`பொரித்த சிக்கன், மீன் பிரியரா நீங்கள்?’ - இதப்படிங்க முதல்ல! | fried chicken, fried fish may increase risk of death

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:13:50 (26/01/2019)

`பொரித்த சிக்கன், மீன் பிரியரா நீங்கள்?’ - இதப்படிங்க முதல்ல!

பொரித்த சிக்கன், மீன், ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ், சிப்ஸ் போன்ற உணவுப் பொருள்களை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்' என்று கண்டறிந்துள்ளனர்.

பொரித்த சிக்கன், மீன் வகையறாக்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு உயிரிழப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக பகீர் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு `பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ என்ற மருத்துவ இதழில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பொறித்த சிக்கன்

அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஆய்வில், மெனோபாஸ் நிலையை அடைந்த 50 முதல் 79 வயதுடைய பெண்கள் 1,06,966 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 1993-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு நடைபெற்ற 25 ஆண்டுகளில் 31,588 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9,320 பேர் இதயம் தொடர்பான பாதிப்புகளாலும் 8,358 பேர் புற்றுநோய் பாதிப்பாலும் 13,880 பேர் பிற காரணங்களாலும் உயிரிழந்தனர்.

இதயநோய்

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைத்துப் பெண்களின் உணவுப்பழக்கங்களும், அவர்கள் உணவு உட்கொள்ளும் அளவும் ஆராயப்பட்டது. அதன் அடிப்படையில், 'பொரித்த சிக்கன், மீன், ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ், சிப்ஸ் போன்ற உணவுப் பொருள்களை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்' என்று கண்டறிந்துள்ளனர்.

சிக்கன் மீன்

உணவுப் பழக்கத்துடன் அவர்களின் வாழ்க்கை முறை, கல்வியறிவு, வருமானம் ஆகியவற்றையும் ஆராய்ந்து இறுதியாக ஆராய்ச்சியாளர்கள், ``பொரித்த சிக்கன், மீன் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடாதவர்களைக் காட்டிலும் சாப்பிடுபவர்கள் மேற்கூறிய நோய்களால் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் 7 சதவிகிதம் அதிகமாக உள்ளது. ஒருநாளைக்கு ஒருமுறைக்கு மேல் இந்த உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு 13 சதவிகிதம் வாய்ப்பு அதிகமாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் பொரித்த உணவுகளை நேரடியாகவும் சான்ட்விட்ச், பர்கர் போன்ற துரித உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடும் பழக்கமும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி ஹோட்டலுக்குச் சென்று `ஒரு சிக்கன் ஃப்ரை' என்று ஆர்டர் செய்வதற்கு முன்பு கொஞ்சம் யோசிங்க பாஸ்!