மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், செயற்கை மார்பகங்களை பொருத்திக்கொள்ளலாமா? - #BreastReconstruction | Details about Breast reconstruciton surgery

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (16/02/2019)

கடைசி தொடர்பு:12:23 (16/02/2019)

மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், செயற்கை மார்பகங்களை பொருத்திக்கொள்ளலாமா? - #BreastReconstruction

``தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை மேற்கொண்டால், சுமார் மூன்று லட்சம் வரை செலவாகலாம். ஆனால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், செயற்கை மார்பகம் பொருத்தும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது.’’

மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், செயற்கை மார்பகங்களை பொருத்திக்கொள்ளலாமா? - #BreastReconstruction

புற்றுநோயாளிகளைப் பொருத்தவரை, நோயால் பாதிக்கப்பட்ட காலத்தைவிட அவர்களுக்கு அதிக வலி தரக்கூடியது அதிலிருந்து மீண்டுவரும் காலகட்டமே. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடைசி நிலை வரை ஒருவர் சென்றுள்ளார் என்றால், அதற்கேற்ப கடுமையான சிகிச்சை இருக்கும். அதனால்தான் புற்றுநோய்க்கான விழிப்புஉணர்வு ஏற்படுத்தும்போது பாதிப்பை முதல்நிலையில் கண்டறிய தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

செயற்கை மார்பகம்

இந்தியாவைப் பொருத்தவரை 2,000 பேருக்குப் புற்றுநோயின் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவர்களில் 1,200 பேர் பாதிப்பின் கடைசி நிலையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்று கடைசி நிலையில் கண்டறியப்படும் புற்றுநோயாளியைக் காப்பாற்றும் முயற்சி 3 முதல் 17  மடங்குகள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாகப் புற்றுநோய் திசுக்கள் உடலில் அதிகரித்தால், அவற்றைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகின்றன. இந்நிலை தொடர்ந்தால், பாதிப்படைந்த பகுதியை முழுமையாக நீக்குவதற்கான வாய்ப்புகள் இருந்தால், அதைச் செய்வார்கள். மருத்துவ வழிமுறையில் சில புற்றுநோய் வகைகளுக்கு மட்டுமே இப்படியான `உறுப்பு நீக்குதல்’ பொருந்தும். உதாரணமாக, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மார்பகத்தை அகற்றும் சிகிச்சை முறைகள் இருக்கின்றன.  

புற்றுநோய் பாதித்தவர்களுக்கு மார்பகத்தை நீக்கும் சிகிச்சை அளிப்பதன்மூலம் அவர்கள் நோயின் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவார்கள். இதையடுத்து மார்பகம் நீக்கப்பட்ட இடத்தில் `செயற்கை மார்பகங்கள் பொறுத்தும்’ சிகிச்சைமுறை தற்போது வழக்கத்தில் இருக்கிறது. ஆங்கிலத்தில் இதை, `பிரெஸ்ட் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன்' (Breast Reconstruction) என்கிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் உதவியுடன் நோயாளியின் உடலிலுள்ள மற்ற பகுதி தசைகள் பெறப்பட்டு செயற்கை மார்பகங்கள் பொருத்தப்படுகின்றன. சென்னை ஸ்டான்லி மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி துறைத்தலைவர் ரமாதேவியிடம் இந்த சிகிச்சைகுறித்து கேட்டோம்.

மார்பகப் புற்றுநோய்

``புற்றுநோயாளிகள், அவர்களது சிகிச்சை காலத்துக்குப் பிறகும், தொடர் கண்காணிப்பின்போது கதிரியக்க சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப் பிறகு, மார்பகத்தை இழந்த பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைதான் இது. சில நேரங்களில் ஆண்களுக்கும் இவை பரிந்துரைக்கப்படும். மார்பகம் முழுமையாக நீக்கப்பட்டவர்களுக்கு, `மேஸ்டெக்டோமி' (mastectomy) என்ற சிகிச்சையும், மார்பின் சிறு பகுதி மட்டுமே நீக்கப்பட்டவர்களுக்கு `பிரெஸ்ட் - கன்செர்விங் சர்ஜரி' (Breast-Conserving Surgery) என்ற சிகிச்சையும் அளிக்கப்படும். 

செயற்கை மார்பகத்துக்குத் தேவையான தோல் மற்றும் திசுப்பகுதிகள் அனைத்தும், நோயாளியின் தொடை அல்லது இடுப்புத் பிளாஸ்டிக் சர்ஜரி துறைத்தலைவர் ரமாதேவிதசைகளிலிருந்து பெறப்படும். நோயாளியின் உடலில் தேவையான தோல் பகுதி இல்லாவிட்டால், செயற்கையாக சிலிக்கான் மூலம் மார்பகம் செய்யப்பட்டு அவை பொருத்தப்படும். இத்தகைய மார்பகங்கள், `புரோஸ்தெசிஸ்' (Prosthesis) எனப்படுகிறது. மார்புப் பகுதியில் ஓரளவேனும் தோல் பகுதி இருப்பவர்களுக்கு, `புரோஸ்தெசிஸ்' மூலம் மார்பு வடிவம் அளிக்கப்படும். ஆனால், பலரும் செயற்கை மார்பகம் பொருத்தப் பயப்படுகின்றனர் அல்லது ஆர்வமின்றி இருக்கின்றனர். 

மார்பகப் புற்றுநோயைக் கண்டறியக்கூடியவர்களில், சரிபாதி பேர் இரண்டாவது அல்லது மூன்றாவது நிலையில்தான் தங்களது பாதிப்பை உணர்கின்றனர். அதில் கடுமையான சிகிச்சைகளுக்கு உட்படுபவர்களே அதிகம். நோய் பாதித்தவர்கள் காலதாமதமாகச் சிகிச்சைக்கு வருவதால், அவர்களின் மார்பை நீக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால், மார்பகம் அகற்றப்படும் அவர்களில் யாரும் செயற்கை மார்பகங்கள் பொருத்த விரும்புவதில்லை. உடல் ரீதியாக ஏற்கெனவே மிகவும் சிரமத்துக்குள்ளான ஒருவரை மேலும் சிரமப்படுத்தக் கூடாது என்றே, உடனிருக்கும் கேர் டேக்கர்ஸும் அவர்களை நிர்பந்தப் படுத்துவதில்லை. 

செயற்கை மார்பகம் பொருத்துதல் - புற்றுநோய்

பொதுவாகப் புற்றுநோய் சிகிச்சைகள் எடுத்து அதிலிருந்து மீண்டு வருபவர்களில் பலர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதிலும், மார்பகங்கள் நீக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது உடல் சார்ந்த தாழ்வு மனப்பான்மை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகைய பாதிப்புகளிலிருந்து வெளிவர, இத்தகைய செயற்கை மார்பகங்கள் உதவும். அதேபோல, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவரும், அப்பிரச்னை சரியான பிறகும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கதிரியக்கச் சிகிச்சைக்கு உட்பட வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட சூழலில், அவர்களுக்கு அந்த இடத்தில் திசுக்கள் அதிகமாக இருந்தால் எதிர்ப்புத் திறன் சற்று அதிகரிக்கும். தோல் பிரச்னைகளையும் முடிந்தளவு தவிர்க்கலாம். 

செயற்கையாக மார்பகம் பொருத்துவதால், மீண்டும் புற்றுநோய் திசுக்கள் உருவாகுமா என்றால், இல்லை. புற்றுநோய் திசுக்களின் வளர்ச்சியை, முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் தொடர் சிகிச்சைகள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தலாம். அதனால்தான் தொடர் கண்காணிப்பில், இருக்குமாறு நோயாளிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். முழுமையான புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் விருப்பத்தைப் பொறுத்து எப்போது வேண்டுமானாலும் செயற்கை மார்பகங்களைப் பொருத்திக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை மேற்கொண்டால், சுமார் மூன்று லட்சம் வரை செலவாகலாம். ஆனால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், செயற்கை மார்பகம் பொருத்தும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது’’ என்கிறார் ரமாதேவி.

மார்பகப் புற்றுநோய்

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, இந்தியாவில் அதிகமானோரைப் பாதிக்கும் புற்றுநோய் வகையாக இருப்பது, மார்பகப் புற்றுநோய். கடந்த ஓராண்டில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மார்பகப் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனாலும், மருத்துவர்களின் கணிப்புப்படி 50 சதவிகித நோயாளிகள் தீவிர நிலையை எட்டிய பிறகே பாதிப்பைக் கண்டறியத் தொடங்குகின்றனர். இத்தகைய சூழலில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்பு உணர்வை ஒருபுறம் அதிகரிப்பதுபோல, அதிலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சை முறைகள் குறித்த விழிப்பு உணர்வையும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close