போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம்?  - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்! | Polio campaign schedule Postponed

வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (21/01/2019)

கடைசி தொடர்பு:20:01 (21/01/2019)

போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க என்ன காரணம்?  - சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம்!

மிழகத்தில், நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

போலியோ சொட்டு மருந்து

பிப்ரவரி 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதியை அறிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருந்து கொடுப்பதற்கான போலியோ சொட்டு மருந்து போதிய இருப்பு இல்லை என்பதால் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமியிடம் பேசினோம். 

 சொட்டு மருந்து முகாம்

``தொடர் நடவடிக்கைகளால் கடந்த 15 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அதனால் இரண்டு தவணைகளாக கொடுக்கப்பட்ட சொட்டு மருந்தை ஒரே தவணையாக வழங்க தமிழக பொதுசுகாதாரத் துறை திட்டமிட்டிருந்தது. அதன்படி, இந்தாண்டு, 70 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்தது. இந்த நிலையில், தற்போது சில காரணங்களுக்காக போலியோ சொட்டு மருந்து வழங்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றே அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், காரணங்கள் என்ன  என்பது பற்றி குறிப்பிடவில்லை. மருந்து தட்டுப்பாடு காரணமா என்பது பற்றியும் உறுதியான தகவல் இல்லை. வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் திட்டமிட்டபடி போலியோ முகாம்களை நடத்த இயலாத சூழல் உருவாகிருப்பது காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது." என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க