காதல் நிராகரிப்பை எளிதாகக் கடக்க உதவும் மூன்று குணங்கள்- ஓர் உளவியல் அலசல்! | a story about symptoms of love rejection

வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (15/02/2019)

கடைசி தொடர்பு:11:04 (15/02/2019)

காதல் நிராகரிப்பை எளிதாகக் கடக்க உதவும் மூன்று குணங்கள்- ஓர் உளவியல் அலசல்!

அர்ப்பணிப்பு, அக்கறை, பொறுப்பு ஆகிய மூன்றில் ஏதோ ஒன்று இல்லை என்றால்தான் காதலில் பிரிவு வரும். இந்த மூன்றில் ஏதோ ஒன்று குறைவாக இருந்தால் அங்கே சிக்கல்கள் உருவாகும். ஆக, இந்த மூன்றும் சேர்ந்த முதிர்ச்சியான மனநிலைதான் காதல்.

காதல் நிராகரிப்பை எளிதாகக் கடக்க உதவும் மூன்று குணங்கள்- ஓர் உளவியல் அலசல்!

`காதல் என்பது மதித்தல்... பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல்...' - இது மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய வாசகர்களுக்கு அடிக்கடி சொல்லும் `மந்திரம்'. `காதல் அற்பமானது. அது தோன்றுவதுக்கும் மறைவதுக்கும் அற்பமான காரணங்களே போதுமானது. அது மேன்மையுறுவதும் மலினப்படுவதும் சம்பந்தப்பட்ட நபர்களைச் சார்ந்ததே...!' - இது எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிந்தனை. நேற்று காதலர் தினம். காதலர்கள் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். புதிய காதல்கள் உதிக்கும். எல்லாக் காதலும் ஏற்கப்படுவதில்லை. சில இதயங்கள் நிராகரிப்புக்கும் உள்ளாகலாம். பலர், அதோடு வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். சிலர் தங்கள் வாழ்க்கையையே முடித்துக்கொள்ள முனைகிறார்கள். 

காதல்

உண்மையில், நிராகரிப்பு மரணத்திற்கான வாயிலா? 

``காதல் புனிதமானது... காதலித்தவர் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் நினைவாக இருப்பதுதான் உண்மையான காதல்' என்று நம்புகிறது ஒரு தரப்பு. `காதல் என்பது வெறும் பாலியல் ஈர்ப்பு' என்கிறது இன்னொரு தரப்பு.
உண்மையில், இதை அறிவியல் பூர்வமாகவும் மனோதத்துவத்தின் அடிப்படையிலும் அணுகினால் காதல் என்பது இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்று என்பது புரியும். இதை பாலியல் கிளர்ச்சி என்றும் ஒதுக்கிவிட முடியாது. அதே சமயத்தில் `ஆஹா... ஓஹோ...' என்று கொண்டாடவும் கூடாது. வளரிளம் பருவத்தில் பாலியல் கவர்ச்சி ஏற்படும். சுமார் 13 வயதில் எதிர் பாலினம் மீது ஈர்ப்பு வரும். இந்த வயதில் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கும் என்பதால், எதிர் பாலினம் மீதான ஈர்ப்பைக் `காதல்' என்று அர்த்தப்படுத்தக்கூடாது. 

காதல் நிராகரிப்பு

வாழ்க்கையில் நிறைய பேரைச் சந்திக்கிறோம், கடந்துபோகிறோம். ஆனால், எல்லோருடனும் எப்போதும் இருக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதில்லை. ஆனால், சிலருடன் இருக்கும்போது மட்டும் அப்படியான உணர்வு ஏற்படும். அவர்களுடன் இருக்கும்போது சௌகரியமாக உணருவோம். அந்த உணர்வு நமக்கு நல்லதாகத் தோன்றும். அவர்களோடு தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். அவர்களோடு ஒரு ரிலேஷன்ஷிப்பை உருவாக்கிக்கொள்ள நினைப்போம். ஒரு நல்ல உணர்வுக்காக ஒருவரோடு இருக்கவேண்டும் நினைக்கிறோம். அவ்வளவுதான், மற்றபடி இதுவும் காதல் கிடையாது. 

காதல் நிராகரிப்பு

காதலில் மூன்று குணங்கள் முக்கியம். அவை அர்ப்பணிப்பு, அக்கறை, பொறுப்புணர்வு. இதில் ஏதேனும் ஒன்றில் தொய்வு ஏற்பட்டாலும், அந்தக் காதல் தோல்வியில்தான் முடியும்!மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

ஓர் ஆண் ஒரு பெண் மீது காதல் கொண்டால், அந்தக் காதலை பெண்ணும் விரும்ப வேண்டும். அப்படி விரும்பினால் இருவரும் ஓர் உறவை வளர்த்துக்கொள்ளலாம். ஒருவர் மற்றவரின் அருகில் இருக்கலாம், சுக, துக்கங்களில் பங்கெடுக்கலாம். இருவரும் தங்களுடைய உறவின்மீது எந்தளவுக்கு அர்ப்பணிப்போடு இருக்கிறார்கள் என்பதைப்பொறுத்தே அந்த உறவு நீடிக்கும். ஒரு பிரச்னை வந்தால் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டாமல் தங்களுடைய உறவு நீடிப்பதற்காக இருவரும் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. ஒரு சிக்கல் வந்தால் அதைத் தீர்ப்பதில் தனக்கும் பங்கிருக்கிறது என்பதை இருவருமே உணரவேண்டும். 

உறவு என்பதே இருவர் சேர்ந்துதான். ஆகவே, எதிர் பாலினத்தவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவேண்டும். இருவருக்கும் இடையேயான உறவைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அர்ப்பணிப்பு, அக்கறை, பொறுப்புணர்வு ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டும். இது பக்குவப்பட்ட முதிர்ச்சியான மனநிலையில்தான் வரும்.  

காதல்

அர்ப்பணிப்பு, அக்கறை, பொறுப்பு ஆகிய மூன்றில் ஏதோ ஒன்று இல்லை என்றால்தான் காதலில் பிரிவு வரும். இந்த மூன்றில் ஏதோ ஒன்று குறைவாக இருந்தால் அங்கே சிக்கல்கள் உருவாகும். ஆக, இந்த மூன்றும் சேர்ந்த முதிர்ச்சியான மனநிலைதான் காதல். இந்த மனநிலை என்பது வளரிளம் பருவத்தில் வராது. வந்தாலும் அது காதலாக இருக்காது. ஒருவருக்கு ஹார்மோன் கிளர்ச்சியெல்லாம் தாண்டி, சுமார் 22 வயதுக்குப் பிறகு மெச்சூரிட்டி நிலை ஏற்படும். உடல், மனம் மற்றும் அறிவியல்ரீதியாக சுயமுடிவு எடுக்கும் பக்குவத்தை அடையும்போதுதான் காதல் மலரும். 

ஒருவர் தன் காதலைத் தெரிவிக்கும்போது மற்றவர் அதை ஏற்காமல் நிராகரிக்கிறார் என்றால், அவர் `தன் உறவைத்தான் நிராகரிக்கிறார்... தன்னையல்ல' என்பதை உணரவேண்டும். `நான் காதலிக்கவில்லை... இது வேண்டாம்...' என்று மறுத்தால், அவர் உங்களுடைய சுபாவத்தை நிராகரிக்கவில்லை. உங்களுடனான உறவைத் தக்கவைத்துக்கொள்வதில் விருப்பமில்லை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். ஒருவர் காதலை நிராகரித்தால் அது மற்றொருவருக்குப் பலவீனம் கிடையாது. நிறைய நேரங்களில் ஒருவருடைய காதல் நிராகரிக்கப்படும்போது அவர் என்ன நினைப்பாரென்றால், `நான் சரியில்லை... நான் தகுதியானவன் இல்லை... அதனால்தான் காதல் ஏற்கப்படவில்லை... நான் பொருத்தமான ஆளில்லை' என்று பர்சனலாக எடுத்துக்கொள்வார்கள். ஒருவர் உங்கள் காதலை நிராகரித்தால் அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. 

காதல் நிராகரிப்பு

உங்களுடன் மற்றொருவர் உறவு (Realationship) வைத்துக்கொள்ளலாமா... வேண்டாமா என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது என்றால், அதேபோல, உங்களோடு உறவைத் தொடரலாமா... வேண்டாமா என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் மற்றவருக்கும் இருக்கிறது. ஆகவே, மற்றவர் உங்கள் காதலை மறுக்கும்பட்சத்தில் அதை நீங்கள் மதிக்கவேண்டும். அதற்குப் பக்குவம்வேண்டும். 
எந்த உறவிலும் பிரிவு என்பது இழப்புதான். ஆனால், எந்தவோர் இழப்பிலிருந்தும் நாம் மீண்டுவந்துவிடுவோம் என்று உணரவேண்டும். அதற்கான பக்குவம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஒரு இழப்பிலிருந்து படிப்பினைக் கற்றுக்கொள்வதுதான் மனிதனுடைய இயல்பு. ஆகவே, காதல் நிராகரிப்புக்கு உள்ளானால் அதை தன்னுடைய தனிப்பட்ட விஷயமாக ஒருவர் எடுத்துக்கொள்ளக் கூடாது. 
`என்னைப் பிடித்திருக்கிறது. ஆனால், என்னுடனான உறவைத் தொடர்ந்து எடுத்துச்செல்ல விருப்பமில்லை. அதில் சில தயக்கங்கள் இருக்கின்றன...' என்பதை உணரவேண்டும். 

காதலில் ஆண், பெண் இருவருக்குமே சம பொறுப்பு உண்டு. காதலில் பிரிவு வந்துவிட்டால் அவர்கள் மனோரீதியான பிரச்னைக்கு உள்ளாகிவிடுவார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஒருவர் காதலை எந்தளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறார், அவர் காதல் என்று எதைச் சொல்கிறார், ஒருவருடைய இழப்பை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்கிறார் என்பத்தைப்பொறுத்தே காதல் நிராகரிப்பின் தாக்கம் அமையும். 

காதல்

ஒருவர் காதலை உணர்வுபூர்வமாக அணுகினால், அவருக்கு மன உளைச்சல் ஏற்படலாம். ஆனால், சம்பந்தப்பட்டவர் முதிர்ச்சி மனநிலையில் உள்ளவராக இருந்தால் அவருக்குப் பெரிதாக பாதிப்புகள் இருக்காது. 

பொதுவாக, காதல் நிராகரிப்புக்கு உள்ளானவர்கள் உறவினர்களிடமிருந்து விலகிப்போவார்கள். கலகலப்பாக இருக்க மாட்டார்கள். தனிமையை நாடுவார்கள். வாழ்க்கை சார்ந்து தத்துவமாகப் பேசுவார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளில் புதுப்புது மாற்றங்கள் வரும். தன்னுடைய உடை, சிகை விஷயத்தில் அக்கறையற்றவர்களாக இருப்பார்கள். அலைபேசி அழைப்புகளுக்கு உரிய பதில்தர மாட்டார்கள். தற்கொலைக்கான சமிக்ஞைகளை தருவார்கள். அப்படியாக இருந்தால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், மனநல மருத்துவரிடம் அழைத்துச்சென்று உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். 

காதல்

காதலை சினிமாத்தனமாகவும், நாடகத்தனமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் அணுகுபவர்களுக்கே பாதிப்பு இருக்கும். அப்படியாக எடுத்துக்கொள்பவர்களில் சிலர் தற்கொலைக்கும் முயல்வது உண்டு. ஆனால், எல்லா காதல்களும் தற்கொலையில் முடிவதும் இல்லை. காதல் பற்றிய புரிதல் வேண்டும்.. அந்தப் புரிதல் வந்துவிட்டால் காதல் நிராகரிப்பையும் எளிதாக எடுத்துக்கொள்ளலாம்!" என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close