77 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்! - கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பரிசோதனையில் உறுதி | 77 women affected cancer, reveals testing in KMC

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (30/01/2019)

கடைசி தொடர்பு:19:20 (30/01/2019)

77 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்! - கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பரிசோதனையில் உறுதி

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நவீன கருவிகள் மூலம் இதுவரை 77 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கீழ்ப்பாக்கம்

இன்றைய சூழலில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்து உறுதிபடுத்தவும், அதைத் தடுக்கவும் நவீன கருவிகள் வந்துவிட்டன. இந்நிலையில், சமீபத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. 

சுமார் 4.5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் புற்றுநோயைக் கண்டறியும் அதிநவீன கருவிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கருவிகள் புற்றுநோய்க்கான அறிகுறிகள் மற்றும் புற்றுநோய் உருவாவதற்கு முந்தைய நிலையைக் கண்டறியும் திறன் கொண்டவை.

கீழ்ப்பாக்கம் இதில் `டிஜிட்டல் மாமோகிராம்’ என்ற கருவி மூலம் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறி உள்ளதா என்பதை 15 நிமிடங்களில் மிக எளிதாகக் கண்டறிந்து விடலாம். இந்த மையத்தில் பரிசோதனை செய்துகொள்ள ஏழைகள் கட்டணம் எதுவும் செலுத்தத்  தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏழைகளுக்கு பெருமளவில் பயனளிக்கும் இந்த சிகிச்சை மையம் குறித்து கல்லூரி டீன் வசந்தாமணியிடம் கேட்டபோது, "புற்றுநோயைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை நவீன கருவிகள் மூலம் 1868 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதில் 77 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதுதவிர மேலும் 66 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்’’ என்றார்.