ஒரு வருடம் சிகிச்சை... மனஉளைச்சல்... அதிகரிக்கும் புற்றுநாேயாளிகளின் தற்கொலை! | The number of suicides Increased within a year after cancer detection

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (08/01/2019)

கடைசி தொடர்பு:19:05 (08/01/2019)

ஒரு வருடம் சிகிச்சை... மனஉளைச்சல்... அதிகரிக்கும் புற்றுநாேயாளிகளின் தற்கொலை!

புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட முதல் ஒரு வருட காலத்துக்குள் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற ஆய்வு முடிவு அண்மையில் வெளியாகியுள்ளது. 

தற்கொலை

அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி (American Cancer Society) நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் 2000 முதல் 2014-ம் ஆண்டுக்குள் புற்றுநோய் கண்டறியப்பட்ட நான்கு கோடி நோயாளிகளின் தரவை ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவில் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டு ஒரு வருட சிகிச்சைக்குப் பிறகு, மன உளைச்சல் தாங்க முடியாமல் 1,585 நோயாளிகள் உயிரை மாய்த்துக்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. பிற காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான அஹமத் அல்ஃபர் கூறும்போது, ``நோயாளிக்கும் மருத்துவருக்குமான புரிதலில் சிக்கல் இருப்பதே தற்கொலைக்கான காரணம் என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. புற்றுநோய் குறித்த விழிப்புஉணர்வை அதிகரிப்பதும், நோயாளிகளுக்குச் சரியான ஆலோசனையை அளிப்பதும்தான் இதற்கான தீர்வு. குறிப்பாக, ஒருவருக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்ட முதல் ஆறு மாதத்தில் மருத்துவர்களும் குடும்பத்தினரும் மனதளவிலும் உடலளவிலும் நோயாளிகளை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். 

 

புற்றுநோய்

புற்றுநோயாளிகள் உயிரிழப்பதற்கு அவர்களின் உடல் சார்ந்த பிரச்னைகள் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. உளச்சிக்கல்களும் காரணமாக இருக்கிறது. இந்த ஆய்வு முடிவில், நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். நோயாளிகளை உளவியல் ரீதியான சிக்கல்களிலிருந்து மீட்டெடுக்க தீவிரமாக உழைப்போம் என்பதே அது’’ எனக் கூறியுள்ளார். 

விழிப்புஉணர்வு

பிற புற்றுநோய் பாதிப்புகளைக் காட்டிலும், கணையப் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகமாகத் தற்கொலைக்கு முயல்கின்றனர் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் தற்கொலைக்கு முயல்வது அதிகரித்துள்ளது. ஆனால், மார்பகப் புற்றுநோய் மற்றும் புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தற்கொலை விகிதத்தில் மாறுபாடுகள் இல்லை என்று தெரிய வந்துள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க