பால் விஷமாகுமா? - வாட்ஸ்அப்-பில் பரவும் வதந்தி உண்மையா? | Is milk turned into poison - doctor explains the fact

வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (02/02/2019)

கடைசி தொடர்பு:19:51 (02/02/2019)

பால் விஷமாகுமா? - வாட்ஸ்அப்-பில் பரவும் வதந்தி உண்மையா?

'சமீபத்தில் ஒரு வாட்ஸ்-அப் செய்தி, மனதை உலுக்கியது. '4 குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர், தன் குழந்தைகளுக்கு இருமல் மருந்தை பாலில் கலந்துகொடுத்துள்ளார். அதைக் குடித்துவிட்டு உறங்கச் சென்ற 4 குழந்தைகளும் அடுத்த நாள் காலையில் படுக்கையில் இறந்துகிடந்தனர். மருந்து என்றால் குழந்தைகள் குடிக்க மாட்டார்கள் என்பதால், பாலில் கலந்து கொடுத்துள்ளார் அந்தத் தாய். சோதனை செய்ததில், இருமலுக்கான மருந்தைப் பாலில் கலந்து கொடுத்ததால் அது விஷமாக மாறி, மரணத்தை ஏற்படுத்தியது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், பாலில் எந்த ரசாயன மருந்தையும் கலந்து குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு குடித்தால், அது கண்டிப்பாக விஷமாக மாறும்' என்பதுதான் அந்த வாட்ஸ்-அப் செய்தி.

வதந்தி, வாட்ஸ்அப்

இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் உண்மையானதா, வதந்தியா என்று ஆராய்வதில் யாருக்கும் பிரயோஜனமில்லை. எனவே, அந்தச் சம்பவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த, பாலில் இருமல் மருந்தைக் கலந்து கொடுத்ததால் விஷமாக மாறுமா என்ற தகவலின் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொள்ள, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலத் துறை இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரனிடம் பேசினோம்:மருத்துவர் ரவிச்சந்திரன்

இருமல் மருந்தை (Cough Syrup) பாலில் கலந்துகொடுப்பதால் நிச்சயம் உயிரிழப்பு ஏற்படாது. பாலில் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுவதால், அதில் மருந்தைக் கலந்து கொடுக்கும்போது உடலில் வேலை செய்யாமல்போகும். அதனால், மருந்தில் உள்ள சத்துகளை உடல் கிரகித்துக்கொள்ளாமல், அப்படியே கழிவுடன் சேர்ந்து மருந்தையும் வெளியேற்றிவிடும். இதனால், எந்த உடல்நலப் பிரச்னைக்கு மருந்து கொடுக்கப்பட்டதோ, அந்தப் பிரச்னை சரியாகாது.

 குழந்தைகளுக்கு இருமல் மருந்து தேவையில்லை. பெரும்பாலான மருத்துவர்கள், இருமல் மருந்தைப் பரிந்துரைப்பதும் இல்லை. இருமலை உருவாக்கும் சளித் தொந்தரவு எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தைக் கண்டறிந்து, அதைப் போக்குவதற்கு ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட மாத்திரைகள்தான் பரிந்துரைப்படுகின்றன. அந்த மாத்திரைகள் உடலில் வேலைசெய்து, சளிப் பிரச்னைக்குத் தீர்வளிக்கும். அப்போது, இருமலும் தானாக நின்றுவிடும். ஒருவேளை குழந்தை அதிகமாக இருமினால், இளஞ்சூடான தண்ணீரில் சிறிது தேன் கலந்து கொடுக்கலாம். இது இருமலுக்குத் தீர்வில்லை. ஆனால், இந்தக் கலவை தொண்டையை இதமாக்கும். 

பால், நஞ்சு, விஷம்

காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு எல்லாம் தற்போது மருந்துகள் (Syrup)வந்துள்ளன. அவற்றையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அனைத்திலும், ஏற்கெனவே இனிப்புச் சுவை சேர்க்கப்பட்டிருக்கும். அதனால், அவற்றை நேரடியாகவே குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். தண்ணீர், பால் போன்ற எதிலும் கலந்து கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. மாத்திரைகளிலும் தற்போது 'டிஸ்போஸபிள்' (Disposable) வகை மாத்திரைகள் வந்துள்ளன. அவற்றைத் தண்ணீரில் அல்லது தேனில் கரைத்து குழந்தைக்குக் கொடுக்கலாம். பாலில் எதையும் கரைத்துக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது" என்றார் அவர்.