வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (07/01/2019)

கடைசி தொடர்பு:17:20 (07/01/2019)

மக்களுக்கு ரெட் அலர்ட்! - கர்நாடகாவை அச்சுறுத்தும் குரங்குக் காய்ச்சல்

ர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக, குரங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. குரங்குக் காய்ச்சல் பாதிப்பு முதன்முதலில் கர்நாடக மாநிலத்தில் 1957-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. பறவைகள், உண்ணிகளிடம் இருந்து பரவும் ஒருவகை வைரஸ் மூலம் இந்தக் காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட குரங்குகளை கடிக்கும் பூச்சிகள் மூலமாக மனிதர்களுக்கு இந்தக் காய்ச்சல் பரவும். இந்தக் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். டெங்கு காய்ச்சல் வகையைச் சேர்ந்ததுதான் குரங்குக் காய்ச்சலும்.

குரங்கு காய்ச்சல்

இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரத்தில் 15 பேருக்குக் குரங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்தக் காய்ச்சல் குறித்து, அம்மாநிலச் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ``இதுவரை குரங்குக் காய்ச்சலால் சாகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, அப்பகுதியைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை வசிக்கும் மக்களுக்கு, தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்கிறன. கடந்த டிசம்பர் மாதம் முதலே சில இடங்களில் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்தப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு, ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. நோய்த்தடுப்புக்காக இரண்டு மருந்துகள், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடுதலாக ஒரு மருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 1,000 பேருக்குத் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கென, சாகர் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Fever

15 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த பிற மக்களிடமும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தேசிய பூச்சியியல் நோய்கள் கட்டுப்பாட்டுத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஷாஜன் ஷெட்டி இதுகுறித்து கூறும்போது, ``கடந்த சில நாள்களுக்கு முன், சில குரங்குகள் அப்பகுதியில் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்தோம். உடனடியாக அவற்றின் மீது `மலதியான்’ (malathion powder) என்ற மருந்து தெளித்து அனைத்து குரங்குகளையும் பாதுகாப்பாக அகற்றிவிட்டு, அங்கிருந்த மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்திருந்தோம். நோய்த் தடுப்புக்காக அதிகாரிகள் அனைவரும், தீவிரமாகச் செயலாற்றி வருகின்றனர். இறந்தவர்களில் மூன்று பேர் குரங்குக் காய்ச்சலால்தான் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒருவருடைய ரத்த மாதிரி கிடைக்காததால், இறப்புக்குக் காரணம் என்னவென கண்டறிய முடியவில்லை" எனக் கூறியுள்ளார். இதனால், கர்நாடக மாநிலத்தில் குரங்குக் காய்ச்சல் பீதி நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க