பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் இளங்கோ காலமானார் | Former public health director Dr.Elango passed away

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (19/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (19/01/2019)

பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் இளங்கோ காலமானார்

2009-ம் ஆண்டு, தமிழகத்தில் முதன்முதலில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டபோது, அந்த நிலையைத் திறம்படக் கையாண்டவர்.

பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர், டாக்டர் எஸ்.இளங்கோ (68) இன்று காலமானார். உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  இவர், ஜனவரி 9-ம் தேதி மருத்துவமனையில் இருந்து திண்டுக்கல் ராணி மங்கம்மாள் நகரில் உள்ள அவரது வீட்டுக்குத் திரும்பினார். இந்நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவர் வீட்டிலேயே உயிரிழந்தார்.

காலமானார்

டாக்டர் இளங்கோ, 2008 - 2010-ம் ஆண்டு வரை பொது சுகாதாரத் துறையின் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். 2009-ம் ஆண்டு, தமிழகத்தில் முதன்முதலில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டபோது, அந்த நிலையைத் திறம்படக் கையாண்டவர். பன்றிக்காய்ச்சல் அதிகம் பரவாமல் உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்ததற்காக, பல தரப்பினரிடையே பாராட்டைப் பெற்றவர்.

பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், பொது சுகாதார சங்கத்தின் தமிழகத் தலைவராகப் பதவி வகித்துவந்தார். டெங்கு, பன்றிக்காய்ச்சல் என எந்த வகையான தொற்றுநோய்கள் பரவினாலும், களத்தில் இறங்கி உடனடியாகப் பணியாற்றுவார். உண்மை நிலவரங்களை உடனுக்குடன் தெரிவித்து, நோய் பரவியுள்ள பகுதிகளில் நோய் தடுப்புப் பணிகள் உடனடியாக நடைபெறுவதற்கான செயலில் ஈடுபடுவார்.  செய்தியாளர்களிடம் நெருங்கிய நட்பு வட்டத்தை உடையவர்.

அவருக்கு விஜயா என்ற மனைவியும், செந்தில் என்ற மகனும், சிவப்பிரியா என்ற மகளும் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.