இணையதளத்தில் எப்போதும் மருத்துவ ஆலோசனைகளைத் தேடுகிறீர்களா? எச்சரிக்கை! #Hypochondriasis | An exclusive study on Hypochondriasis, the fear of illness

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (26/01/2019)

கடைசி தொடர்பு:14:40 (26/01/2019)

இணையதளத்தில் எப்போதும் மருத்துவ ஆலோசனைகளைத் தேடுகிறீர்களா? எச்சரிக்கை! #Hypochondriasis

மருத்துவர்களே அவர்களுக்கு, 'எந்த நோயும் இல்லை' என்று சொன்னாலும் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. 'அறிகுறிகள் தொடர்வதாகவும், மருத்துவர் சரியில்லை' என்றும் மருத்துவர்களை மாற்றிக்கொண்டேயிருப்பார்கள்.

இணையதளத்தில் எப்போதும் மருத்துவ ஆலோசனைகளைத் தேடுகிறீர்களா? எச்சரிக்கை! #Hypochondriasis

னிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் இந்த விருப்பமே சிலருக்குப் பயமாக (Fear of illness) மாறிவிடுவதும் உண்டு. இந்தப் பயம் அடுத்தகட்டத்திற்குச் சென்று, சாதாரண தலைவலி வந்தால்கூட தலையில் பெரிய பிரச்னை வந்து உயிருக்கே பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகக் கவலைப்படுவார்கள்.

Hypochondriasis

'உடலில் எந்தப் பாதிப்பும் இல்லாதபோதும் தனக்கு நோய் வந்துவிடுமோ என்று பயம் கொள்பவர்களுக்கு 'ஹைப்போகான்ட்ரியாஸிஸ்' (Hypochondriasis) என்ற குறைபாடு இருக்கலாம். மனநலம் சார்ந்த இந்தக் குறைபாடே பல நோய்கள் வருவதற்கான காரணமாகவும் மாறிவிடலாம்' என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து மனநல மருத்துவர் டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் விரிவாகப் பேசினார். ஸ்வாதிக் சங்கரலிங்கம்
"ஹைப்போகான்ட்ரியாஸிஸால் பாதிக்கப்பட்டவர்கள் எச்.ஐ.வி.எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற தாங்கள் கேள்விப்பட்ட ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நோயை மனதில் வைத்துக் கொண்டு, தனக்கும் அந்த நோய் வந்துவிடுமோ என்று அதிகக் கவலையுடனும் பயத்துடனும் இருப்பார்கள். என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒருவர், 'தான் மலச்சிக்கலால் அவதிப்படுவதாகவும், அதற்குக் குடலில் ஏற்பட்ட பிரச்னைதான் காரணம்' என்றும், இன்னும் ஒருபடி மேலேசென்று 'உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் மாறிவிட்டன' என்றும் கூறினார். ஆனால் அவருக்கு இருந்தது மிகவும் சாதாரணப் பிரச்னைதான்.

இதுபோன்ற சிந்தனையுடையவர்கள், குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இருக்கும் அறிகுறிகளைத் தங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தங்களுக்கும் அந்த நோய் வரப்போவதாக அல்லது வந்துவிட்டதாகக் கவலைப்படுவார்கள். சிலர் தங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை இணையத்தில் தேடி, ஒப்பிட்டுப் பார்த்துக் கவலைப்படுவார்கள். 

ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ்

உடலில் ஏற்படக்கூடிய சிறிய மாற்றத்தைக்கூட நோயின் அறிகுறிகளாக நினைத்துக் கொள்வார்கள். உதாரணமாக, பொதுவாக இருக்கக்கூடிய சோர்வு, தூக்கமின்மை போன்றவற்றை புற்றுநோய், ஹெச்.ஐ.வி போன்ற தீவிரமான நோய்களின் அறிகுறிகளாக நினைத்துக்கொள்வார்கள். அறிகுறிகளைப் பற்றி மருத்துவர்களிடம் எடுத்துக்கூறி, முறையான சோதனைகள் அனைத்தும் செய்து, மருத்துவர்களே அவர்களுக்கு, 'எந்த நோயும் இல்லை' என்று சொன்னாலும் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. 'அறிகுறிகள் தொடர்வதாகவும், மருத்துவர் சரியில்லை' என்றும் மருத்துவர்களை மாற்றிக்கொண்டேயிருப்பார்கள். 

மருத்துவ ஆலோசனை

தனக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று சிந்திப்பதையே முழு நேர வேலையாக வைத்திருப்பார்கள். இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும். வேலையில் கவனம் செலுத்த முடியாமல் வேலையிடத்தில் பிரச்னை ஏற்படும். இந்தக் மனக்குழப்பத்தினால் தூக்கமின்மை, சரியான தூக்கம் இல்லாததால் சோர்வு, பசியின்மை போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகளையும் அவர்கள் பிற நோய்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கவலையுடனும் பயத்துடனும் இருப்பார்கள். மருத்துவரிடம் சோதித்தால் தனக்கு ஏதேனும் பெரிய நோயிருப்பதாகக் கூறிவிடுவார் என்ற பயத்தில் மருத்துவரிடமே போகாமல் இருப்பவர்களும் உண்டு. 

தூக்கமின்மை

ஹைப்போகான்ட்ரியாஸிஸ் குறைபாட்டில் இருந்து வெளிவருவதற்கு குடும்பத்தினருடைய புரிதலும், உறுதுணையும் மிகவும் அவசியம். மூன்று, நான்கு மருத்துவர்களிடம் பரிசீலனையைப் பெற்ற பிறகும், ஒருவர் தனக்கு 'எந்த நோயுமில்லை' என்று நம்பவில்லையென்றால் அவரைக் கட்டாயம் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். மனநல மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள் மூலம் பிரச்னையைப் புரிய வைத்து அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.

குடும்பத்தில் ஒருவருக்கு இதுபோன்ற பிரச்னை இருந்தால் மற்றவர்கள் அதனை அலட்சியப்படுத்தக் கூடாது. காரணம், நோய் வந்துவிடுமோ என்ற பயமே வேறு பல நோய்கள் வருவதற்கான காரணமாக இருக்கின்றன. தேவையில்லாத கவலைகளும், பயங்களும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கெடுக்கும்" என்கிறார் டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம். 


டிரெண்டிங் @ விகடன்