திருடுபோன போன்சாய் மரம்... திருடர்களிடம் `பாதுகாக்க' வலியுறுத்தும் வயதான தம்பதி! | stolen bonsai trees like our children couple say in plea to thieves

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (14/02/2019)

கடைசி தொடர்பு:01:00 (14/02/2019)

திருடுபோன போன்சாய் மரம்... திருடர்களிடம் `பாதுகாக்க' வலியுறுத்தும் வயதான தம்பதி!

குழந்தைகள் போல வளர்த்து வந்த போன்சாய் மரங்களைத் திருடிச் சென்றவர்களிடம், அவற்றைப் பத்திரமாக பாதுகாக்குமாறு ஜப்பானைச் சேர்ந்த முதிய தம்பதி கோரிக்கை விடுத்துள்ளனர். 

போன்சாய்

டோக்கியோவுக்கு அருகில் உள்ளது சைதாமா. இந்த நகரத்தில் முதிய தம்பதி செஜிஜி ஐமுரா - பியூயம் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் போன்சாய் மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களின் தோட்டத்தில் இருந்த சுமார் 64 லட்சம் மதிப்புடைய போன்சாய் மரங்கள் திருடப்பட்டுள்ளது. இதனால், துயரமுற்ற தம்பதி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

``போன்சாய் மரங்களைப் பொக்கிஷம் போலப் பாதுகாத்து, வளர்த்து வந்தோம். அவை மரங்கள் அல்ல. எங்கள் குழந்தைகள். அந்த மரங்கள் காணாமல் போனதை அறிந்ததில் இருந்து நாங்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறோம். எங்கள் இதயம் கனத்துக் கிடக்கிறது” என்று செஜிஜி ஐமுரா தன்னுடைய முகநூல் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

மரம்

அவரின் மனைவி பியூயம், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ``ஷிம்பாக்கு ஜூனிபர் போன்சாய் மரம் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. அந்த மரத்தால் தண்ணீரின்றி ஒரு வாரத்துக்கு மேல் வாழ முடியாது. இந்த உலகத்தில் இருந்து நாங்கள் மறைந்துவிட்டாலும் கூட, அந்த மரங்கள் வாழும். அந்த மரங்கள் உயிரோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ``போன்சாய் மரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஷிம்பாக்கு. விலை மதிப்பற்ற அந்த மரத்துக்குத் தினமும் தண்ணீர் ஊற்றுங்கள். அதற்குத் தண்ணீர் ஊற்ற மறந்தால், நாங்கள் பெரும் துயரத்திலும், மன உளைச்சலிலும் சிக்கிக்கொள்வோம். எங்கள் உடல்நலம் பாதிக்கப்படும்” என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

பெற்ற பிள்ளைகளையே பாதுகாக்கத் தவறும் இந்த உலகில், போன்சாய் மரங்களின்மீது அளப்பறிய அன்பு வைத்திருக்கும் ஜப்பான் முதிய தம்பதிக்கு ஆதரவு குவிந்து வருகிறது. 

மரம்

நுண்ணிய சிற்பக் கலைகளில் ஒன்றாகப் போன்சாய் மரங்கள் போற்றப்படுகின்றன. உலகம் முழுவதும் அவற்றை உருவாக்குவதிலும், அதைப் பராமரிப்பதிலும் பெரும்பாலானோர் தங்கள் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். ஜப்பானில் போன்சாய் மரங்களை வளர்ப்பதில் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.