ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்தால், மறதி நோயைத் தடுக்கலாம்! - ஆய்வு முடிவு | To cure Amnesia, first cure Blood pressure, reveals study

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (30/01/2019)

கடைசி தொடர்பு:19:40 (30/01/2019)

ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்தால், மறதி நோயைத் தடுக்கலாம்! - ஆய்வு முடிவு

``கண்ணாடியை எங்க வச்சேன்னு தெரியல, மறந்துட்டேன்... கொஞ்சம் கண்டுபிடிச்சு கொடுக்கிறியா?’’ - இப்படி வயதானவர்கள் பலர் சொல்லக் கேட்டிருப்போம். முதுமைக் காலத்தில் இத்தகைய மறதிகள் ஏற்படுவது இயல்புதான் என்று நாம் அவற்றையெல்லாம் கடந்து சென்றிருப்போம். ஆனால், இப்படியான மறதிகளை எளிமையாகத் தடுக்க முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

மறதி

ரத்த அழுத்தம் சீராக இருந்தால் பல்வேறு பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்று அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ரத்த அழுத்தம் உள்ள வயதானவர்கள் மத்தியில் அமெரிக்க மருத்துவ சங்கம் (American Medical Association) சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், வயதானவர்கள் தங்களது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம் அறிவாற்றல் குறைபாடான `எம்.சி.ஐ’ (Mild cognitive impairment) என்ற பிரச்னையைத் தடுக்க முடியும் என்பது கண்டறியப்பட்டது. கூடுதல் தகவலாக, ரத்த அழுத்தத்துக்கான சிகிச்சையை முறையாகப் பின்பற்றுபவர்களுக்கு, ஞாபகமறதி 15 சதவிகிதம் தடுக்கப்படுவது தெரியவந்துள்ளது.

ரத்த அழுத்தம்

அறிவாற்றல் சார்ந்த பிரச்னையான `எம்.சி.ஐ’ மறதி நோயின் முக்கிய அறிகுறி என்பதால், அந்தப் பிரச்னைகளும்கூட முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். 50 வயதைத் தாண்டிய, உயர் ரத்தஅழுத்தப் பிரச்னை உள்ள 9,362 பேர் தாமாக முன்வந்து இந்த ஆய்வில் பங்கேற்றனர். அவர்களில், சர்க்கரைநோய் பாதிப்பு இல்லாதவர்கள் மற்றும் பக்கவாதத்துக்கான குடும்பப் பின்னணி எதுவும் இல்லாமல் இருப்பவர்கள் மட்டும் கண்டறியப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 

ரத்த அழுத்தம்

50 வயதுக்கு மேற்பட்ட 75 சதவிகிதம் பேரைப் பாதித்துள்ள உயர் ரத்தஅழுத்தப் பிரச்னை, `எம்.சி.ஐ' மற்றும் ஞாபகமறதி பிரச்னை ஏற்படுவதற்கான மிக முக்கியக் காரணி என்பது, முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. அதனாலேயே 50 வயதைக் கடந்தவர்கள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர்களில் ஒருவரான வில்லியம்சன் என்பவர் பேசும்போது, ``தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு ஒருவர் தங்களது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால், அவரது இதயம் மட்டுமன்றி, மூளையின் செயல்பாடுகளும்கூட பாதுகாக்கப்படும்’’ என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க