அதிக பற்பசையால் குழந்தைகளின் பற்களுக்கு ஆபத்து! - ஆய்வில் தகவல் | Over usage of Toothpaste affects Teeth

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (04/02/2019)

கடைசி தொடர்பு:18:55 (04/02/2019)

அதிக பற்பசையால் குழந்தைகளின் பற்களுக்கு ஆபத்து! - ஆய்வில் தகவல்

'பற்பசையை அதிகம் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கு அதிக பல் நோய்கள் வருகின்றன' என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், பல் நோய்கள் தொடர்பாக சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தினர். இதற்காகத் தாமாகவே பல் துலக்கும் பழக்கம் கொண்ட மூன்று முதல் 15 வயதுக்குட்பட்ட 5000 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்தனர். அதில், மூன்று வயதைத் தாண்டிய பெருவாரியான குழந்தைகள், சுயமாகப் பல் துலக்குவதையே விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. 

பல் - குழந்தைகள்

அப்படி பல் துலக்கும்போது, அளவுக்கதிகமான டூத்பேஸ்ட்டை அவர்கள் உபயோகப்படுத்துகின்றனர் என்பதும், அதில்  பெரும்பகுதியை சாப்பிட்டுவிடுவதால், பற்சொத்தை, நிறம் மாறுதல், பற்களின் அமைப்பு மற்றும் அடர்த்தியில் பாதிப்பு ஏற்பட்டு, மஞ்சள்  அல்லது வெள்ளை நிறமாக மாறுவதையும்  கண்டறிந்துள்ளனர். 

இதில், மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட 40 சதவிகிதத்துக்கும்  மேற்பட்ட குழந்தைகள், டூத்பிரஷின் பெரும்பாலான பகுதியில்  பேஸ்ட்டை  நிரப்பிப் பல் துலக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது தெரியவந்தது.    

பற்கள்

பற்சொத்தை  மற்றும் இதர பாதிப்புகளுக்குக் காரணம், பேஸ்டிலுள்ள ஃப்ளோரைடு அமிலம்தான். தண்ணீர் மற்றும் மண்ணில் இயற்கையாகவே இருக்கும் ஃப்ளோரைடை அளவோடு பயன்படுத்தினால்தான் பற்களுக்கு நல்லது. தேவையான அளவு ஃப்ளோரைடு உடலுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர, மற்ற அனைத்து வயதினருமே தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே, சிறு குழந்தைகள், ஒரு அரிசி அளவு பேஸ்ட்டும், மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், பட்டாணியின் அளவைவிடக் குறைந்த அளவு பேஸ்ட்டும்தான் உபயோகிக்க வேண்டும் என ஆய்வின் முடிவில்  பரிந்துரைத்துள்ளனர்.

''சில குழந்தைகள், தானே பல் துலக்குகிறேன் என அடம்பிடிக்கக் காரணம், பேஸ்ட்டின் சுவைதான். அளவுக்கு மீறி பேஸ்ட் பயன்படுத்துவதால், ஃப்ளோரைடு அதிகமாக உடலுக்குள் சென்று பற்களில் பிரச்னைகளை  ஏற்படுத்துகிறது. எனவே, குழந்தைகள் பேஸ்ட்டை அதிகம் பயன்படுத்தாமல் தடுக்கவேண்டியது பெற்றோரின் கைகளில்தான் இருக்கிறது'' என்கிறார், ஆய்வுக்குழுவைச் சேர்ந்த மேரி. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க