குழந்தைகளைக் கையைப் பிடித்து அழைத்துச்செல்லும்போது கவனிக்க வேண்டியவை! #GoodParenting | Dos and Donts while holding your kid

வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (19/01/2019)

கடைசி தொடர்பு:13:07 (19/01/2019)

குழந்தைகளைக் கையைப் பிடித்து அழைத்துச்செல்லும்போது கவனிக்க வேண்டியவை! #GoodParenting

குழந்தைகளைக் கையைப் பிடித்து அழைத்துச்செல்லும்போது கவனிக்க வேண்டியவை! #GoodParenting

 பொதுவாக, குழந்தைகளைச் சாலைகளில் செல்லும்போது நம்முடைய இடதுகையால், குழந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துச்செல்வது வழக்கம். ஏனெனில், வலதுகை பக்கம் குழந்தை வரும்போது, வாகனங்களில் அடிபட்டு விடக்கூடும் என்பதால். ஆனால், 'குழந்தைகளைக் கையைப் பிடித்துச் செல்லும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், கை எலும்பு உடைந்துவிடும்' என்ற 'அபாய' அறிவிப்போடு, சில நாள்களாய் வாட்ஸ் அப்பில் படங்களைப் பரப்பி வருகின்றனர் சிலர். அதைச் சிலர் ஃபேஸ்புக்கில் பரப்ப, அது இன்னும் வேகமாய் பரவிக்கொண்டிருக்கிறது. இது குறித்து, குழந்தைகள் எலும்பு நல மருத்துவர் ஆர்.சங்கர் அவர்களிடம் பேசினேன். 

டாக்டர் சங்கர் குழந்தை "வாட்ஸ் அப்பில் சரியோ, தவறோ எதை ஷேர் பண்ணினாலும் அது, ரொம்பவே வேகமாகப் பரவி விடுகிறது. குறிப்பாக, குழந்தைகள் தொடர்பான செய்திகள் எனும்போது அது பரவும் வேகம் இன்னும் அதிகமாகிவிடுகிறது. ஆனால், அவை எல்லாவற்றையும் நம்பி பயந்துவிட வேண்டாம். உங்கள் உடல் தொடர்பான சிக்கல்களை அதற்கு உரிய மருத்துவரிடம் கேட்டு, விளக்கமும் சிகிச்சையும் பெறுவதே சரியான அணுகுமுறையாகும். இனி, குழந்தைகளை அழைத்துச்செல்லும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.

பொதுவாக, குழந்தையின் ஒரு கையைப் பிடித்து ஒருபோதும் தூக்கக்கூடாது. இரு கைகளின் அக்குளில் கெட்டியாகப் பிடித்துத் தூக்குவதே சரி. அடுத்து, நாம் குழந்தைகளை வெளியே அழைத்துச்செல்லும்போது அதன் கைகளைப் பிடித்துக்கொண்டு செல்வோம். அப்போது திடீரென்று குழந்தை திரும்பும்போதோ, விளையாட்டுத்தனமாகத் துள்ளிக்குதிக்கையில் கீழே விழும்போதோ கையில் எல்போ பகுதியில் பிரஷர் அதிகமாகி, ஜாயின்ட் விலகியிடும். இது ரொம்பவே பயப்படக்கூடியது அல்ல. ஒரு நிமிடத்தில் சரி செய்துவிடலாம். அதனால், பெற்றோர்கள் பயப்படக்கூடாது" என்ற மருத்துவர் சங்கரிடம், 

"அப்படி ஜாயின்ட் விலகிவிட்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும்?"

வாக்கிங்

"பெரியவர்களே அதைச் சரியாகப் பொருத்திவிட முடியும். அப்படிச் செய்ய தயங்குபவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், ஓரிரு நிமிடத்தில் சரி செய்துவிடுவார்கள். இன்னும் சிலர், குழந்தைகளின் கையை நாம் பிடித்து அழைத்துச் சென்றால்தானே இந்தச் சிக்கல் வரும். அதற்குப் பதிலாக, குழந்தை நம் கையைப் பிடித்துக்கொண்டு வரச் செய்யலாமே என்று யோசனை சொல்கிறார்கள். கை எலும்பு தொடர்பாக வேண்டுமானால், இது சரியான ஆலோசனையாக இருக்கலாம் ஆனால், குழந்தை ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டு, கையை விட்டுவிட்டுச் செல்லக்கூடும். அப்படிச் சென்றுவிட்டால், வாகனத்தில் மோதவோ, கீழே விழுந்துவிடவோ வாய்ப்புகள் அதிகம். குழந்தையின் கை நம் பிடியில் இருப்பதே நல்லது. 

குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு, கால்சியம், விட்டமின் டி ஆகியவை அவசியம். பச்சைக் காய்கறிகள், பால், முட்டைகளில் அந்தச் சத்துகள் அதிகம் இருக்கின்றன. அதனால், அவற்றைத் தொடர்ந்துகொடுத்துவர வேண்டும். மேலும், போதுமான அளவு உடற்பயிற்சியும் தேவை" என்றவரிடம், "குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி தேவையா?" என்றேன். 

"உடற்பயிற்சி என்றால், ஜிம்க்குச் சென்று செய்வது அல்ல. ஒன்று முதல் ஐந்து வயதுக் குழந்தைகள் நாளொன்று மூன்று மணிநேரம் ஆக்டிவாக இருக்க வேண்டும். ஓடியாடி விளையாடுவதாக இருக்கட்டும். கடைத்தெருவுக்கு நடக்க வைத்து அழைத்துச் செல்வதாக இருக்கட்டும், மூன்று மணி நேரம் ஆக்டிவாக இருப்பது அவசியம். சிலர் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்கிறேன் என்று, வீட்டுக்குள்ளேயே அதிகம் விளையாட விடாமல் வைத்துவிடுகின்றனர். மாலை வெயிலில் விளையாடும்போது, குழந்தைகளில் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும்." என்கிறார் நிறைவாக. 


டிரெண்டிங் @ விகடன்