``தவறான செய்தியைத் தடுக்கவும்!" - ஃபேஸ்புக், கூகுள் நிறுவனத்துக்கு இந்திய அரசு வேண்டுகோள் | Indian government requests to ban fake news about indian food products

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (22/01/2019)

கடைசி தொடர்பு:15:08 (22/01/2019)

``தவறான செய்தியைத் தடுக்கவும்!" - ஃபேஸ்புக், கூகுள் நிறுவனத்துக்கு இந்திய அரசு வேண்டுகோள்

``மூக வலைதளங்களில், இந்திய உணவுப் பொருள்களைப் பற்றிய தவறான செய்திகள் வெளிவருவதைத் தடுக்க வேண்டும்'' என ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களை இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.  

உணவுப் பொருள்கள்

இது தொடர்பாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாட்டு ஆணையம் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தது. அதில், ``உணவு பற்றிய தவறான செய்திகள் பரப்பப்படுவது மக்களுக்கும், உணவுத் தொழிலாளர்களுக்கும் தீமையை ஏற்படுத்துவதோடு, இந்தியாவின் உணவுமுறை, உணவுக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கிறது. இந்தப் பிரச்னையை உடனடியாகச் சரிசெய்ய, சமூக ஊடக நிறுவனங்கள் அதிகாரிகளை நியமித்து, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் '' என்று பரிந்துரைத்துள்ளது.

உணவு முறை

அதற்கு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ``இந்தியாவில் கிடைக்கும் உணவுப் பொருள்களின் தரம் பற்றிய தவறான செய்திகள் பரப்பப்படுவது எங்கள் கவனத்திற்கு வந்தது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி பற்றிய போலியான பயத்தை ஏற்படுத்தக்கூடிய வீடியோக்கள், செய்திகள், மக்களிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவுகின்றன. இதைத் தடுப்பதற்காக, தவறான செய்திகளைப் பரப்பும் கணக்குகளை முடக்க ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளோம் " என்று பதிலளித்துள்ளது.