இளம் பருவத்தினரை பாதிக்கும் `இம்மெச்சூர் லவ் அஃபேர்'..! பெற்றோர் செய்ய வேண்டியது என்ன? | How to get over the immature love affairs?

வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (10/02/2019)

கடைசி தொடர்பு:12:53 (10/02/2019)

இளம் பருவத்தினரை பாதிக்கும் `இம்மெச்சூர் லவ் அஃபேர்'..! பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

"இளம்வயது பிள்ளைகளுக்கு ஏற்பட்டிருக்கும் மனஅழுத்தம், மனப்பதற்றம் குறித்து பெரும்பாலான பெற்றோருக்குத் தெரிவதில்லை. பல குடும்பங்களில் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால் தங்களது மகன், மகள் குறித்து சிந்திக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை."

இளம் பருவத்தினரை பாதிக்கும் `இம்மெச்சூர் லவ் அஃபேர்'..! பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

ல்லூரிப் பருவம் என்பது ஒவ்வொருவரது வாழ்நாளிலும் மறக்க முடியாதது. காரணம், அந்த வயதில்தான் பல்வேறுவிதமான அனுபவங்கள் கலவையாகக் கிடைக்கும். அதிரடியாக, பல பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்குவார்கள். உடல்ரீதியாக அந்தப்பருவத்தில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்ளச் சிரமப்படுவார்கள். ஆண் அல்லது பெண்ணுக்கு எதிர்பாலினம் மீதான ஈர்ப்பு ஏற்படும். அத்தருணத்தில் ஒருவித கிளர்ச்சி ஏற்படுவதுடன் கற்பனைச் சிறகுகள் விரியும். சிலர் அதை `காதல்’ என்று பெயர் சூட்டி மகிழ்வார்கள். பெரும்பாலான கல்லூரிக் காதல்கள் படிப்பு முடிந்ததும் முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு மனஅழுத்தம், மனப்பதற்றத்தில் சிக்கிக்கொள்வார்கள். சிலர் தற்கொலை செய்யக்கூட துணிவார்கள்.

`இம்மெச்சூர் லவ் அஃபேர்'

மனநல மருத்துவர் வி.கே.அரவிந்த்"இளம் வயது பிள்ளைகளின்மீது பெற்றோர் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த வயதில்தான் அவர்களுக்கு `இம்மெச்சூர்டு லவ் அஃபேர்' (Immature love affair) ஏற்படும். அதைக் கவனமாக கையாள வேண்டும்" என்று சொல்லும் மனநல மருத்துவர் கே.அரவிந்த், இளம் வயதினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், அதற்கான மனநல ஆலோசனைகளையும் தருகிறார்.

``இளமைக் காலத்தில் மகன் அல்லது மகளுக்கு வரும் உளவியல் பிரச்னைகளை பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பருவத்தில்தான் பலர் பரிசோதனை முயற்சிகளில் இறங்குவார்கள். தன்னுடைய நண்பர்கள் மட்டுமே உலகமே என்றிருப்பார்கள். கல்லூரியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது, வீட்டுக்கு வந்தாலும் அவர்களிடம் தொடர்ந்து இணையத்தில் சாட் செய்வது, செல்போனில் பேசுவது என நிறைய நேரங்களைச் செலவிடுவார்கள். அந்த நேரத்தில் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் அவர்கள் நேரம் செலவிடுவது குறைவாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் அவர்களுக்கு சில தவறான உறவுகள் ஏற்படும். 

`இம்மெச்சூர் லவ் அஃபேர்'

கல்லூரியில் படிக்கும் மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கித் தரும் பெற்றோர் பலர் இருக்கிறார்கள். இதனால், அந்தப் பையன் தன் நண்பர்கள் மத்தியில் தனக்கு ஒரு ஸ்டேட்டஸ் வந்ததுபோல உணர்வான். சக ஆண், பெண் நண்பர்கள் அவனைப் பற்றிப் பேசும்போது அவனுடைய பழக்க, வழக்கங்கள் மாறுகின்றன. ஆகவே பைக், செல்போனை வாங்கித் தருவதற்குமுன் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். `ஒழுங்காகப் படி... இரண்டாவது, மூன்றாவது வருடங்களில் உன்னுடைய மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு நீ கேட்கும் பொருளை வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லவேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் கண்டிப்புடன் செயல்படும் பெற்றோர் குறைவாகவே இருக்கிறார்கள். கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டு, பின்னாளில் பிரச்னைகளில் சிக்கிக்கொள்பவர்களே அதிகம். 

மகன் அல்லது மகள் கேட்கும் பொருள்களை வாங்கிக் கொடுக்க வசதியிருந்தாலும், அதை உடனடியாக செய்துவிடக்கூடாது. கூடுமானவரை, ஒரு வருட காலத்துக்குப் பிறகு அவர்கள் கேட்டவற்றை வாங்கித் தரலாம். அதேநேரத்தில் அவர்கள் கேட்கும் பொருளால் தன்னுடைய பிள்ளைக்கு எத்தகைய பாதிப்புகள், பிரச்னைகள் ஏற்படும் என்பதை உணர்ந்து, அதன்படி செயல்பட வேண்டும். 

புகை

இளம் வயது பிள்ளைகளின் நட்பு வட்டம் ஆரோக்கியமாக இருந்தால், அதில் பிரச்னை ஏதுமில்லை. புகை, மது போன்ற போதைப் பழக்கங்கள் உள்ள நட்பாக இருந்தால் அதன் விளைவு மோசமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் அவர்களுக்கு `இம்மெச்சூர்டு லவ் அஃபேர்' (Immature Love Affair) ஏற்படும். அதாவது உடல்ரீதியான உணர்வுகளே அவர்களுக்குக் காதல் போன்று தோற்றமளிக்கும். அப்படி ஏற்படும் காதல் உணர்வுகள் நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்பதால் அவர்களுக்கிடையே மனக்கசப்புகள்தான் ஏற்படும். அது அவர்களது மனநிலையைப் பாதிக்கும். திடீரென்று பிரியும்போது இயல்பாகவே இருவருக்கும் மனஅழுத்தம், மனப்பதற்றம் ஏற்படும். சிலர் தம்மைத்தாமே துன்புறுத்திக்கொள்வார்கள். அப்படிச் செய்யும்போது ஏற்படும் வலியானது, மனஅழுத்தத்தைக் குறைப்பதுபோல உணர்வார்கள். இந்தக் காலகட்டத்தில் சிலர் தற்கொலைக்கும் முயல்வார்கள். 

மனஅழுத்தம்

இளம்வயது பிள்ளைகளுக்கு ஏற்பட்டிருக்கும் மனஅழுத்தம், மனப்பதற்றம் குறித்து பெரும்பாலான பெற்றோருக்குத் தெரிவதில்லை. பல குடும்பங்களில் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால் தங்களது மகன், மகள் குறித்து சிந்திக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இப்படியாகத் தொடர்ந்து அவர்கள் தம் பிள்ளைகள் மீது கவனம் செலுத்தாதபட்சத்தில், அந்தப் பிள்ளைகள் தொடர்ச்சியான மனஅழுத்தத்துக்கு ஆளாக நேரிடும். இந்நிலை தொடரும்போது இளம்வயதிலேயே அவர்களில் சிலருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் ஏற்படலாம்.  

கல்லூரி முடிந்ததும் வீடு திரும்பும் பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அப்போது அவர்களது நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் மனநல மருத்துவரை அணுகி, சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். அவர்களுக்கு வீட்டில் ஏதும் பிரச்னை என்றால் அதைச் சரிசெய்துவிடலாம். பிள்ளைகளின் மனஅழுத்தம், மனப்பதற்றத்தின் தீவிரத்தைப்பொறுத்து சில மருந்து, மாத்திரைகளையும் பரிந்துரை செய்வோம். 

மனப்பதற்றம்

பொதுவாக இளைஞர்கள் மிக எளிதாக கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகி விடுவார்கள். இத்தகைய சூழலில் 20 வயது ஆணும், பெண்ணும் காதல் என்ற பெயரில், 'ஹைலி செக்சுவல் பிகேவியர்' எனப்படும் அடுத்தகட்ட பிரச்னைகளுக்குள் சிக்காமல் இருக்கவேண்டும். அதற்கு மனோதத்துவ அடிப்படை சிகிச்சை என்பது மிகவும் அவசியம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோருக்கு இதுகுறித்த விழிப்புஉணர்வு கிடையாது. சிகிச்சைக்காக வரும் ஆணும், பெண்ணும் தங்களது தவறான பழக்கங்கள் குறித்துப் பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று எங்களிடம் கேட்டுக்கொள்வார்கள். ஆனால், அவர்களது பிரச்னைகளை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டியது ஒரு மருத்துவரின் கடமை என்பதால், மறைக்காமல் சொல்லிவிடுவோம். 

கல்லூரிப் பெண்

20 வயதிலிருக்கும் பெரும்பாலானோரிடம் அலைபேசி இருக்கிறது. அவர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், டிக் டொக் போன்ற சமூகவலைத்தளங்களில் அதிகநேரம் செலவிடுகிறார்கள். அதைத் தவிர்க்கும்படி பெற்றோர் சொன்னாலும் பிள்ளைகள் கேட்கமாட்டார்கள். ஆனால், அவர்களுக்குச் சரியான ஆலோசனைகளை வழங்கி, வழிநடத்தினால் அவர்கள் வழிதவறிப் போவதற்கான சாத்தியங்களைப் பெருமளவு தவிர்க்கலாம்” என்கிறார் அரவிந்த். 

 

 


டிரெண்டிங் @ விகடன்