``உடம்புக்குள் கரப்பான் பூச்சி ஊரும்...ஜன்னலோரம் நிழலாடும் உருவம்...'' மதுப் பிரியர்களை எச்சரிக்கும் மனநல மருத்துவர்! | Drug Induced Psychotic Symptoms

வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (17/01/2019)

கடைசி தொடர்பு:11:24 (18/01/2019)

``உடம்புக்குள் கரப்பான் பூச்சி ஊரும்...ஜன்னலோரம் நிழலாடும் உருவம்...'' மதுப் பிரியர்களை எச்சரிக்கும் மனநல மருத்துவர்!

நீண்ட காலம் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் காதுக்குள் யாரோ பேசுவது போலவும், அவர்களுக்குக் கட்டளைகள் இடுவது போலவும் கேட்கும்.

``உடம்புக்குள் கரப்பான் பூச்சி ஊரும்...ஜன்னலோரம் நிழலாடும் உருவம்...'' மதுப் பிரியர்களை எச்சரிக்கும் மனநல மருத்துவர்!

மிழகத்தில் புத்தாண்டு, காணும் பொங்கல், தீபாவளி ஆகிய மூன்று நாள்களிலும் சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. பெரும்பாலான சாலை விபத்துகளுக்குக் காரணம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதுதான் என்று பல்வேறு தரவுகள் தெரிவிக்கின்றன. மது அருந்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதற்கு, பண்டிகை நாள்களில் நடைபெறும் விற்பனை குறித்த புள்ளிவிவரங்களே சாட்சியாக உள்ளன.

liquor

``மதுப்பழக்கத்துக்கு ஆளானவர்களுக்கு உடல்ரீதியாகப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது நாம் அறிந்ததே. ஆனால் அவர்களுக்கு மனரீதியான பிரச்னைகளும் ஏற்படும் என்பதைப் பலர் கவனத்தில் கொள்வதில்லை. குறிப்பாக, மதுக்கு அடிமையானோருக்கு மனஅழுத்தம், மனப்பதற்றம், மனக்குழப்பங்கள், ஞாபக மறதி போன்றவை ஏற்படும்’’என எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் அரவிந்த். 

மருத்துவர் வி.கே.அரவிந்த்மதுவுக்கு அடிமையானோரின் மனநலப் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்குகிறார்.

``நீண்ட காலம் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மனநிலையில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் காதுக்குள் யாரோ பேசுவது போலவும், அவர்களுக்குக் கட்டளைகள் இடுவது போலவும் கேட்கும். சிலருக்குத் தூக்கமின்மை பிரச்னை  உருவாகும்.

தூக்கமின்மையால் அவர்களுக்கு உருவங்கள் மங்கலாகத் தென்பட ஆரம்பிக்கும். படுக்கை அறையின் ஜன்னலோரத்தில் அவர்களுக்கு வேண்டியவர்கள் (இறந்தவர்களோ அல்லது உயிருடன் இருப்பவர்களோ) யாரோ  ஒருவருடைய நிழல் அசைவது போல உணருவார்கள். அந்த உருவங்கள் அவர்களோடு பேசுவது போலவும் தோன்றும். இதை `ஹாலுசினேஷன்ஸ்' (Hallucinations) என்று குறிப்பிடுவோம்.

மனம்

இதில் இன்னொரு வகையான பாதிப்பு உண்டு. இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு அவர்களது உடம்பில் கரப்பான் பூச்சி அல்லது வண்டு ஊர்வது போல உணருவார்கள். இதை `டேக்டைல் ஹாலுசினேஷன்ஸ்' (Tactile Hallucinations) என்று அழைப்போம். இது ஒரு காலகட்டத்தில் மனக்குழப்பங்களாக மாற வாய்ப்பு உண்டு. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தனக்குத் தானே பேசுவார்கள், கற்பனை உலகத்தில் வாழ்வார்கள். இவையெல்லாம் மதுவின் பாதிப்பினால் உருவாகக்கூடியவை. அவர்கள் மது அருந்தும்போது இந்தப் பாதிப்பு குறைவதுபோல தோன்றும். மதுவின் போதை தெளியும்போது மீண்டும் மேற்கண்ட பாதிப்புகள் தலைதூக்கும்.

மது

மனக்குழப்பங்கள் ஏற்படுவது தெரியாமலே சிலர் தொடர்ந்து மதுப்பழக்கத்திலேயே மூழ்கியிருப்பார்கள். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு வேறுவிதமான அறிகுறிகள் தென்படும். அவர்கள் அலுவலகத்தில் பணிபுரிபவராக இருந்தால், அலுவலகத்தில் தனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் என்ன மாதிரியான கட்டளை இடுவாரோ அதேபோல தூக்கத்திலும் பேசுவார். இன்னும் சிலர் சந்தேகப் பார்வையோடு எதையும் அணுகுவார்கள். இவர்களை `டெலுஷன்ஸ் ஆஃப் இன்பிடிலிட்டி’ (Delusions of infedility) என்று அழைப்போம்.

உதாரணத்துக்கு, ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக  இருந்து, அதில் கணவன் மதுவுக்கு அடிமையாகியிருந்தால், அவர் தன் மனைவியைச் சந்தேகப்படுவார். பொதுவாகவே போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும். அதேபோல, மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு தாம்பத்ய ஈடுபாடும் குறைந்துவிடும். இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும். சில நேரங்களில் இது கைகலப்பில் போய் முடியும். இதனால் அவர்களது குழந்தைகள் மனோரீதியாகப் பாதிக்கப்படுவார்கள்.

mathu

`வீட்டிலோ, அலுவலகத்திலோ ஏற்படும் பிரச்னைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவே குடிக்க ஆரம்பித்தேன்’என்று 60 - 70 சதவிகிதம் பேர் கூறுகிறார்கள். மது எப்போதும் எந்தப் பிரச்னைக்கும் தீர்வாகாது. எவ்வளவு குடித்தாலும் பிரச்னைகள் அதிகமாகுமே தவிர, குறையாது. இதனால் சிலருக்குத் தற்கொலை எண்ணங்கள்கூட ஏற்படும். குடித்துவிட்டு மனஅழுத்தம் அதிகமாகும்போது கையைக் கீறிக்கொள்வது போன்ற தங்களை துன்புறுத்திக்கொள்ளும் செயல்களிலும் ஈடுபடுவார்கள். இவையெல்லாம் மனோரீதியான தொந்தரவுகள்.

மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு வாரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மனோரீதியான தொந்தரவுகள் இருந்தால் அவர்களைக் கூடுதலாக 10 நாள்கள் மனநல மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கான சிகிச்சையை மதுப்பழக்கத்தை நிறுத்தச் செய்வது, மனோரீதியான தொந்தரவுகளைக் கட்டுப்படுத்துவது என இரண்டாகப் பிரிக்கலாம். 

மனம்

மதுப்பழக்கத்தினால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகளையும், மருந்துகளையும் பரிந்துரைப்போம். மனஅழுத்தத்துக்கு அடுத்த தீவிர நிலை மனக்குழப்பம். எனவே, மதுவினால் மனக்குழப்பத்தில் சிக்கியவர்கள்,  ஒரு மாதம் உள்நோயாளியாகவும் , எட்டு மாதம் வெளிநோயாளியாகவும் இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

மதுப்பழக்கத்தை கைவிட்டாலும் சிலருக்கு `ஹாலுசினேஷன்ஸ்' பாதிப்பு நான்கு மாதங்கள் வரை நீடிக்கும். இவர்களுக்கு கற்பனை எண்ணங்களைத் தகர்க்க உதவி செய்யும் ஆன்டிசைக்கோடிக்ஸ் (Antipsychotics)மாத்திரைகளை பரிந்துரைப்போம். இந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது மதுஅருந்தினால் நரம்புத் தளர்ச்சி, வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மதுவின் பக்கம் செல்லவே கூடாது” என்கிறார் வி.கே.அரவிந்த்.


டிரெண்டிங் @ விகடன்