`நள்ளிரவில் வாகனம் ஓட்டும்போது தூங்கிவிடுகிறோம்!’ - 53 சதவிகித ஓட்டுநர்கள் ஒப்புதல் | Truck, car drivers Falling asleep during night

வெளியிடப்பட்ட நேரம்: 21:24 (05/02/2019)

கடைசி தொடர்பு:21:24 (05/02/2019)

`நள்ளிரவில் வாகனம் ஓட்டும்போது தூங்கிவிடுகிறோம்!’ - 53 சதவிகித ஓட்டுநர்கள் ஒப்புதல்

நான்கில் ஒருவர், 'தூங்கியபடியே வாகனத்தை ஓட்டியிருப்பதாக'த் தெரிவித்துள்ளனர்.

'வாகனத்தை நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ஓட்டும்போது தூங்கிவிடுவதாக, பெரும்பாலான லாரி, கார், பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், மத்திய போக்குவரத்துத் துறையின் சார்பில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. 15 மாநிலங்களைச் சேர்ந்த 5,174 லாரி ஓட்டுநர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 

ஓட்டுநர்கள் மதுப்பழக்கம்

ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் ஆறு பேரில் ஒருவர், 'மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால்தான் அதிக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன' என்று தெரிவித்துள்ளனர். நான்கில் ஒருவர், 'தூங்கியபடியே வாகனத்தை ஓட்டியிருப்பதாக'வும் தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் 20 சதவிகிதம் பேர் லாரி ஓட்டுநர்கள், 20 சதவிகிதம் பேர் டாக்ஸி ஓட்டுநர்கள், 19 சதவிகிதம் பேர் பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

டாக்ஸி

53 சதவிகிதம் பேர் நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணி வரை வாகனம் ஓட்டும் சமயங்களில் தூங்கிவிடுவதாகவும், 10 சதவிகிதம் பேர் மதிய உணவுக்குப் பிறகு தூங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.