7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம் | 12 kilogram tumour remove from youth thigh!

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (24/01/2019)

கடைசி தொடர்பு:14:55 (24/01/2019)

7 மருத்துவர்கள்... 9 மணிநேர ஆபரேஷன் - இளைஞர் தொடையில் இருந்து 12 கிலோ கட்டி அகற்றம்

புது டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில், 18 வயது இளைஞரின் தொடையில் இருந்த  12 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய கட்டி அகற்றப்பட்டது

கட்டி


புது டெல்லியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். 18 வயதான அவரின் இடது தொடைப் பகுதியில்  வீக்கம் இருந்த காரணத்தால், அவரால் சரியாக நடக்க முடியவில்லை. அமர்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், நரம்பு மற்றும் ரத்தக் குழாய்கள் அழுத்தம் காரணமாக, மூட்டுகள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அவர் புது டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதனைசெய்தனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு இடுப்பின் பின்புறத்தில் தொடைப் பகுதியில்  37 செ.மீ அளவிலான 12 கிலோ எடை கொண்ட கட்டி இருப்பது தெரியவந்தது.  இதையடுத்து, அந்த இளைஞருக்கு அறுவைசிகிச்சையை 7 டாக்டர்கள்  மேற்கொண்டு, 9 மணி நேரத்தில் செய்துமுடித்தனர். 

மருத்துவர்கள்


வழக்கமாக வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில்தான் இதுபோன்ற கட்டிகள் பெரிதாக இருக்கும். அவை அறுவைசிகிச்சைமூலம் அகற்றப்படும். ஆனால், இதுபோல வீக்கம் ஏற்பட்டு தொடைப் பகுதியில் மிகப்பெரிய கட்டிகள் அகற்றப்படுவது எப்போதாவதுதான் நிகழும். இதேபோன்ற மிகப்பெரிய கட்டி, கடந்த 2014-ம் ஆண்டில் அமெரிக்காவின் மியாமி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஒரு நோயாளிக்கு அகற்றப்பட்டுள்ளது.

இந்த அறுவைசிகிச்சை தொடர்பாக, கங்காராம் மருத்துவமனையின் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் பிரஜேஷ் நந்தன் கூறுகையில், "இந்த இளைஞருக்குக் கடந்த 2012-ம் ஆண்டில் தொடைப் பகுதியில் லேசாக வீக்கம் இருந்துள்ளது. அவர் இதைச் சாதாரணமாக நினைத்துவிட்டதால், கட்டி பெரிதாகிவிட்டது. இவ்வளவு காலம் தாமதம் செய்த காரணத்தால்தான் அறுவைசிகிச்சை செய்ய நேர்ந்தது.  இப்போது அறுவைசிகிச்சை செய்யாமல் விட்டிருந்தால், இடுப்பு, அடிவயிறு, மூட்டு இணைப்புகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ரத்த ஓட்டம் தடைபட்டிருக்கும்" என்றார்.