சைக்கிள் ஓட்டியே மாதம் 2,000 வரை சம்பாதிக்கலாம்! - இத்தாலி நகர மேயரின் அதிரடி அறிவிப்பு | Italian city to pay people to cycle to work

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (14/02/2019)

கடைசி தொடர்பு:17:10 (14/02/2019)

சைக்கிள் ஓட்டியே மாதம் 2,000 வரை சம்பாதிக்கலாம்! - இத்தாலி நகர மேயரின் அதிரடி அறிவிப்பு

சைக்கிள் இல்லாதவர்கள் சைக்கிள் வாங்குவதற்கும் நிதியுதவி அளிக்கவும் அந்த நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சைக்கிள் ஓட்டினால் பரிசாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு இத்தாலி நாட்டில் உள்ள பரி (Bari) நகர நிர்வாகம். இத்தாலி நாட்டில் கார்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. கார்களின் பயன்பாட்டைக்  குறைக்கவும், மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையிலும் சோதனை முயற்சியாக 4 மாதங்களுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  

சைக்கிள்

அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்பவர்கள் கார், மோட்டார் சைக்கிள்களைத் தவிர்த்து சைக்கிளைப் பயன்படுத்தினால், ஒரு கிலோமீட்டர் தூர பயணத்துக்கு 20 சென்ட் (64.20 பைசா) வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒருமாதத்துக்கு அதிகபட்சமாக 25 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,000) வரை வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைய 1000 பேர் வரை பெயர் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்தவர்களின் சைக்கிள்களில் எத்தனை கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறார்கள் என்பதைக்  கண்காணிக்கும் கருவி பொருத்தப்படும். ஒரு மாதம் நிறைவடைந்ததும், கருவி பதிவு செய்துள்ள தூரத்தைக் கணக்கிட்டு, அந்தந்த நபரின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும். 

 உதவித்தொகை

சைக்கிள் இல்லாதவர்கள் அதை வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கவும் அந்த நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பயன்படுத்தப்பட்ட சைக்கிள் வாங்க 100 யுரோக்களும், புதியது வாங்க 150 யுரோக்கள், மின்சார சைக்கிள் வாங்க 250 யுரோக்களும் நிதியுதவியாக வழங்கப்பட உள்ளன.

``2019-ம் ஆண்டு நிறைவடைவதற்குள் பரி நகரத்தில் சைக்கிள்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளோம். சைக்கிள் ஓட்டுவதால் நிதியுதவி கிடைப்பது மட்டுமின்றி உடல் ஆரோக்கியமும் மேம்படும்" என்கிறார் பரி நகரத்தின் மேயர் ஆன்டனியோ டிகாரோ.


[X] Close

[X] Close