்தக் குழந்தைகளுக்கான டிரெயினர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் துணையோடு குழந்தைகளுக்கான அடிப்படை டிரெயினிங் கொடுத்தேன். பள்ளியில் சேர்ந்த ஆறு மாதத்தில் அக்குழந்தைகளின் நடவடிக்கையில் நல்ல மாற்றம் தெரிய ஆரம்பித்தது'' என்கிற மானு குழந்தைகளுக்கான அடுத்தகட்ட கல்வி முறை பற்றி விவரிக்கிறார்.

``எங்களுடைய பள்ளியில் தற்போது கே.ஜி வகுப்புகள் வரைதான் செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால், எங்கள் பள்ளியில் பயிற்சி பெற்ற குழந்தைகளின் செயல்பாடுகளைப் பார்த்து, நிறைய பள்ளிகள் சிறப்புக் குழந்தைகளுக்கு அடுத்தகட்ட கல்வி நிலைக்கு அட்மிஷன் தருகிறார்கள். ஆட்டிசம் பாதிப்பைத் தவிர அந்தக் குழந்தைகளுக்கு வேற எந்தப் பாதிப்பும் கிடையாது என்கிற என் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இந்தப் பள்ளி கட்டணத்தை முழுவதும் இலவசமாக நடத்திட இப்போது இயலவில்லை. ஆனால், கொடுக்க முடியாதவர்களை வற்புறுத்துவதும் கிடையாது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான அடுத்தகட்ட வளர்ச்சியாகக் கல்வியைப் பற்றி யோசித்து வருகிறேன்'' என்றார் மானு.


டிரெண்டிங் @ விகடன்