பேலியோ, வீகன் வரிசையில் பிரபலமாகும் 'ரெயின்போ டயட்'! - மருத்துவ நன்மைகள் #RainbowDiet | Know about the rainbow diet, which is trending now

வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (18/02/2019)

கடைசி தொடர்பு:15:48 (18/02/2019)

பேலியோ, வீகன் வரிசையில் பிரபலமாகும் 'ரெயின்போ டயட்'! - மருத்துவ நன்மைகள் #RainbowDiet

அன்றாட உணவில் சரிவிகிதமாக பல நிறங்களில் காணப்படும் பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்!

பேலியோ, வீகன் வரிசையில் பிரபலமாகும் 'ரெயின்போ டயட்'! - மருத்துவ நன்மைகள் #RainbowDiet

`ஆரோக்கியமாக வாழ வேண்டும்', `உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்', `உடல் எடையைக் குறைக்க வேண்டும்' என ஏதோவொரு காரணத்துக்காக ஒவ்வொரு வகையான உணவுமுறையைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பேலியோ டயட், கீட்டோ டயட் என்று பலப்பெயர்களில் குறிப்பிடப்படும் உணவு அட்டவணைகளைப் பல்வேறு பிரபலங்களும் பின்பற்றுகின்றனர். அந்த வரிசையில் `ரெயின்போ டயட்' (Rainbow diet) என்ற புதிய உணவு அட்டவணை பிரபலமாகி வருகிறது. அதாவது, வண்ணங்கள் நிறைந்த வானவில்லைப் போன்று உணவில் பல்வேறு வண்ணங்களிலான காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக்கொள்வதே `ரெயின்போ டயட்'.

டயட்

இயற்கை மருத்துவ நிபுணர் அகில் ஷர்மிளா"பல நிறங்களிலான காய்கறி, பழங்கள் ஒவ்வொன்றிலும் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அனைத்து ஊட்டச்சத்துகளையும் மொத்தமாகப் பெறுவதற்கு தினந்தோறும் உணவில் பல நிறங்களில் இருக்கும் காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்கின்றனர் ரெயின்போ டயட்டைப் பரிந்துரைக்கும் உணவியல் நிபுணர்கள்.

ரெயின்போ டயட் சாப்பிடுவதனால் என்ன நன்மை என்று அறிந்துகொள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் அகில் ஷர்மிளாவிடம் பேசினோம் தெளிவாக விளக்கினார்.

``பொதுவாகவே இயற்கையாக விளையும் பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். நோய்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும். 

டயட்

சிவப்பு: சிவப்பு நிறத்தில் இருக்கும் தக்காளி, ஆப்பிள், சிவப்பு குடைமிளகாய், ஸ்ட்ராபெர்ரி, இளஞ்சிவப்பு நிறத் திராட்சை, சிவப்பு முள்ளங்கி, இலந்தைப்பழம் அனைத்தும் பைட்டோகெமிக்கல்ஸ் (Phytochemicals), லைகோபீன் (Lycopene) மற்றும் ஆந்தோஸையனின்ஸ் (Anthocyanins) ஆகிய சத்துகள் நிறைந்தவை. இந்தச் சத்துகள் புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற வாழ்க்கை முறை நோய்கள் வராமல் தடுக்கும் தன்மைகொண்டது. கண்களையும், சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் இவை உதவும். 

ஆரஞ்சு: நுண்ஊட்டச்சத்துகளான ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்திருக்கும் கேரட், ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பப்பாளி, பூசணி போன்றவை ஆரோக்கியமான மரபணுக்களுக்குச் சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும். ஆரஞ்சு நிறப் பழங்கள், காய்கறிகளில் அடங்கியிருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் சத்துகள் உடல் ஆரோக்கியத்தை மேலும் வலுப்படுத்தும். இதயம், எலும்புகள் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. 

ஆரோக்கிய உணவு

மஞ்சள்: மஞ்சள் நிறத்தில் காணப்படும் அன்னாசிப்பழம், பப்பாளி மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றைச் சாப்பிடுவதால் வயிற்றுப் புண், வீக்கம் மற்றும் அஜீரணப் பிரச்னைகள் குணமாகும். 

பச்சை: அனைத்து கீரை வகைகள், ப்ரொக்கோலி, அவரைக்காய், புடலங்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், வாழைக்காய் மற்றும் பச்சை நிறத் திராட்சை, பச்சை நிற  ஆப்பிள் ஆகியவற்றில் வைட்டமின், தாதுஉப்புகள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படுகிறது. இந்த வகை உணவுகள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் பச்சை நிறக் காய்கறிகள், பழங்கள் குறைக்கின்றன.

டயட்

பர்பிள் (Purple): பர்பிள் நிற முட்டைக்கோஸ் கோஸ், கத்திரிக்காய், நாவல் பழம் போன்றவற்றில் காணப்படும் நுண்ஊட்டச்சத்துகள் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது. உடலில் ஏற்படும் காயங்களையும் விரைவில் குணப்படுத்த இதில் இருக்கும் சத்துகள் உதவும். 

வெள்ளை: வாழைப்பழம், காலிஃபளவர், முள்ளங்கி, வெங்காயம், பூண்டு என வெள்ளை நிறத்தில் காணப்படும் அனைத்தும் உடலில் ஏற்படும் காயங்கள், புண்களைக் குணப்படுத்த உதவுவதோடு, உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சில புற்றுநோய்களைக்கூட தடுக்கும் தன்மை கொண்டது. 

ஆரோக்கிய உணவு

எனவே, அன்றாட உணவில் சரிவிகிதமாகப் பல நிறங்களில் காணப்படும் பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்" என்றார் அவர்.

வாழ்க்கை வண்ணமயாக அமைய வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆரோக்கியமாக வாழ நமது அன்றாட உணவும் வண்ணமயாக இருக்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close