ரத்தம் ஏற்றும்போது பக்கவிளைவுகள் ஏற்படுமா? ஓர் மருத்துவ அலசல் | What are the side effects of having a blood transfusion?

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (02/01/2019)

கடைசி தொடர்பு:18:47 (02/01/2019)

ரத்தம் ஏற்றும்போது பக்கவிளைவுகள் ஏற்படுமா? ஓர் மருத்துவ அலசல்

அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் ரத்தத்தைத் தானமாக வழங்குவோரிடமும், தானமாகப் பெறுவோரிடமும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது `ரத்தப் பரிமாற்றம்' குறித்து தமிழகம் முழுவதும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

ரத்தம் ஏற்றும்போது பக்கவிளைவுகள் ஏற்படுமா? ஓர் மருத்துவ அலசல்

சாத்தூர் மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதையடுத்து சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிக்குக் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனக்கு ஹெச்.ஐ.வி கிருமி உள்ள ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் தெரிவித்தார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதை மறுத்துள்ளது. இதேபோல, கடந்த 2014-ம் ஆண்டு சேலம் மேச்சூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் அங்குள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களில் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 

இதுபோன்ற அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் ரத்தத்தைத் தானமாக வழங்குவோரிடமும், தானமாகப் பெறுவோரிடமும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது, `ரத்தப் பரிமாற்றம்' குறித்து தமிழகம் முழுவதும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றிக்கொள்வோர் மத்தியில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரத்ததானம்

ரத்தம் செலுத்தப்பட்டதால், ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாகப் புகார் அளித்த பெண் ஒருவர் தனக்கு ரத்தம் ஏற்றும்போது தொற்று இருந்ததால் தோலில் தடிப்புகள் வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு சில நாள்களுக்குப் பிறகு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததில், ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஹெச்.ஐ.வி நோய்த் தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்டால் உடனடி பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ரத்த வங்கியின் முன்னாள் இயக்குநர் டாக்டர் செல்வராஜனிடம் கேட்டோம்.

``ரத்தப் பரிமாற்றம்... நவீன மருத்துவம் நமக்குக் கொடுத்த கொடை. இன்றைக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையே பொதுநல மருத்துவர் செல்வராஜன்சாத்தியமாகியுள்ளது. ஆனாலும் ரத்தம் செலுத்தும்போது சிறிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படலாம். அது ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கேற்ப பாதிப்புகளை ஏற்படுத்தும். உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையுடன் ஒப்பிடும்போது, ரத்தம் செலுத்துவது என்பது நம் உடலில் சாதாரணமாக குளூக்கோஸ் ஏற்றுவதுபோலத்தான். 

ஒரேவகை ரத்தம் இல்லாமல் மாற்றுவகை ரத்தம் செலுத்தினால் மட்டுமே உடனடியாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ரத்த வகையைக் கண்டறிந்து முறையான மருத்துவ நடைமுறையைப் பின்பற்றி ஒருவருக்கு ரத்தம் செலுத்துவது பாதுகாப்பான ஒன்றே. எனவே, ரத்தம் ஏற்றிக்கொள்வதால் பக்கவிளைவுகள் வரும் என்று அச்சப்பட வேண்டாம். ஒரு சிலருக்கு சிறிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படலாம். குறிப்பாகக் காய்ச்சல், குளிர்நடுக்கம், தோலில் மாற்றம், மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். இவை தற்காலிகமாக ஏற்படக்கூடியதுதான் என்றாலும், அரிதாக மூச்சுத்திணறல் ஏற்படும். 

ஒவ்வாமைப் பிரச்னை இருப்பவர்களுக்கு ரத்தம் ஏற்றும்போது முதல் அரைமணிநேரம் வரை மருத்துவப் பணியாளர்கள் உடனிருக்க வேண்டும். அப்போது அந்தப் பணியாளர்கள் கவனித்தாலே எல்லாம் தெரிந்துவிடும். அந்தப் பிரச்னைகளை மருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சை மூலம் உடனடியாகச் சரிசெய்துவிடலாம். எனவே தற்காலிகமாக ஏற்படும் சிறிய பக்க விளைவுகளுக்காக ரத்தம் செலுத்த பயப்படத் தேவையில்லை. மலேரியா கிருமிகள் உள்ள ரத்தம் செலுத்தப்பட்டால், அதன் பாதிப்புகள் சிலருக்கு உடனடியாக பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். மற்றபடி ஹெச்.ஐ.வி, பால்வினை நோய்கள், ஹெபடைட்டிஸ் போன்ற ரத்தம் மூலம் பரவும் கிருமிகள் உள்ள ரத்தம் செலுத்தப்பட்டால் உடனடியாக பாதிப்புகள் ஏற்படாது. நோய் மற்றும் உடலின் தன்மைக்கேற்ப கிருமிகள் உடலில் பெருகி பாதிப்பை ஏற்படுத்த சில நாள்களாகும்" என்கிறார். 

ரத்ததானம்

அரசு மருத்துவமனைகளில் ஹெச்.ஐ.வி பாதிப்புகளைக் கண்டறியும் பரிசோதனைகள் உள்ளனவா, ரத்தப் பரிமாற்றத்தால் எழும் இதுபோன்ற புகார்கள்மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரி செந்திராஜ்செந்தில்ராஜிடம் கேட்டோம்.

``சாத்தூரில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டமானது; அது மருத்துவ உபகரணங்களால் நிகழ்ந்தல்ல. ஊழியர்களின் அலட்சியத்தால் நடந்திருக்கவே வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், அதுகுறித்த விசாரணை முடிந்த பிறகே எந்த இடத்தில் பிரச்னை ஏற்பட்டது என்பதைக் கூறமுடியும். அதேநேரத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மற்றவர்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அனைத்து ஊழியர்களையும் எச்சரித்துள்ளோம். மேலும் முதற்கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ரத்தம் மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதையடுத்து மற்ற மாவட்டங்களிலும் மறு பரிசோதனை செய்யப்படும்.

தமிழ்நாட்டில் 89 அரசு ரத்த வங்கிகளும், 197 தனியார் ரத்த வங்கிகளும் இருக்கின்றன. அரசு ரத்த வங்கிகளில் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 29 இடங்களில் ரத்த அணுக்கள், ஹீமோகுளோபின், பிளாஸ்மா உள்ளிட்டவற்றைப் பிரித்து தேவைக்கேற்ப தனித்தனியாக  ஏற்றும் அதிநவீன வசதியும் இருக்கிறது. ரத்தம் தானமாகப் பெறப்பட்டவுடன் ஹெச்.ஐ.வி, பால்வினை நோய்கள், மலேரியா, ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி ஆகிய ஐந்துவிதமான பரிசோதனைகள் செய்யப்படும். அதன்பிறகே ரத்தம் இன்னொருவருக்குச் செலுத்தப்படும். 

பரிசோதனை

முகாம்களிலிருந்து பெறப்படும் ரத்தம் வங்கிக்கு வந்து சேர்ந்ததும், பரிசோதனைகள் செய்துதான் சேமித்து வைக்கிறோம். ஹெச்.ஐ.வி பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறியும் 4-வது ஜெனரேஷன் எலைசா பரிசோதனைகள் (4th Generation Elisa Test) மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பரிசோதனை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பால் (National AIDS Control Organization -Naco) அங்கீகரிக்கப்பட்டு நாடுமுழுவதும் பின்பற்றப்படும் ஒரு பரிசோதனையாகும். அரசு ரத்த வங்கிகள் மட்டுமல்லாமல் தனியார் ரத்த வங்கிகளும் இந்தப் பரிசோதனை முறையைத்தான் பின்பற்றுகின்றன. எனவே ரத்தத்தை தானம் செய்வோரும் பெற்றுக்கொள்வோரும் தயக்கம் காட்டவோ, அச்சப்படவோ தேவையில்லை.

தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் ரத்த தானம் செய்கிறார்கள் என்றால், அதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 4 லட்சம் பேர் தானம் செய்கிறார்கள். தனியார் ரத்த வங்கிகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளிலும் ரத்தம் கொடுக்கிறார்கள். இதிலிருந்து ரத்தப்பொருள்களை பிரித்து தனித்தனியாகக் கொடுக்கலாம். இதனால் ஒருவரிடமிருந்து பெறப்படும் ரத்தம் மூன்று பேருக்கு கூடப் பயன் பெறமுடியும். அதனடிப்படையில் 12 லட்சம் பேர் பயன்பெறலாம். 

பிரசவத்தின்போது ரத்தசோகை இருந்தால் அது தாய், சேய் ஆகிய இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். பச்சிளம்குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பிலிருந்து காப்பாற்றவும் விபத்து, அறுவைசிகிச்சை உள்ளிட்ட பல அவசர நேரங்களிலும் ரத்தம் ஏற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டதால் எல்லோருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு வரலாம் என்று பயப்படத் தேவையில்லை" என்கிறார் செந்தில்ராஜ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்