வேலைக்குச் செல்லும் பெண்கள் மன அழுத்தம் தவிர்க்க எளிய வழிகள்! | Easy ways for working women to avoid depression

வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (04/02/2019)

கடைசி தொடர்பு:12:51 (04/02/2019)

வேலைக்குச் செல்லும் பெண்கள் மன அழுத்தம் தவிர்க்க எளிய வழிகள்!

``வேலைக்குச் செல்லும் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவில் மன அழுத்தத்துக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாகிறார்கள். இது, பல்வேறு ஆய்வுகளின் மூலம்  வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வேலைக்குச் செல்லும் பெண்கள் மன அழுத்தம் தவிர்க்க எளிய வழிகள்!

`உத்தியோகம் புருஷ லட்சணம்’என்ற பழமொழியெல்லாம் வழக்கொழிந்து நெடுநாளாகிவிட்டது. ஆம்! இன்றைக்கு ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேலைக்குச் செல்கிறார்கள். அதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டாலும் பெண்களைப் பொறுத்தவரை வீட்டிலும் வேலை பார்த்துவிட்டு அலுவலகத்திலும் வேலை செய்யவேண்டிய கட்டாயம் இன்னமும் இருக்கிறது. இதனால் அவர்கள் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, உடலளவிலும் மனதளவிலும் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று!

வேலைக்குச் செல்லும் பெண்கள் - மன அழுத்தம்

`வேலைக்குச் செல்லும் ஆண்களைவிட 18 சதவிகிதம் பெண்களே அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். இதில் இரு குழந்தைகளைப் பெற்ற 40 சதவிகிதம் பெண்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கிறது’ என்று இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது. சுமார் 6,000-க்கும் அதிகமான பெண்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வேலைக்கு செல்லும் பெண்கள்

``உலகமயமாக்கலுக்குப் பிறகு, ஐ.டி துறையில் ஏற்பட்ட மாற்றம் பெண்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. பொருளாதார ரீதியாக பெண்கள் முன்னேற்றம் அடைந்தாலும், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு வேலை, ஷிப்ட், குடும்பம், குழந்தை வளர்ப்பு, இ.எம்.ஐ செலுத்த வேண்டிய கடமை போன்ற காரணிகளால் பெண்கள் கடும் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர்’’ என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன். `வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படக் காரணம் என்ன... மன அழுத்தத்திலிருந்து தப்பிப்பது எப்படி?’ என்பது குறித்தும் ஆலோசனை தருகிறார்.

``வேலைக்குச் செல்லும் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவில் மன அழுத்தத்துக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாகிறார்கள். இது, பல்வேறு ஆய்வுகளின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நம்முடைய தமிழ்ச்சமூகம் தொடர்ச்சியாகப் பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டே வந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் கல்வி, வேலைவாய்ப்பு  மற்றும் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக, பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களுக்கு ஈடாகப் பெண்களும் பணியாற்றும் சூழல் உருவாகியிருக்கிறது.

பெண்கள்

பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால், அது குடும்பத்தில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு பெண் வேலைக்குச் செல்வதன்மூலம், பொருளாதார ரீதியாக அவர் தன்னிறைவு பெறுகிறார். இதனால், அவர் குடும்பத்தைச் சார்ந்திருக்காமல் சொந்தக்காலில் நிற்கும் நிலைக்கு உயர்ந்துநிற்கிறார். இருந்தாலும் பெண்கள்மீது குடும்ப அமைப்புகள் வைத்திருக்கும் பழைமைவாதக் கருத்துகள் மாறவில்லை. அதற்குரிய பக்குவமும் குடும்ப அமைப்புகளில் உருவாகவில்லை. பெண்ணை ஓர் உடைமையாகவே பார்ப்பதால் முரண்பாடும், சிக்கலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படுகிறது.

வேலைக்கு செல்லும் பெண்கள்

பொதுவாகவே ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு மனச்சோர்வு அதிகமாக இருக்கும். மாதவிடாயின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் இயல்பைவிட அதிகமாகவே  கோபம், வருத்தம், சோர்வு இருக்கும். பெண்ணின் பொருளாதாரத்தை ஏற்றுக்கொள்ளும் குடும்பம், அவளுக்குத் தரவேண்டிய சுதந்திரத்தைத் தருவதில்லை. மாறாக, அவளை  இறுக்கமான சூழலில் வைத்திருக்கிறது. அதுதான், வேலைக்குச் செல்லும் பெண்களை மனஅழுத்தத்தில் தள்ளிவிடுகிறது. அலுவலக வேலைகளை முழுமையாகச் செய்யவேண்டிய அதேநேரத்தில், குடும்பப் பொறுப்புகளையும் முழுமையாகச் செய்யவேண்டுமென்று பெண்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். அப்போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.  

`வேலைக்குச் செல்லும் பெண்களில் குறிப்பாக குழந்தை பெற்றவர்கள்தான் அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்’என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அவர்கள் குழந்தையை டே கேரிலோ, அதற்கான பள்ளிகளிலோ விட்டுவிட்டு வேலை முடிந்ததும் திரும்பவந்து அழைத்துச் செல்லவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

வேலைக்கு செல்லும் பெண்கள்

வேலைக்குச் செல்லும் பெண்கள் மனஅழுத்தத்திலிருந்து விடுபட, அவர்கள் மட்டும் முயன்றால் போதாது; குடும்ப அமைப்பும் உதவ முன்வரவேண்டும். பெண்களுக்கும் சுய சிந்தனைகள், விருப்பு, வெறுப்புகள் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்ணுக்குரிய அங்கீகாரம், அன்பு, பாராட்டு போன்ற அனைத்து உரிமைகளையும் குடும்ப உறுப்பினர்கள் தரவேண்டியது அவசியம். ஏற்கெனவே, பெண்ணைச் சார்ந்திருக்கும் சித்தாந்தங்களையெல்லாம் தளர்த்திக்கொள்ள வேண்டும். 

பெண்கள் வேலைபார்க்கும் இடங்களிலும் அவர்களை சற்று இலகுவாக நடத்த வேண்டும். ஓர் அலுவலகத்தில் அதிகமான பெண்கள் வேலை பார்க்கிறார்கள் என்றால், அங்கே ஒரு டே கேரை உருவாக்கி, குழந்தைகளை அங்கேயே பராமரிக்கும் வழிமுறையை செய்துகொடுக்கலாம். அவர்களுக்குச் சாதகமான வேலைநேரத்தைக்  கொடுக்கலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியாற்றுவதிலிருந்து கொஞ்சம் விலக்கு அளிக்கலாம். வழக்கமான விடுமுறைகளைத்தாண்டியும் சலுகை கொடுக்கலாம். 

வேலைக்கு செல்லும் பெண்கள்

இவைதவிர, பெண்களுக்கும் தங்களைப்பற்றிய புரிதல் தேவை. பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு ஏற்படும் உடல், மனரீதியான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அவை தானாகவே சரியாகிவிடும் என்கிற மனநிலையிலேயே இருப்பார்கள். காரணம், அதற்கு முக்கியத்துவம் தரமுடியாத அளவுக்கு வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆகவே, மனஅழுத்தத்தில் சிக்கும் பெண்கள், அதைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும். அப்படி பகிர்ந்துகொண்டால் மனஅழுத்தம் குறையும். அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படும்” என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.


டிரெண்டிங் @ விகடன்