சென்னை கல்லூரி மாணவர்கள் ரொம்ப 'வீக்' - திடுக்கிடும் ஆய்வு முடிவு! | Chennai college students are weak

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (04/01/2019)

கடைசி தொடர்பு:19:15 (04/01/2019)

சென்னை கல்லூரி மாணவர்கள் ரொம்ப 'வீக்' - திடுக்கிடும் ஆய்வு முடிவு!

கணக்கெடுப்பில் பங்கேற்ற மாணவர்களில் 28 சதவிகிதம் பேர் உடல்பருமனாகவும், 28.2 சதவிகிதம் பேர் எடை குறைவாகவும் இருந்தனர். மாணவிகளில் 40 சதவிகிதம் பேர் குறைவான எடையிலும், 14 சதவிகிதம் பேர் உடல்பருமனாகவும் இருந்தனர்.

சென்னைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 45 சதவிகிதம் பேர் மட்டுமே தங்கள் வயதிற்கேற்ற உடல் எடையில் இருக்கிறார்கள் என்கிற  திடுக்கிடும் ஆய்வு முடிவு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

மாணவர்கள்

'சேப்பியன் சுகாதார அறக்கட்டளை' நடத்திய ஆய்வில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. சென்னைக் கல்லூரிகளில் படிக்கும் 18 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்ட 2000 மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் 760 பேர் பெண்கள்,1,240 பேர் ஆண்கள். 

உப்பு, சர்க்கரையின் அதிக பயன்பாடு உயர் ரத்தஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற விழிப்புஉணர்வு மாணவர்களுக்கு இருக்கிறதா என்பதன் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. இது தொடர்பான கேள்விகள் மாணவர்களிடம் கொடுக்கப்பட்டு, மாணவர்கள் தெரிவித்த பதிலின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, 45 சதவிகித மாணவர்கள் மட்டுமே சரியான உடல் நிறைக் குறியீட்டு எண்ணை (பிஎம்ஐ) பராமரித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மாணவர்கள்

மேலும்,  கணக்கெடுப்பில் பங்கேற்ற மாணவர்களில் 28 சதவிகிதம் பேர் உடல்பருமனாகவும், 28.2 சதவிகிதம் பேர் எடை குறைவாகவும் இருந்தனர். மாணவிகளில் 40 சதவிகிதம் பேர் குறைவான எடையிலும், 14 சதவிகிதம் பேர் உடல்பருமனாகவும் இருந்தனர். 

ஆய்வில் பங்கேற்ற 54 சதவிகிதம் மாணவர்கள், உப்பு உட்கொள்வதற்கும் ரத்தஅழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்திருந்தனர். 40 சதவிகிதம் பேர் ரத்தஅழுத்தத்திற்கும் சக்கரைக்கும் தொடர்பு இருப்பதை அறிந்திருந்தனர். 23.4 சதவிகிதம் பேர் மட்டுமே உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள உப்பு உட்கொள்ளும் அளவை அறிந்திருந்தனர்.