நண்டுச்சாறு, நெத்திலிக் குழம்பு, சைவ செலவு ரசம்... நோய் எதிர்ப்பு சக்தி தரும் ரெசிப்பிகள்! | Recipes that boost your Immune system

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (20/01/2019)

கடைசி தொடர்பு:10:30 (20/01/2019)

நண்டுச்சாறு, நெத்திலிக் குழம்பு, சைவ செலவு ரசம்... நோய் எதிர்ப்பு சக்தி தரும் ரெசிப்பிகள்!

சுண்டுகார செலவுப் பொருள்கள் நாட்டு மருந்துக் கடைகள் மற்றும் வாரச் சந்தைகளில் கிடைக்கும். 100 ரூபாய்க்கு வாங்கினால் மூன்று தடவை பயன்படுத்தலாம்.

குளிர் காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, எல்லோருக்குமே நோய் எதிர்ப்புச்சக்தி சற்று குறைவாகவே இருக்கும். இந்த சீசனில் சளி, இருமல், காய்ச்சல் என்று பலவித பிரச்னைகள் வருவதற்கும் இந்த நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாடே முக்கியமான காரணம். கீழே கொடுக்கப்பட்ட செலவு ரசம் உங்களின் எதிர்ப்புச்சக்தியை பலப்படுத்தும், கடல் நண்டுச் சாறும் நெத்திலி - பூண்டு குழம்பும் வந்த சளி மற்றும் இருமலையும் உடம்பில் இருந்து ஓட ஓட விரட்டும். 

கடல் நண்டுச் சாறு

கடல் நண்டுச்சாறு

தேவையானவை:

நண்டு - 10

நண்டின் சதைப்பகுதி - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 250 கிராம்

பிரிஞ்சி இலை - 5 கிராம்

மிளகு - 10 கிராம்

ஏலக்காய் - 5 கிராம்

கிராம்பு - 5 கிராம்

கொத்தமல்லித்தழைத்தண்டு - 250 கிராம் (பொடியாக நறுக்கவும்)

தனியாத்தூள் - 15 கிராம்

மிளகாய்த்தூள் - 20 கிராம்

கறிவேப்பிலை - 25 கிராம்

பூண்டு - 50 கிராம்

பச்சை மிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)

சீரகத்தூள் - 15 கிராம்

எண்ணெய் - 100 மில்லி

உப்பு - தேவையான அளவு

சோம்பு - 10 கிராம்

தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)

வெண்ணெய் - சிறிது

மஞ்சள்தூள் - 10 கிராம்

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, மிளகு, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை, பூண்டு, பிரிஞ்சி இலை பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். நண்டை நன்றாகக் கழுவி சதைப்பகுதியுடன் நன்கு இடித்து வைக்கவும். இதைத் தாளித்தவற்றோடு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் தக்காளி, கொத்தமல்லித்தழைத்தண்டு சேர்த்து மைய வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து வதக்கி, உப்பு, தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் கொதிக்க விடவும். இந்தத் தண்ணீரை வடிகட்டி தனியாக ஒரு பவுலில் ஊற்றி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் இட்டு சூடானதும், நண்டின் சதைப்பகுதியைச் சேர்த்து பச்சை வாசனைப் போக வேகும் அளவுக்கு லேசாக வதக்கவும். சூப்பை பரிமாறும் போது மேலே வெந்த நண்டு சதையைப் போட்டு, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.

நெத்திலி - பூண்டு குழம்பு

நெத்திலி - பூண்டுக் குழம்பு

தேவையானவை:

நெத்திலி மீன் – 250 கிராம்

தோலுரித்த பூண்டு – 50 கிராம்

தோலுரித்த சின்ன வெங்காயம் – 50 கிராம்

வெங்காய விழுது – ஒரு கப்

தக்காளி விழுது – ஒரு கப்

புளி – சிறிய எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கடுகு – அரை டீஸ்பூன்

வெந்தயம் – அரை டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மீனைச் சுத்தம் செய்து தனியாக வைக்கவும். புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். மண் பாத்திரத்தில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், சீரகம் தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், வெங்காய விழுது, தக்காளி விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனைப் போகும்வரை மேலும் வதக்கவும். பிறகு புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது மீனைச் சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, 6-ல் இருந்து 8 நிமிடங்கள் வரை வேகவைத்து இறக்கவும். சுவையான நெத்திலி பூண்டு குழம்பு ரெடி.

சைவ செலவு ரசம்

செலவு ரசம்

தேவையான பொருள்கள்:

சுண்டுகார செலவுப் பொருள்கள் - 1 பங்கு (கடுகு, மிளகு, திப்பிலி, சீரகம், கசகசா, வால்மிளகு, கருஞ்சீரகம், கடல் நுரை, சித்தரத்தை, வெட்டிவேர், பெருங்காயம் அடங்கியது. நாட்டு மருந்துக் கடைகள், வாரச் சந்தைகளில் கிடைக்கும். 100 ரூபாய்க்கு வாங்கினால் மூன்று தடவை பயன்படுத்தலாம்). 

சின்ன வெங்காயம் - 1 கப்

பூண்டு - 5 பல்

சீரகம் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 1

கொத்தமல்லித்தூள் - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 3 கொத்து

தேங்காய் எண்ணெய் -  4 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

கொத்தமல்லித்தழை - 1 கொத்து

பெருங்காயம் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில், பாதி அளவு சின்ன வெங்காயம், பூண்டு, சுண்டுகார செலவுப் பொருள்கள், சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லித்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். 

வாணலியில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள். மீதம் இருக்கும் சிறிய வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதில் போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அரைத்துவைத்துள்ள விழுதை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கரைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பிறகு, கொத்தமல்லித் தழையைச் சிறு துண்டுகளாக வெட்டித் தூவி, இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைவிட்டு இறக்குங்கள். சுடு சோற்றில் இதை ஊற்றிச் சாப்பிட, அமுதம் போன்று இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்