வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (10/01/2019)

கடைசி தொடர்பு:20:40 (10/01/2019)

கொசுக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு! - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கையில் எடுக்கும் புதிய வழிமுறை

கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, அவற்றின் இனப்பெருக்கத்தை தடைசெய்யும் புதிய மருந்து ஒன்றை அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

கொசு

கொசுக்கள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவை ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதுபோல, லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடிப்பதும் தொடர்கதையாகவே இருக்கிறது. மலேரியா, சிக்குன்குன்யா, டெங்கு, பெயர் தெரியாத மர்மக் காய்ச்சல்... இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத காய்ச்சல்களால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் கொசுக்கள் மூலம் பரவிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 6 லட்சம். அதில் உயிரிழந்தவர்கள் மட்டும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரம்.  

பூச்சுக் கொல்லி மருந்து தெளித்தல்

கொசுக்களைக் கட்டுப்படுத்த தற்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பது பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் முறை. பூச்சிக்கொல்லி மருந்துகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதோடு இந்த மருந்துகளுக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொசுக்களிடம் எதிர்ப்பு சக்தி உருவாகிவிடுவதால், அதே மருந்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தமுடியவில்லை. இதனால், கொசுக்களை அழிக்க புதிய மருந்துகளைக் கண்டறியவேண்டியது அவசியமாகிறது. இது கொசு ஒழிப்பில் பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு புதிய மருந்தின் மூலம், இவற்றின் இனப்பெருக்கத்தைக் குறைக்க முடியும் என்று அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

கொசு

பெண் கொசுக்கள் முட்டையிடப் புரதச்சத்து தேவை. ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள புதிய மருந்தானது, கொசுவின் முட்டைக்குப் புரதம் கிடைப்பதைத் தடை செய்துவிடும். இதனால் கொசுக்கள் இடும் முட்டையின் ஓடு பலவீனமாகி, முட்டைக்குள் இருக்கும் கரு வளர்ச்சியடைய முடியாமல் உள்ளேயே அழிந்துவிடும். 

இந்தப் புதிய மருந்தைப் பூச்சிக்கொல்லி மருந்தாக மாற்றம் செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிற பூச்சிக்கொல்லி மருந்துகளைப் போல பயன்படுத்தலாம் என்றாலும், சூழலியலுக்கு நன்மை தரும் தேனீக்கள் போன்ற மற்ற பூச்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க