பெண்களை அதிகம் பாதிக்கும் `ஃப்ரோஷன் ஷோல்டர்'... தடுப்பது எப்படி? | Tips to get rid off frozen shoulder

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (06/01/2019)

கடைசி தொடர்பு:14:32 (06/01/2019)

பெண்களை அதிகம் பாதிக்கும் `ஃப்ரோஷன் ஷோல்டர்'... தடுப்பது எப்படி?

தோள்பட்டையில் அடிபட்ட இடத்தில் காலப்போக்கில் எவ்வித அசைவுமின்றி இருக்கும். இதைத்தான் `ஃப்ரோசன் ஷோல்டர்' (Frozen shoulder) என்கிறோம். முக்கியமாக நடுத்தர வயதில் உள்ளவர்களை (35 வயதிலிருந்து 40-க்குள்) இது அதிகம் பாதிக்கும்.

பெண்களை அதிகம் பாதிக்கும் `ஃப்ரோஷன் ஷோல்டர்'... தடுப்பது எப்படி?

தோள்பட்டையில் அடிபடுவதால் ஏற்படும் `ஃப்ரோஷன் ஷோல்டர்' என்ற பாதிப்பை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஆண்டுக்கணக்கில் அந்த வலியால் அவதிப்பட வேண்டியிருக்கும். தோள்பட்டையில் ஏற்படும் அத்தகைய பாதிப்புக்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்துப் பேசுகிறார் எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர் அருண் கண்ணன்.

ஃப்ரோஷன் ஷோல்டர்

``தோள்பட்டையில் ஏதோவொரு சூழலில் லேசான அடி ஏற்பட்டிருக்கும். அதை நாம் கவனிக்காமல் வழக்கம்போல் நம் பணிகளைச் செய்துகொண்டிருப்போம். லேசாக  அடிபட்டாலும்கூட தோள்பட்டையின் இரண்டு எலும்புகளையும் இணைக்கும் கேப்ஸ்யூல் என்ற ஜவ்வு இறுகிப்போக வாய்ப்பு உள்ளது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. தோள்பட்டையில் அடிபட்ட இடத்தில் காலப்போக்கில் எவ்வித அசைவுமின்றி இருக்கும். இதைத்தான் `ஃப்ரோஷன் ஷோல்டர்' (Frozen shoulder) என்கிறோம். முக்கியமாக நடுத்தர வயதில் உள்ளவர்களை (35 வயதிலிருந்து 40-க்குள்) இது அதிகம் பாதிக்கும். அதிலும் குறிப்பாக பெண்களுக்குத்தான் அதிகம் ஏற்படுகிறது.

மருத்துவம்

தோள்பட்டையில் அடிபடும்போது முதலில் லேசாக வலி எடுக்கும். நாளடைவில் வலி படிப்படியாக அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமிருக்கும். இந்த பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக முதலில் முதுகுக்குப் பின்னால் கையை எடுத்துச் செல்ல சிரமமாக இருக்கும். அதன்பிறகு தலைக்குப் பின்னால் கையைக் கொண்டு செல்லச் சிரமப்பட வேண்டியிருக்கும். நாளடைவில் ஆடை அணியவும், தலை வாரவும் சிரமப்படுவார்கள். இதனால், இரவில் தோள்பட்டையில் வலி அதிகரிக்கும். எந்தப் பக்கம் பாதிப்பு இருக்கிறதோ அந்தப் பக்கம் திரும்பிப் படுத்தால் வலி இன்னும் அதிகரிக்கும். இவற்றை `ஃப்ரோஷன் ஷோல்டர்' பாதிப்பின் அறிகுறிகளாகக் குறிப்பிடலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

உடற்பயிற்சி

தோள்பட்டையில் சில அசைவுத்தன்மை இல்லாததைக் கொண்டும், பரிசோதனைகள் மூலமாகவும் ஃப்ரோசன் ஷோல்டர் பாதிப்பைக் கண்டறியலாம். மேலும் அப்போது தோள்பட்டையில் எக்ஸ்ரே எடுத்து, வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்றும் கண்டறியப்படும். சிலருக்குத் தோள்பட்டையில் ஏற்படும் வலி அதிகரித்துக்கொண்டே செல்லும். அது மாதக்கணக்கில் சில நேரங்களில் ஒரு வருடம் தாண்டியும்கூட நீடிக்கும். இது சரிசெய்யக்கூடிய பிரச்னை என்பதால், பயப்படத் தேவையில்லை. பிசியோதெரபி, உடற்பயிற்சி மூலம் சரி செய்துவிடலாம். பிசியோதெரபியில் மெழுகு ஒத்தடம் மற்றும் `ஐபிடி'  (Interferential therapy) என்னும் சிகிச்சை முறை உள்ளது. அதன்பிறகு உடற்பயிற்சி அளிக்கப்படும். சுமார் 15 நாள்களுக்கு பிசியோதெரபி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். பிறகு, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும். மருத்துவர் அருண் கண்ணன்

ஃப்ரோஷன் ஷோல்டர் பாதிப்பு இரண்டு வாரத்தில் சரியாகும் பிரச்னை இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 6 முதல் 8 வாரம் வரை தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபட்டால் சுமார் 80 சதவிகிதம் பாதிப்பிலிருந்து விடுபடலாம். முழுமையாகக் குணமாக சிலருக்கு 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம். 10-ல் இருந்து 15 சதவிகிதம் பேருக்குப் பிசியோதெரபி சிகிச்சை பயனளிக்காது. எனவே, அவர்களுக்கு, ஸ்டீராய்டு இன்ஜெக்ஷனை தோள்பட்டையில் செலுத்துவோம். இது இன்ஃப்ளமேஷனை குறைப்பதுடன் வலியையும் குறைத்துவிடும். ஆனால், இவர்களும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சிகிச்சை முறைகளிலேயே 95 சதவிகிதம் பேருக்கு பாதிப்புகள் சரியாகிவிடும்.

மருத்துவர்

பிசியோதெரபி, ஸ்டீராய்டு இன்ஜெக்ஷன் மூலமும் குணமாகவில்லை என்றால், அவர்களுக்கு `மேனிபுலேஷன் சிகிச்சை'  (Manipulation treatment) அளிப்போம். அவர்களுக்கு 3 முதல்  ஐந்து நிமிடங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து, தோள்பட்டை அசைவுக்குப் பயிற்சி அளிப்போம். அப்படிச் செய்யும்போது தோள்பட்டையிலுள்ள இறுக்கம் தளர ஆரம்பிக்கும். அதிலும் சரியாகாத ஒரு சதவிகிதம் பேருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். மேற்கண்ட நான்கு சிகிச்சை முறைகளால் ஃப்ரோஷன் ஷோல்டர் பாதிப்பை சரி செய்ய முடியும்” என்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்