வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (14/01/2019)

கடைசி தொடர்பு:14:20 (14/01/2019)

`ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மருத்துவக் காப்பீடு’ - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

விராலிமலையில் ஜனவரி 20-ம் தேதி உலக சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு - காப்பீடு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அம்மன்குளம் கிராமத்தில் ஜனவரி 20-ம் தேதி காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு திருவிழா நடத்தப்படவுள்ளது. மாபெரும் விராலிமலை ஜல்லிக்கட்டு திருவிழா என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி உலகச் சாதனக்கான முயற்சியாகவும் நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தத் திருவிழாவில் 2,000 காளைகள் பங்கேற்கின்றன. அந்தக் காளைகளை அடக்க 5,000 வீரர்கள் களத்தில் இறங்குகின்றனர். இந்தப் பிரமாண்ட திருவிழாவைக் கண்டுகளிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரளவுள்ளனர். இந்த நிகழ்வை உலக சாதனையாக அங்கீகரிப்பதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த உலக சாதனை அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் மார்க், மெலினி ஆகியோரும் பங்கேற்கின்றனர். இதுதவிர, 400 வெளிநாட்டினரும் நிகழ்ச்சியைக் காண விராலிமலைக்கு வரவுள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது, ``ஜல்லிக்கட்டு அரசாணை வெளியிடப்பட்டு நடைபெற உள்ள முதல் ஜல்லிக்கட்டு விராலிமலையில்தான் நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டுக்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு, விழாக்குழு சார்பாக மருத்துவக் காப்பீடு செய்யப்படும். 

ஜல்லிக்கட்டு

அதுமட்டுமன்றி, இனிவரும் அனைத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் விழாக்குழு சார்பாக அதில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் மருத்துவக் காப்பீடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.