`எனக்குக் கோபம் வந்திருந்தால் காதலித்த என் மகனைக் கொன்றிருப்பேன்!'- உணர்ச்சிவசப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் | Retired IAS officer speaks about her daughter in law

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (30/01/2019)

கடைசி தொடர்பு:18:00 (30/01/2019)

`எனக்குக் கோபம் வந்திருந்தால் காதலித்த என் மகனைக் கொன்றிருப்பேன்!'- உணர்ச்சிவசப்பட்ட முன்னாள் ஐஏஎஸ்

``இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததற்காகக் கோபப்பட்டு, என் மகனை வெட்டிப்போட்டிருந்தால் இன்று ஜெயிலில்தான் இருந்திருப்பேன்" என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஜவஹர் உணர்ச்சிபொங்கத் தெரிவித்தார்.

ஐஏஎஸ்

மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றத்தின் சார்பில் `முதியோர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான வழிகள்' என்ற தலைப்பில் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி சென்னை ரஷ்யன் கலாசார மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஜவஹர் பேசியபோது, ``முதியோர்களின் கவலை மற்றும் வருத்தத்தை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. அது உண்மையான  வாழ்க்கையும் இல்லை. நானும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியவன்தான். ஆனால் நான் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஜவஹர்மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் நான் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொண்டேன். 60 வயது வரை நிற்க நேரமின்றி வேலை பார்த்தேன். என் குடும்பமும் எனக்கு உறுதுணையாக இருந்தது. முக்கியமாக என் மனைவி. ஆனால் இன்றைக்கு என் மனைவியிடம் ஒரு காபி கேட்டால், ``என்னால் முடியலங்க...சோர்வா இருக்கு. எனக்கும் சேர்த்து நீங்களே காபி போட்டுக் கொடுங்க" என்று கூறுகிறார்.

ஆரம்பத்தில் கோபம் வந்தது, பின் இயல்பைப் புரிந்துகொண்டேன். இப்போது எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து நானே காபி போடுகிறேன். ஓய்வு பெற வேண்டியது நான் மட்டும் அல்ல என் மனைவியும்தான் என்று உணர்ந்தேன். அதனால்தான் இதுநாள் வரை மனைவியாக இருந்தவள், இன்றைக்குக் காதல் மனைவியாகத்  தெரிகிறாள். இது என்னையும் என் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறது. 

பொதுவாகக் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் இன்றைய தலைமுறையினர் கவனக்குறைவாக இருக்கிறார்கள். பொறுப்பில்லை என்று அவர்கள் எப்போதும் புகார் பட்டியலையே வாசிக்கிறார்கள். இதுதான் முதியோரின் கவலைக்குக் காரணம். ஆனால் இன்றைய தலைமுறையினர் வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும், தைரியமாகவும் இருக்கிறார்கள். இந்தக் குணநலன்கள்தான் இளைஞர்களைச் சாதிக்கவும் வைக்கிறது. முதியோர் இளம்தலைமுறையினரிடம் அனுசரித்துச் சென்றால், அவர்களும் முதியோரை அனுசரித்துச் செல்வார்கள். எனவே, அடுத்த தலைமுறையுடன் அன்பாகவும், அரவணைப்பாகவும் இருங்கள். 

கோபப்படுவதால் நாம் தனிமைப் படுத்தப்படுவோம். விளைவு நமக்குத்தான் தேவையற்ற கவலை, வேதனை, துக்கம் எல்லாம். என்னுடைய மருமகள் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தலைகுனிவும், கௌரவப் பிரச்னையும் இல்லை. என் மகன் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பெண்ணைக் காதலிக்கும் விஷயம் தெரிந்தபோது, நான் வேறுமாதிரி சிந்தித்திருந்தால், கட்டுக்கடங்காத கோபம் வந்து, என் மகனை வெட்டிப்போட்டிருப்பேன். அப்படியானால் இன்றைக்குச் சிறையில்தான் இருந்திருப்பேன். ஆனால் என் மருமகளை முழுமனதோடு ஏற்றுக்கொண்டேன். இதனால் எனக்குப் புது சொந்தங்கள் கிடைத்திருக்கிறார்கள். என் சம்மந்தி என்னைப் பார்த்தவுடன் கட்டிப்பிடித்துக்கொள்வார். அந்த நொடி அனைத்தையும் மறந்துவிட்டு அவரிடம் என் அன்பைப் பரிமாற்றிக்கொள்வேன். நாம் எப்படி வாழ்வைப் பார்க்கிறோம் என்பதில்தான் நம்முடைய சந்தோஷமான வாழ்க்கை இருக்கிறது" என்றார் எஸ்.எஸ்.ஜவஹர்.