`அதிக ஆன்டிபயாடிக் மருந்துகள் கல்லீரலைப் பாதிக்கும்'- எச்சரிக்கும் மருத்துவர்கள் | More usage of Antibiotics causes liver damage

வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (03/01/2019)

கடைசி தொடர்பு:11:12 (03/01/2019)

`அதிக ஆன்டிபயாடிக் மருந்துகள் கல்லீரலைப் பாதிக்கும்'- எச்சரிக்கும் மருத்துவர்கள்

உலகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

`அதிக ஆன்டிபயாடிக் மருந்துகள் கல்லீரலைப் பாதிக்கும்'- எச்சரிக்கும் மருத்துவர்கள்

ளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், சிலர் தாங்களாகவே மருந்துக் கடைகளுக்குச் சென்று `ஆன்டிபயாடிக்' மருந்துகள் வாங்கிச் சாப்பிடுவார்கள். சிலர் மருத்துவரிடமே, `டாக்டர், ஆன்டிபயாடிக் ஒண்ணு கொடுத்திருங்க' என்று கேட்பதுண்டு. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் `ஆன்டிபயாடிக்' பற்றிய விழிப்புஉணர்வு அதிகரித்திருக்கிறது.

மருந்துகள்


உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது அதைப் போக்க இதுபோன்ற மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போதோ அல்லது பாக்டீரியா தொற்று அதிகரிக்கும்போதோ `ஆன்டிபயாடிக்' தேவைப்படும். ஆனால், தொடர்ச்சியாக அதிக அளவில் இந்த மருந்துகள் எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள பாக்டீரியாக்கள் அதை எதிர்க்கப் பழகிவிடும். எனவே, வழக்கமாகச் சாப்பிடும் `ஆன்டிபயாடிக்' மருந்துகள் பயனளிக்காமல் போய்விடும். இதைத்தான் 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ஸ்' என்கிறோம்.


அமெரிக்காவிலிருந்து வெளிவரும் `வால் ஸ்ட்ரீட்' இதழ் நடத்திய ஆய்வில், 2050-ம் ஆண்டுக்குள் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பைவிட `ஆன்டிபயாடிக் ரெஸிஸ்டென்ஸ்' குறைவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.  

மருந்துகள்


2000 முதல் 2015-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளில் `ஆன்டிபயாடிக்' மருந்துகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன. உலகளவில் `ஆன்டிபயாடிக்' மருந்துகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 


`ஆன்டிபயாடிக் மருந்துகள் குறித்த விழிப்புஉணர்வு இல்லாமல், அதன் பயன்பாட்டை அதிகரித்துக்கொண்டே இருக்கிறோம். இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் சூழலில், கல்லீரலையும் அவை பாதிக்கின்றன' என்று சொல்லும் மருத்துவர்கள், `ஆன்டிபயாடிக் மருந்துகளின் தொடர் பயன்பாடு கல்லீரலைப் பாதிப்பதுடன் அதைச் செயலிழக்கவும் செய்யலாம்' என்று எச்சரிக்கின்றனர். 

மருந்துகள்


`ஆன்டிபயாடிக்' மருந்துகள் பற்றிய சந்தேகங்களைப் பொதுநல மருத்துவர் அருணாசலத்தின் முன்வைத்தோம். விரிவாகப் பேசினார்.
``நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், சில நேரம் வேலை செய்யாமல்போகலாம். நாம் அதைப் பெரிதுபடுத்தாமல் அதிக `டோசேஜ்' (Dosage) மாத்திரையையோ  வேறு மாத்திரையையோ எடுத்துக்கொண்டு, அதை மறந்திருப்போம்.

டாக்டர் அருணாசலம்மேலும் தொடர்ந்து, குறிப்பிட்ட `ஆன்டிபயாடிக்' மருந்துகளை எடுப்பதால் உடலில் உள்ள பாக்டீரியா அதனை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றுவிடும். மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான அளவு எடுத்துக் கொண்டால் பிரச்னை எதுவும் ஏற்படாது.


நோயாளியின் உடலுக்கு ஏற்றவாறு மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதால் `ஆன்டிபயாடிக்' மருந்துகளால் பாதிப்புகள் ஏற்படாது. மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மருந்துக்கடைகளில் சுயமாக மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டால் எதிர்மறை விளைவுகளே ஏற்படும்.  மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைத்தால், குறிப்பிட்ட அளவு குறிப்பிட்ட நாள்கள் வரை தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, மருத்துவர் 5 நாள்களுக்கு `ஆன்டிபயாட்டிக்' எடுத்துக் கொள்ளச் சொன்னால், உடல்நிலை தேறி விட்டது என்று நினைத்து மூன்று நாள்களில் அந்த மருந்தை நிறுத்திவிடக் கூடாது. அது நம் உடலில் பாதிப்புகள் ஏற்படக் காரணமாகிறது. 


மருந்துகளின் பயன்பாடு என்பது வீட்டில் உள்ள அரிவாள்மனை போன்றது. அந்த வீட்டுப் பெண்ணுக்குத்தான் அதைப் பயன்படுத்தத் தெரியும். வேறு யாராவது பயன்படுத்த முயன்றால்,  ரத்தக்காயத்தை ஏற்படுத்திவிடும். மருந்துகளுக்கும் இதே சித்தாந்தம்தான். அதன் பயன்பாடு குறித்த அறிந்த மருத்துவர்கள்தாம் அவற்றைப் பரிந்துரைக்க வேண்டும். வேறு யாராவது முயன்றால் விபரீதமாகிவிடும்.


`ஆன்டிபயாடிக்' மருந்துகளின் அதிக பயன்பாட்டால் கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கல்லீரல் நோய்களோ அல்லது கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகளோ இருப்பவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தொடர்ந்து அல்லது அதிக அளவில் எடுத்துக்கொண்டால் அவர்களுக்குக் கல்லீரல் செயலிழக்க வாய்ப்புகள் அதிகம்.

 

மருந்துகள்


ஆன்டிபயாடிக் ரெசிஸ்டென்ஸ் ஏற்படுவதே பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போக முக்கியக் காரணமாக இருக்கிறது. எனவே, ஆன்டிபயாடிக்கைச் சரியாகப் பயன்படுத்துவதே இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க ஒரே வழி. `ஆன்டிபயாடிக்' மருந்துகள் பற்றிய கண்மூடித்தனமான பயத்தைக் காட்டிலும் அது தொடர்பான  விழிப்புஉணர்வே மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் தேவையானது'' என்கிறார் அவர்.
எந்த விதிகளையும் சரியாகப் பின்பற்றும்போது எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை. விதிகளை மீறுவதுதான் பிரச்னைக்கான தொடக்கப்புள்ளியாக அமையும். இது `ஆன்டிபயாடிக்' மருந்துகளுக்கும் பொருந்தும்.


டிரெண்டிங் @ விகடன்