எதிலும் `பெர்ஃபெக்ஷனிஸ்ட்'டா நீங்கள்? மன அழுத்தம் ஏற்படுமாம் பாஸ்! | 5 Tips to Boost Your Mental Health

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (08/01/2019)

கடைசி தொடர்பு:11:07 (08/01/2019)

எதிலும் `பெர்ஃபெக்ஷனிஸ்ட்'டா நீங்கள்? மன அழுத்தம் ஏற்படுமாம் பாஸ்!

மனது உற்சாகமாக இருந்தால்தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஐந்து வழிமுறைகளை `ஃபோர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது. 

எதிலும் `பெர்ஃபெக்ஷனிஸ்ட்'டா நீங்கள்? மன அழுத்தம் ஏற்படுமாம் பாஸ்!

டல்நலம், மனநலம் என்பது இரண்டு எருதுகள் பூட்டிய வண்டி போன்றது. இரண்டும் இணைந்து ஒன்றாகப் பயணிக்க வேண்டும். ஒன்று சரியாக இல்லையென்றால் கூட வாழ்க்கை எனும் வண்டி சரியாக ஓடாது. ஆனால் உடல்நலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலத்துக்குக் கொடுக்க பலர் தவறுகிறோம். மனநல ஆரோக்கியம் என்பது குழந்தைகள், வளரிளம் பருவம், இளைஞர்கள், முதியோர் என அனைத்து வயதினருக்கும் அவசியமானது. மனது உற்சாகமாக இருந்தால்தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனநலத்தை மேம்படுத்துவதற்கான ஐந்து வழிமுறைகளை `ஃபோர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது. 

மனஅழுத்தம்

1. உங்களையே நேசியுங்கள் - கிடைத்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழாமல், உங்களிடம் நீங்களே கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.  மனதளவில் சோர்வடையும்போது நீங்கள் வெற்றி கண்ட தருணங்களையும், உங்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பவர்களையும் நினைத்துப் பாருங்கள். எல்லாரும் தவறுகளில் இருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். அதனால் அனைத்திலும் `பெர்ஃபெக் ஷனிஸ்ட்'டாக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அப்படி நினைத்துச் செயல்பட்டால் மனஅழுத்தம் ஏற்பட்டு மற்ற வேலைகளையும் அது பாதித்துவிடும். இதனால் மனச் சோர்வு, அதிக அளவில் உணவு எடுத்துக்கொள்ளுதல் (Eating disorders) பிரச்னை ஏற்படும். இதற்குத் தீர்வாக நிஜங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடையக்கூடிய இலக்குகளை மட்டும் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். எத்தனை பிரச்னைகள், பணிச்சுமைகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குங்கள். சிறிய விடுப்பு எடுத்துக்கொண்டு உங்களுக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபடுங்கள். மனரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும் உங்களைப் பாதிக்கும் நபர்களை விட்டுச் சற்று தள்ளியே இருங்கள்.

Eating Disorder

2. தியானம் - தினமும் தியானம் செய்வதால் மனதிற்கும், உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும். தியானம் செய்வது மனஅழுத்தத்தைப் போக்குவதோடு கவனத்தை ஒருங்கிணைத்தல், நல்ல மனநிலை, நினைவாற்றலை அதிகரித்தல் மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றை அளிக்கிறது. விடுமுறை எடுத்துக்கொண்டு பயணம் செய்வதால் கிடைக்கும் உற்சாகத்தை, தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் எளிதாகப் பெற முடியும். மனதை ஒருநிலைப்படுத்துவது, நடந்துகொண்டே செய்யும் தியானம் செய்தல், ஆழ்நிலை தியானம் எனப் பலவகையான தியானங்கள் உள்ளன. அதில் நமக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து தியானம் செய்யலாம்.

3. இயற்கையோடு இணையுங்கள் - நீண்ட நடை பயணம், அருவியில் குளிப்பது என்று இயற்கையோடு ஒன்றிய செயல்களில் ஈடுபடுவது மனநலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு பெரிதும் உதவும். இயற்கையோடு ஒன்றி இருப்பது மனஅழுத்தம், பதற்றம் ஆகியவற்றைக் குறைத்து, உற்காச மனநிலையை அளித்து, சுய மரியாதையைும் மேம்படுத்துகிறதாம். மேலும் படைப்பாற்றலை அதிகரித்து, நினைவாற்றலையும் பெருக்குகிறது. தோட்ட வேலைகளில் ஈடுபடுவது, அறைகளில் உடற்பயிற்சி செய்யாமல் வெளிப்புறக் காற்றை சுவாசித்தவாறே உடற்பயிற்சி செய்வதும் இறுக்கத்தைத் தளர்த்தி, மனஅழுத்தத்துக்குக் காரணமாக கார்டிசோல் எனும் ஹார்மோன் சுரப்பைக் குறைக்கும் என்கின்றன ஆய்வுகள். 

நடைப்பயிற்சி

4. முன்னுரிமைகளை நிர்ணயுங்கள் - இந்த ஆண்டு உங்கள் தொழில் சார்ந்து என்ன இலக்குகளை அடைய வேண்டும் என்பதையும், தனிப்பட்ட வாழ்க்கையில் என்னென்ன இலக்குகளை அடைய வேண்டும் என்பதையும் பட்டியலிடுங்கள். அதன்பிறகு அந்த இலக்குகளில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வரிசைப்படுத்துங்கள். இது உங்கள் ஆற்றலையும் நேரத்தையும் சாதுரியமாகப் பயன்படுத்த உதவும். இதுபோன்ற திட்டமிடல் ஊக்கத்தை அளித்து, கவனத்தைக் கூர்மையாக்கி நிர்ணயித்த இலக்குகளை எளிதில் அடைய உதவும். ஆனால் உங்கள் தகுதிக்கு மீறிய இலக்குகளை நிர்ணயிப்பதைத் தவிர்க்க வேண்டும். அது மனதளவில் உங்கள் செயல்பாடுகளை முடக்கிவிடும்.

தூக்கம்

5. போதுமான தூக்கம் - தூக்கமும் மனநலமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. போதுமான தூக்கம் நல்ல மனநிலை, நினைவாற்றல், அதிக உற்பத்தித் திறன், படைப்பாற்றல் திறன் ஆகியவற்றை அளிக்கும். `ஒருவர் தினமும் இரவு 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது உடல்நலத்துக்கு மனநலத்துக்கும் நல்லது' என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு பதற்றம், மனச்சோர்வு, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும் இதயநோய், மனஅழுத்தம் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாகும்.  குறைவான தூக்கம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலவீனமாக்கும். நன்றாகத் தூங்குவற்கு ஆரோக்கியமான உணவுப்பழக்கம், தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சியும் அவசியம்.