இந்தியாவில் முதல்முறையாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மார்பக சிகிச்சை மையம்! | Breast treatment center opend in Kilpauk Medical College

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (04/01/2019)

கடைசி தொடர்பு:04:00 (04/01/2019)

இந்தியாவில் முதல்முறையாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மார்பக சிகிச்சை மையம்!

ந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மார்பக சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் நுண்கதிர் சிகிச்சைப் பிரிவின் கீழ், ரூ.4.50 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில், அல்ட்ரா சவுண்டு பரிசோதனை, முப்பரிமாண டிஜிட்டல் மாமோகிராம் கருவிகள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. இதுதவிர, மார்பகப் பரிசோதனைக்காக எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதியும் இங்கு உள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் நுண்கதிர் துறைத் தலைவர் டாக்டர்.ஜெ.தேவிமீனாளிடம் பேசினோம்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி

"மத்திய அரசின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 40 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. 54 வயதுக்கு மேற்பட்டவர்களும் அவர்களின் உடல்நிலையைப் பொறுத்து பரிசோதனை செய்யவேண்டிய அவசியம் ஏற்படலாம். குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி 30 வயதிலிருந்தே தங்கள் மார்பகங்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆனால், இந்தியாவில் பெண்களின் மார்பகத்துக்கென பிரத்தியேக சிகிச்சை மையங்கள் இல்லை. சென்னையில், பிரத்தியேக மையத்தைத் தொடங்குவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தன. அதற்காக, சோதனை முறையாக சில நோயாளிகளுக்குப் பரிசோதனைகளும் சிகிச்சையும் அளிக்கப்பட்டுவந்தது. தற்போது, முறையாக இந்த மையம் செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த மையத்தில், மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை மட்டுமின்றி, மார்பகத்தில் வரும் நீர்க்கட்டிகள், நார்த் திசுக்கட்டிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். மேலும், கட்டிகளில் இருந்து திசுக்களைச் சேகரித்து, ஆய்வுசெய்வது, கட்டிகளில் இருக்கும் நுண்படிமங்களை அகற்றுவது ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும்.

மார்பகப் பரிசோதனை மையம்

மார்பகப் பரிசோதனைக்காக இந்த மையத்துக்கு வரும் 40 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு, முதலில் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் மாறுபாடுகள் தெரிந்தால், மாமோகிராம் பரிசோதனை செய்யப்படும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேரடியாக மாமோகிராம் பரிசோதனை செய்யப்படும். முப்பரிமாண டிஜிட்டல் மாமோகிராம் கருவிமூலம் 0.5 மில்லி மீட்டர் உள்ள சிறிய புற்றுநோய்க் கட்டியையும் கண்டறிய முடியும். சிறிய அளவில் இருக்கும்போதே கண்டறியப்படுவதால், புற்றுநோய் முழுமையாகப் பரவி மார்பகத்தை அகற்றவேண்டிய நிலை ஏற்படாமல் தடுக்க முடியும். சிறிய அளவில் காணப்படும் கட்டியை அகற்றிவிட்டு, நோயாளிகள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். மார்பகத்தில் வந்துள்ளது சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய்க் கட்டியா என்பதையும் அல்ட்ராசவுண்டு பரிசோதனையில் கண்டறிய முடியும். 

மார்பகப் பரிசோதனை மையம்

ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிதல், மார்பகங்களை நோயின்றிப் பாதுகாத்தல் என்பதே இந்த மையத்தின் நோக்கம். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த மையத்தில் பரிசோதனைகளை இலவசமாகச் செய்துகொள்ளலாம். காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாதவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் இங்கு பரிசோதனைகள் செய்யப்படும். பரிசோதனையில் ஏதேனும் பாதிப்புகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் மருத்துவ சிகிச்சை, அறுவைசிகிச்சை செய்யப்படும்" என்றார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தி, இந்த மையத்தைத் திறந்துவைத்தார். சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அமைச்சர்கள் வி.சரோஜா, வளர்மதி, ராஜலெட்சுமி, நிலோபர் கபில் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.