`தைராய்டு பிரச்னையை சாதாரணமா எடுத்துக்காதீங்க’ - பாதிப்புகளை பட்டியலிடும் மருத்துவர்கள்! | Undiagnosed Thyroid Causes Infertility risks in women

வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (21/01/2019)

கடைசி தொடர்பு:21:15 (21/01/2019)

`தைராய்டு பிரச்னையை சாதாரணமா எடுத்துக்காதீங்க’ - பாதிப்புகளை பட்டியலிடும் மருத்துவர்கள்!

தைராய்டுக்கான முக்கிய அறிகுறிகள் உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, தசை மற்றும் மூட்டு வலிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், தூக்கமின்மை போன்றவை.

இந்தியாவைப் பொறுத்தவரையில், தைராய்டு நோய் பாதிப்புள்ள பெண்களில் இருபது சதவிகிதம் பேர் தங்களுக்கு தைராய்டு பாதிப்பு உள்ளதைக் கண்டறியாமலேயே உள்ளனர் என்கின்றனர் செயற்கை கருத்தரித்தல் மையத்தின் மருத்துவ வல்லுநர்கள்.

தைராய்டு பெண்கள்

தைராய்டை சரிசெய்யாமல் இருப்பதாலேயே பல பெண்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் கருக் கலைவது போன்ற சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அவர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். உடலில் அளவுக்கதிகமாக தைராய்டு சுரந்தால் ஹைப்பர்தைராய்டிஸம் (hyperthyroidism) என்றும், மிகக்குறைவாகச் சுரந்தால் ஹைப்போதைராய்டிஸம் (hypothyroidism) என்றும் கூறப்படுகிறது. தைராய்டு சுரப்பு குறைவாக இருப்பதாலேயே, மாதவிடாய்க்கு முந்தைய காலகட்டத்துக்கான பிரச்னைகளை (premenstrual syndrome) எழுபது சதவிகிதப் பெண்கள் அடைகின்றனர் என்கிறது ஆய்வு. 

புதுடெல்லியைச் சேர்ந்த தனியார் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றின் தலைவர் ஷோபா குப்தா கூறுகையில், ``பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கும், அடிக்கடி கரு கலைந்துவிடுவதற்கும் முக்கிய காரணம், சரிசெய்யப்படாத தைராய்டு நோய்தான். தனக்கு தைராய்டு உள்ளதென்பதே பல பெண்களுக்குத் தெரிவதில்லை. அதனாலேயே அவர்களுக்கு அப்பிரச்னை சரிசெய்யப்படாமல் இருக்கிறது.  இந்தக் குறைபாட்டால் ஆண்களைக் காட்டிலும், பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்கள்  கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். 25 வயதைத் தாண்டிய பெண்களில், பெரும்பாலானோருக்கு இப்பிரச்னை உள்ளது என்பதால் அந்த வயது கொண்ட பெண்கள் தங்கள் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார். 

கருத்தரித்தல்

உத்தரப்பிரதேசத்தின் மற்றொரு புகழ்பெற்ற கருத்தரிப்பு மையத்தைச் சேர்ந்த மூத்த மருத்துவரான ஷ்வேதா கௌஸ்வமியும் இந்தக் கருத்து குறித்துக் கூறுகையில், ``தைராய்டுக்கான முக்கிய அறிகுறிகள் உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, தசை மற்றும் மூட்டு வலிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், தூக்கமின்மை போன்றவை. இவை தெரியவரும் பெண்கள், தாமதிக்காமல் தைராய்டு சுரப்பிக்கான பரிசோதனையையும் (TSH - Thyroid stimulating hormone), மார்பகத்துக்கான 'எக்ஸ் ரே', டி-4 (thyroxin test) பரிசோதனையையும் செய்து பார்க்க வேண்டும்" என்கிறார்.

எனவே, பெண்கள் தங்கள் உடலை தைராய்டு பிரச்னையிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆரோக்கியமான வாழ்க்கை முறை, அன்றாட உடற்பயிற்சி, மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை, சீரான உடல் எடை, சரியான உணவு போன்றவற்றை பின்பற்றுவது அவசியம். முதல்நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிவதால் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும், கருத்தரிப்பதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க