வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (05/01/2019)

கடைசி தொடர்பு:12:51 (05/01/2019)

இடுப்புப் பகுதியில் `ஷேப்வியர்' அணிந்தால் `நரம்புச் சுருள் நோய்' வரலாம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்

உடுத்தும் உடைகளும், ஆபரணங்களும் தங்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றனவா என்று நெருக்கமானவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். மேலும், தாங்கள் அணியும் உடைகள் கச்சிதமாகத் தெரியவேண்டும் என்பதற்காகச் சாப்பிடாமல் வயிற்றைக் காலியாக வைத்திருப்பவர்களும்கூட உண்டு...

இடுப்புப் பகுதியில் `ஷேப்வியர்' அணிந்தால் `நரம்புச் சுருள் நோய்'  வரலாம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்

ச்சிதமாக உடை அணியவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பே. ஆனாலும், உடை விஷயத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே  அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள். திருமண நிகழ்ச்சிகள், பண்டிகை நாள்கள் என்றால் ஒருநாளைக்கு மூன்று, நான்கு என உடைகளை மாற்றிவிடுவார்கள். அப்படி உடுத்தும் உடைகளும், ஆபரணங்களும் தங்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றனவா என்று நெருக்கமானவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். மேலும், தாங்கள் அணியும் உடைகள் கச்சிதமாகத் தெரியவேண்டும் என்பதற்காகச் சாப்பிடாமல் வயிற்றைக் காலியாக வைத்திருப்பவர்களும்கூட உண்டு. இவை ஒருபுறமிருக்க உடைகளை அணியும்போது உடல் வடிவம் கச்சிதமாகத் தெரியவேண்டுமென்பதற்காக `ஷேப்வியர்' என்ற உள்ளாடையை அணிந்துகொண்டு, அதற்கு மேல் விருப்பமான உடைகளை அணிகின்றனர்.

`ஷேப்வியர்' உள்ளாடைகள், சதையை இறுக்கமாக உள்ளடக்கி பெண்கள் விரும்பும் தோற்றத்தைக் கொடுக்கும். இதை அணிந்து கொள்வதால் அவர்களது உடல் அமைப்பு `மணல் கடிகாரம் ' (Hourglass) போன்ற தோற்றத்தைத் தரும். 

`ஷேப்வியர்' உள்ளாடைகள் வயிற்றுப் பகுதிக்கு மட்டுமல்லாமல் முழு உடல்,  இடுப்புப் பகுதி மற்றும் இடுப்புக்குக் கீழே உள்ள பகுதிகளுக்கெனப் பல்வேறு விதங்களில் கிடைக்கின்றன. முழு உடலுக்கும் தேவைப்படாதவர்கள், தேவைப்பட்ட பாகங்களுக்கு மட்டும் வாங்கி அணிந்து கொள்ளலாம். இந்த உடைகளை இளம்பெண்கள் முதல் திருமணமானவர்கள் வரை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த உடைகள் அதிக இறுக்கமாக இருப்பதால், அவை உடல்நலம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் அவற்றை அணிவதைத் தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

`ஷேப்வியர்' அணிவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பொதுநல மருத்துவர் டாக்டர் சாதனா தவப்பழனியிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.

``ஷேப்வியர்'  அணிவதால் வயிற்றுப் பகுதி இறுக்கமாகி உண்ணும் உணவு வயிற்றிலிருந்து சிறுகுடல், பெருங்குடல் பகுதியைச் சென்றடைவது தடைபடும். இதனால் செரிமான பிரச்னை, வயிற்று உப்புசம், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், ஜீரணசக்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். 

ஷேப்வியர்

முழு உடலுக்குமான `ஷேப்வியர்' அணிவதால் நெஞ்சுப்பகுதி அழுத்தப்பட்டு நுரையீரல் சரிவர இயங்காமல் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படும். மேலும் இந்த உடைகளை அணிவதால் உள்உறுப்புகள் அனைத்தும் அழுத்தப்படும். இந்த வகை உடைகள் சருமத்துக்கு ஏற்றவாறுதான் தயாரிக்கப்படுகின்றன என்று தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்தாலும், அவை காற்றோட்டத்தைத் தடுக்கின்றன.

அதன்விளைவு உடலில் சுரக்கும் வியர்வை அப்படியே தேங்கி நாற்றம், அரிப்பு, தோல் தொடர்பான ஒவ்வாமைகள் ஏற்படும். வியர்வை தேங்குவதால் பாக்டீரியாக்களின் கூடாரமாக உடல் மாறிவிடும். இடுப்புப் பகுதி மற்றும் இடுப்புக்குக் கீழ் பகுதியில் அணிவதால் `நரம்புச் சுருள் நோய்' (Varicose Vein) உள்ளிட்ட நரம்பு சம்பந்தமான நோய்கள் வருவதோடு, தோலில் கூச்சம், உணர்வின்மை ஆகியவையும் ஏற்படக்கூடும்.

`ஷேப்வியர்' உடுத்தும் பெண்களால் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்லமுடியாது. காரணம் உள்ளாடைகளின்மேல் `ஷேப்வியர்' அணிந்து அதற்குமேல் அலங்கார உடைகளை அணிந்துவிடுகின்றனர். இதுபோன்ற நிலையில் கழிவறையைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அது மிகவும் கடினமாக சூழல். அதனால் நீண்டநேரம் இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். விளைவு, சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட வாய்ப்புஉள்ளது. இறுக்கமான உடைகளை அதிகநேரம் அணிந்தால் ரத்தஓட்டம் பாதிக்கப்பட்டு, சில பகுதிகளில் ரத்த உறைவு (Blood Clot) ஏற்படும்.

ஷேப்வியர்

`ஷேப்வியர்' அணிவதால் உடல் எடை குறைந்து உடல் கச்சிதமாக இருப்பதுபோன்று தெரிந்தாலும், உண்மை அதுவல்ல. நிரந்தரமாக உடல் கச்சிதமான அமைப்பைப் பெற ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் குறைக்க வேண்டும். குழந்தை பெற்றதும் இடுப்புப் பகுதியில் சதை போட்டவர்கள், நிரந்தர உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிருமுறை குறைந்த காலநேரங்களில் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இளம்பெண்கள் `ஷேப்வியர்' அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

பொதுவாகவே இறுக்கமான உடைகளை உடுத்திவிட்டுக் கழற்றும்போது உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று பார்க்க வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் `ஷேப்வியர்' அணிவதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்" என்கிறார் சாதனா.

`ஷேப்வியர்' போன்ற உடைகளை அணிந்து பிறர் பார்வைக்கு அழகாகத் தெரியவேண்டும் என நினைப்பவர்கள், அதன் பின்விளைவுகள் பற்றிச் சிந்திக்கத் தவறுகிறார்கள். வெளித்தோற்றத்தைக் காட்டிலும் உடல் ஆரோக்கியமே முக்கியம் என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்