பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூளையைப் பாதிக்குமா? | Can processed foods affect brain?

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (23/01/2019)

கடைசி தொடர்பு:18:10 (23/01/2019)

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மூளையைப் பாதிக்குமா?

தப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் மூளை பாதிப்பு ஏற்படும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மூளை

தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது பலரின் பழக்கமாகிவிட்டது. இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. காரணம், அதில் கலந்துள்ள ரசாயனங்கள்தான் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதால் மூளையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக `சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ்' (scientific reports) என்ற இதழில் வெளிவந்துள்ள கட்டுரையில், `பதப்படுத்தப்பட்ட உணவுகளின்  அமைப்பு மற்றும் அதன் காலநீட்டிப்பை அதிகரிப்பதற்காக அதில் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக அதிகமான கவலை, பதற்றம், சமூகத்துடன் குறைவான தொடர்பு உள்ளிட்டப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. brain

எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இவை தெரியவந்துள்ளன. குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பால்மம் (emulsifier) இரு பாலின எலிகளிடமும் வித்தியாசமான முறையில் செயல்பட்டு மூளையைப் பாதித்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த ஆய்வை நடத்திய ஜார்ஜியா மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கார்ட் டி விரீஸ் கூறுகையில், ``குடலில் ஏற்படும் அழற்சிகள், நோய் எதிர்ப்பு உயிரணுக்களைத் தூண்டி, மூளையில் இருக்கக்கூடிய திசுக்கள் உள்ளிட்ட பிற இடங்களில் இருக்கும் திசுக்களைப் பாதிக்கும் சிக்னல் அனுப்பக்கூடிய மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது. 

குடலானது மூளைக்கு நேரடி தகவல் பாதையை உருவாக்கும் நரம்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் குடல் ஆரோக்கியமும் மூளை ஆரோக்கியமும் பிணைந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. மேலும், உடல் பருமன், குடலில் ஏற்படும் அழற்சிகள், நடத்தைக் குறைபாடுகளுக்குப் பொதுவான வழிமுறைகள் இருக்கலாம்’’ என்றார்.