செயற்கை மூட்டு உபகரணங்கள் பாதுகாப்பானதா? - ஓர் அலசல்! | A story about the Artificial limb equipment

வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (31/01/2019)

கடைசி தொடர்பு:18:27 (31/01/2019)

செயற்கை மூட்டு உபகரணங்கள் பாதுகாப்பானதா? - ஓர் அலசல்!

செயற்கை மூட்டுக் கருவிகள் 20 ஆண்டுகளிலிருந்து 25 ஆண்டுகள் வரை பயனளிக்கும். இயக்கத்தைப் பொறுத்து சிலருக்குப் பயன்பாட்டுக் காலம் மாறும். செயற்கை மூட்டுகளும் தேயும் என்பதை உணரவேண்டும்.

செயற்கை மூட்டு உபகரணங்கள் பாதுகாப்பானதா? - ஓர் அலசல்!

ல்வேறு மருத்துவப் பொருள்களை விற்பனை செய்து வரும் பிரபல மருத்துவ நிறுவனம் ஒன்று, இந்தியாவிலேயே செயற்கை எலும்பு மூட்டுகளைத் தயாரித்துச் சந்தைப்படுத்தியது. `உயர்தொழில்நுட்பத்திலான செயற்கை மூட்டு' என்று மருத்துவர்களும் நோயாளிகளுக்குப் பரிந்துரைத்ததால் சுமார் 4,700 பேர் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை மூட்டுகளைப் பொருத்திக்கொண்டனர். இவர்களுக்குக் காலப்போக்கில் நடப்பதற்கும், இயங்குவதற்கும் சிரமம் ஏற்பட்டது. சிலர் அந்த நிறுவனத்தின் செயற்கை மூட்டுகளைப் பொருத்திய பின்னர், நிரந்தரமாக நடக்க முடியாத நிலைக்குச் சென்றனர். இதையடுத்து, அந்த நிறுவனம் அந்தச் செயற்கை மூட்டு உபகரணங்களைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டது. உபகரணத்தைப் பொருத்தியவர்கள் அந்த நிறுவனத்திடமிருந்து நிவாரணம் கேட்டுப் போராடி வருகின்றனர். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

செயற்கை மூட்டு

செயற்கை மூட்டுகள் பொருத்துவது ஆபத்தானதா, அவற்றைப் பொருத்தியவர்கள் இயல்பாக இருக்க முடியுமா, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்தக் கருவிகள் பாதுகாப்பானவையா? 

எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் அருண் கண்ணனை அணுகினோம். விரிவாகப் பேசினார்.

``கை, கால், இடுப்பு உள்ளிட்ட மூட்டுகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் பதிலாக செயற்கை மூட்டுக் கருவி பொருத்துவதையே `எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை' என்று குறிப்பிடுகிறோம். இடுப்பு எலும்பு, தோள்பட்டை மூட்டு, முழங்கை, முழங்கால் மூட்டு ஆகியவற்றில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் பதிலாக செயற்கை மூட்டுப் பொருத்த முடியும். அரிதாக, கணுக்கால் மூட்டு, கைகளிலுள்ள சின்னச் சின்ன மூட்டுகளிலும் செயற்கை உபகரணத்தைப் பொருத்தலாம்.

உடலில் உள்ள மூட்டுகள் இயல்பாகச் செயல்பட எலும்புகளுக்கு இடையே சவ்வுகள் இருக்கும். இந்தச் சவ்வுகள் தேய்ந்து, இரண்டு எலும்புகள் உராய்வதுதான் தேய்மானம் என்று கூறப்படுகிறது. வயதாவதால் எலும்புகளுக்கு இடையே இருக்கும் சவ்வுகள் தேய்ந்துபோகும் வாய்ப்பு அதிகம். இதனால் எலும்புகள் ஒன்றோடொன்று உராய்ந்து  வலி, வீக்கம், நடப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும். முடக்குவாதம் மற்றும் அதுசார்ந்த நோய்களாலும் மூட்டுகள் பாதிக்கப்படும். 

மூட்டு

மிகவும் சிரமப்பட்டு நடக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போதும், வலி அதிகமாகும்போதும் செயற்கை மூட்டைப் பொருத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்தியர்களைப் பொறுத்தவரை முழங்கால் மூட்டு, இடுப்பு எலும்பு மூட்டில்தான் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு செயற்கை மூட்டுகள் பொருத்தப்படுகின்றன. 

வயதானவர்கள் கீழே விழுவதாலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிந்தாலும் அவர்களுக்குச் செயற்கை இடுப்பு எலும்பு பொருத்துவது அவசியமாகிறது.  

மூட்டு

மருத்துவர் அருண் கண்ணன்சில வகையான புற்றுநோய்களுக்குச் செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படலாம். கால்களில் ஏற்படும் புற்றுநோயால் முழங்காலுக்குக் கீழ் அல்லது மேல் உள்ள எலும்பு பாதிக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயங்களில் அந்த எலும்பையே எடுத்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்படும். அதுபோன்றவர்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றிவிட்டு அந்தப் பகுதியில் செயற்கை மூட்டுகள் பொருத்தப்படும். 

`எலும்பு மூட்டு மாற்று சிகிச்சை மேற்கொள்வதால் இயல்பாக நடக்க முடியாதோ' என்று சிலர் அச்சப்படுவார்கள். செயற்கை மூட்டுப் பொருத்துவதே வலியின்றி இயல்பாக நடப்பதற்குத்தான். எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், அடுத்த நாளே எழுந்து நிற்க முடியும். ஒரு மாதத்துக்கு வாக்கர், வாக்கிங் ஸ்டிக் போன்றவற்றின் துணையோடு நடக்கலாம். அதன்பிறகு, சுயமாக நடக்கத் தொடங்கலாம். செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள் குத்துக்காலிட்டு உட்கார முடியாதே தவிர, மாடிப்படிகளில் ஏறி, இறங்கலாம், நாற்காலியில் எளிதாக அமரலாம்.

மூட்டு சிகிச்சை

செயற்கை மூட்டுக் கருவிகள் 20 ஆண்டுகளிலிருந்து 25 ஆண்டுகள் வரை பயனளிக்கும். இயக்கத்தைப் பொறுத்து சிலருக்குப் பயன்பாட்டுக் காலம் மாறும். செயற்கை மூட்டுகளும் தேயும் என்பதை உணரவேண்டும். ஆகவே, சுமார் 30 வயதுள்ள ஒருவருக்குச் செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை மேற்கொண்டால், அடுத்து 20 வருடங்கள்  கழித்து எந்தப் பகுதி தேய்மானம் அடைந்துள்ளதோ அந்த இடத்தில் மீண்டும் மாற்று சிகிச்சை அவசியமாகலாம். அறுவை  சிகிச்சையின்போது ரத்தம் வீணாகாமல் தடுப்பதற்கும் வழிமுறைகள் உள்ளன. ஆகவே, வயதானவர்களுக்கும் இந்தச் சிகிச்சை பாதுகாப்பானதாக இருக்கும்.

மூட்டு சிகிச்சை - எக்ஸ்ரே

எலும்பு மூட்டு மாற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படும் செயற்கை மூட்டு உபகரணங்கள் பல தரத்தில் கிடைக்கின்றன. குறைந்தது 20 ஆண்டுக்காலம் பயன்பாட்டில் உள்ள, ஏற்கெனவே பயன்படுத்தியவர்களிடமிருந்து புகார்கள் இல்லாத செயற்கை மூட்டுகளைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. பெரும்பாலும் இதுமாதிரியான கருவிகள் வெளிநாட்டிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் செயற்கை எலும்பு மூட்டு உபகரணங்களின் தரத்தை, குறைந்தது 20 ஆண்டுகளாவது பயன்படுத்திப் பார்த்த பின்னர்தான் அறிந்துகொள்ள முடியும். அதன் பிறகே நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் அருண் கண்ணன்.


டிரெண்டிங் @ விகடன்