வீட்டில் பொருள்களைக் குவித்துவைத்திருக்கிறீர்களா?- ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன? | cluttered home must be the reason for depression

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (07/01/2019)

கடைசி தொடர்பு:13:40 (07/01/2019)

வீட்டில் பொருள்களைக் குவித்துவைத்திருக்கிறீர்களா?- ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

வீடுகளில் பொருள்களைக் குவித்து வைத்திருக்கிறீர்களா. அரதப் பழசான பொருள்களைக்கூட தூக்கியெறிய மனமில்லாமல் சேர்த்து வைத்துக்கொண்டே இருக்கும் பழக்கம் இருக்கிறதா... வீட்டிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ பொருள்கள் அங்குமிங்கும் நிறைந்துகிடப்பது, உங்களை மனஅழுத்தத்துக்கு ஆளாக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

பொருள்களை குவித்து வைத்திருக்கிறீர்களா

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள டிபால் பல்கலைக்கழக உளவியல் துறையில் நடைபெற்ற ஆராய்ச்சியில் இது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 20, 30 மற்றும் 50 வயதுக்குட்பவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.  ஆய்வின் முடிவில், ஒரு செயலை பிறகு செய்துகொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதற்கும், வசிக்கும் இடத்தில் பொருள்களை அங்கும் இங்கும் குவித்துவைப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. 

நாம் சேர்த்துவைத்திருக்கும் பொருள்களை ஆராய்ந்து, அவற்றில் தேவையானது தேவையற்றது என்று பிரித்து, தேவையற்றதை அப்புறப்படுத்தும் செயலை தள்ளிப்போடுகிறோம். இதனால், வீடுகளில் சேர்ந்துபோகும் பொருள்கள், உளவியல் ரீதியாக எதிர்மறைத் தாக்கங்களை மனதில் உருவாக்குகின்றன. கோர்டிசோல் எனப்படும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பையும் அதிகரிக்கிறதாம். குறிப்பாக, பெண்கள்தான் இதனால் பாதிக்கப்படுகின்றனர். 

குவித்து

ஒருவேளை, நீங்கள் எப்போதும் மனஅழுத்தத்துடனே காணப்படுவதற்கு, உங்களைச் சுற்றி சேர்த்து வைத்திருக்கும் பொருள்கள் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி, 'வீட்டில் சேர்த்துவைத்திருக்கும் பழைய பொருள்கள்மீது ஓர் இனம்புரியாத ஒட்டுதல் நமக்கு இருக்கும் என்ற சுவாரஸ்யத் தகவலையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  'தேவையற்றது, அதைத் தூக்கியெறிய வேண்டும்' என்று  நினைத்து ஒரு பொருளை கையால் எடுக்கும்போது, அந்தப் பொருள் கைகளில் பட்டதும் அதைத் தூக்கி எறிய மனமில்லாமல் போய்விடுமாம். இதுபோன்ற அனுபவம் நிச்சயம் எல்லாருக்கும் இருக்கும். இருந்தாலும், பழைய பொருள்களை அப்புறப்படுத்துவதுதான் உடல் ஆரோக்கியத்துக்கும்  மனநலத்துக்கும் நல்லது' என்கிறார்கள்.