ஜீரோ ஸ்டேஜிலேயே புற்றுநோயைக் கண்டறியலாம்..! | Breast cancer can be Identified in Zero Stage itself

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (07/02/2019)

கடைசி தொடர்பு:17:15 (07/02/2019)

ஜீரோ ஸ்டேஜிலேயே புற்றுநோயைக் கண்டறியலாம்..!

முதல் நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்துவிட்டால், மிக எளிதாகச் சரிசெய்து விடலாம். ஆனால், முதல் நிலைக்கும் முன்னால் ஒரு நிலை இருக்கிறது. Pre Invasive Stage எனப்படும் அந்த நிலை, ஜீரோ ஸ்டேஜ் எனப்படுகிறது.

ஜீரோ ஸ்டேஜிலேயே புற்றுநோயைக் கண்டறியலாம்..!

குணப்படுத்த முடியாத நோய்களின் பட்டியலிலிருந்து மெள்ள மெள்ள விலகிக்கொண்டிருக்கிறது புற்றுநோய். புற்றுநோய்க்கான திசு வளர்ச்சியில், மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. அதன் முதல் நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால் மிக எளிதாகச் சரிசெய்து விடலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஆனால், முதல் நிலைக்கும் முன்னால் ஒரு நிலை இருக்கிறது. `ப்ரீ இன்வேசிவ் ஸ்டேஜ்'  (Pre Invasive Stage) எனப்படும் அந்த நிலை, `ஜீரோ ஸ்டேஜ்' என்றும் அழைக்கப்படுகிறது. 

 

ஜீரோ ஸ்டேஜ் புற்றுநோய்


``புற்றுநோய் வகைகளில் மார்பகப் புற்று மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஜீரோ ஸ்டேஜிலேயே எளிதாகக் கண்டறிந்துவிடலாம்" என்கிறார் புற்றுநோயியல் மருத்துவர் கலைச்செல்வி. 
புற்றுநோயின் ஜீரோ ஸ்டேஜ் குறித்து அவரிடம் பேசினோம். 
``புற்றுநோயில், பேஸ்மென்ட் ஸ்டேஜ் என்றொரு நிலை உண்டு. அதுவரை புற்றுநோய்க்கான திசு வளர்ச்சி எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கும். அது தன் எல்லையைத் தாண்டும்போது, முதல் நிலை பாதிப்பை ஏற்படுத்தும். மார்பகப் புற்றுநோயில் மருத்துவ முறைப்படி ஜீரோ நிலையில் `டி.சி.ஐ.எஸ்.' (Ductal Carcinoma In Situ - DCIS) அல்லது `எல்.சி. ஐ. எஸ்' (Lobular carcinoma in situ - LCIS) என இரண்டு வகைகள் உள்ளன.  

பொதுவாகப் புற்றுநோய் திசுக்கள் உடலில் உருவாகத் தொடங்கியதும், சில காலங்கள் வரை அதன் வளர்ச்சி நீளும். அது வளர்ச்சியடைந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக உடலின் மற்ற பகுதிக்கு ஊடுருவத் தொடங்கும். ஜீரோ நிலை பாதிப்புக்கான பரிசோதனையில், எந்த இடத்தில் புற்றுநோய் உருவாகிறதோ, அந்த இடத்திலேயே அதன் வளர்ச்சி கண்டறியப்படும். அப்போதே திசுக்களுக்கான சிகிச்சையை முறையாக அளித்துவிட்டால், புற்றுநோயை மிக எளிதாகச் சரிசெய்துவிடலாம்.

ஜீரோ ஸ்டேஜ் புற்றுநோய்


ஜீரோ நிலை பாதிப்பைக் கண்டறிய எம்.ஆர்.ஐ மற்றும் மாமோகிராம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பெரும்பாலானவர்களுக்கு மார்பகப் புற்றுநோயின் முதல்நிலை பாதிப்பு, மார்புக்காம்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும். ஆக, ஜீரோ நிலை பாதிப்பு பால் சுரக்கும் குழாய்களிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ ஏற்படலாம். மார்பகம் முழுவதையும் மாமோகிராம் மூலம் பரிசோதிக்கும்போது, பால் சுரக்கும் குழாய்களில் பாதிப்பு கண்டறியப்பட்டால் அது `டி.சி.ஐ.எஸ்' நிலை பாதிப்பு என்றும், மார்பகத்தின் வேறு ஏதாவதொரு பகுதியில் கண்டறியப்பட்டால், அது `எல்.சி ஐ.எஸ்' நிலை பாதிப்பு என்றும் கூறப்படும்.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய்

இவற்றை அந்த நிலையிலேயே சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அப்பகுதி முழுவதும் அத்திசுக்கள் பரவத்தொடங்கி முதல்நிலை பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கிவிடும். எனவே, ஜீரோ நிலையில் தெரிய வரும்போது அதற்கான சிகிச்சைகளை உடனடியாக முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாகப் புற்றுநோயாளிகளுக்கு மார்பகத்திலுள்ள புற்றுநோய் செல்களை நீக்கப்பட்டதும், `ஆக்ஸிலரி லிம்ப் நோட்' (Axillary Lymph Node) என்ற அறுவைசிகிச்சை செய்யப்படும். ஜீரோ நிலை பாதிப்பின்போதே சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு, அந்த அவசியமும்கூட கிடையாது. 

புற்றுநோயியல் துறை மருத்துவர் கலைச்செல்விஜீரோ நிலையில் கண்டறியப்படும் மார்பகப்புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பொறுத்தவரை திசுக்களின் வளர்ச்சியைப் பொறுத்து, `மேஸ்டெக்டாமி' (Mastectomy) எனப்படும் மார்பகத்தின் பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கும் சிகிச்சையோ அல்லது கதிரியக்க சிகிச்சையோ (White Local reflection with Radiation) அளிக்கப்பட்டு பிரச்னை சரிசெய்யப்படும். சிகிச்சைகள் அனைத்தும், `எக்ஸ்டென்சிவ் இன்டூ கார்சினோமா' (Extensive into Carcinoma) எனப்படும் புற்றுநோய் செல்களுக்கான தொடக்கக்கால வளர்ச்சி உறுதிசெய்யப்பட்ட பிறகே தொடங்கப்படும். வெகுசிலருக்கு மட்டுமே மார்பகத்தின் பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்படும் என்பதால், பயப்படத் தேவையில்லை.

இவைதவிர, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகரிப்பால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் ஹார்மோன் சமநிலைக்கான சிகிச்சைகள் அளிக்கப்படும்.
மார்பகப் புற்றுநோயைப் போலவே, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதித்தவர்களுக்கும் ஜீரோ நிலையைக் கண்டறிய `பாப் டெஸ்ட்' (Pap Test) உள்ளிட்ட பரிசோதனைகள் இருக்கின்றன. ஜப்பானில் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். எனவே அங்கு அதுகுறித்த விழிப்புஉணர்வும் அதிகம். எண்டோஸ்கோபி மூலம் வயிற்றுப் புற்றுநோயை ஜீரோ நிலையில் கண்டறியும் வழக்கம்கூட அங்கு உள்ளது" என்கிறார்.
புற்றுநோயைப் பொறுத்தவரை, ஜீரோ நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிவது, மிகவும் நல்லது. உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் வெறும் 5 சதவிகிதப் பெண்களே மார்பகப் பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர். மார்பகப் புற்றுநோய் குறித்த சரியான விழிப்புஉணர்வு இல்லாமல் இருப்பதே அதற்கான காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை என்றதும் பல பெண்கள் பயப்படுகின்றனர். முதலில் பயத்தை விடவேண்டும். புற்றுநோய்க்கான இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த, முறையான பரிசோதனைகளைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை செய்ய வேண்டியது அவசியம்! 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்