கருப்பை இல்லாத பெண்... குழந்தை பெற்ற ஆச்சர்யம்..! சென்னையில் மருத்துவ அதிசயம் | India's First Surrogate Birth following egg extraction from on ovary transposition under the skin

வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (19/02/2019)

கடைசி தொடர்பு:15:04 (19/02/2019)

கருப்பை இல்லாத பெண்... குழந்தை பெற்ற ஆச்சர்யம்..! சென்னையில் மருத்துவ அதிசயம்

``கருப்பை இல்லாத பெண்ணுக்கு, தோல் வழியாக கருமுட்டையை எடுத்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற வைத்தது இந்தியாவில் இதுவே முதல் முறை''

கருப்பை இல்லாத பெண்... குழந்தை பெற்ற ஆச்சர்யம்..! சென்னையில் மருத்துவ அதிசயம்

ந்தியாவில் முதல் முறையாக கருப்பையே இல்லாத பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இந்தச் சாதனையை மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜும் அவர் மகளும் மகப்பேறு மருத்துவருமான பிரியாவும் இணைந்து செய்திருக்கிறார்கள். கருப்பையில்லாத அந்தப் பெண்ணுக்கு சென்ற வாரம் சனிக்கிழமை அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த மருத்துவ அதிசயம், என்ன சிகிச்சை செய்தார் டாக்டர் கமலா செல்வராஜ், அவரிடமே கேட்டோம். 

கருப்பை

``அந்தப் பெண்ணுக்கு 27 வயசுதான் ஆகுது. கருப்பையில் கேன்சர் வந்ததால், அதை ஏற்கெனவே ஆபரேஷன் பண்ணி எடுத்திட்டாங்க. ஆனா, கேன்சர் செல்கள் சினைப்பைகளுக்குப் பரவாமல் இருந்ததால், அந்தப் பெண்ணுக்கு ஆபரேஷன் செய்த ஆன்காலஜிஸ்ட் சர்ஜன், சினைப்பைகளை மட்டும் நீக்காமல் அப்படியே விட்டு வைத்திருந்தார். கூடவே, வலது கருவளையத்தை ரத்தவோட்டம் பாய்கிறபடி தோலுக்குள் அடியில் இணைச்சிருந்தாங்க. இதெல்லாம் நடந்து முடிந்து 3 வருடங்களாகி விட்டன. அதன் பிறகு அந்தப் பெண்ணை பரிசோதித்துப் பார்த்தப்போ, சினைப்பைகளில் ரத்தவோட்டம் இருந்திருக்கிறது. அதனால், டெஸ்ட் டியூப் முறையில் குழந்தை  பெற்றுக்கொள்ள கேரளாவிலிருந்து அந்தப் பெண் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். என்னுடைய மகள் டாக்டர் பிரியாதான், அந்தப் பெண், குழந்தை பெறுவதற்கான மேக்ஸிமம் ட்ரீட்மென்ட் கொடுத்தார். நானும் அவளுக்கு கைடு செய்தேன். 

டாக்டர் கமலா செல்வராஜ்முதலில் அந்தப் பெண்ணுக்கு கருமுட்டை உருவாவதற்கான சிகிச்சைகளை செய்து, சினைப்பைகளை தூண்டி விட்டோம். பிறகு கருமுட்டைகளை எடுத்தோம். பொதுவாக, இந்த வகை சிகிச்சை செய்யும்போது கருமுட்டைகளை வஜைனா வழியாகத்தான் வெளியே எடுப்போம். ஆனால், இந்தப் பெண்ணுக்கு வயிற்றின் மேல் தோல் வழியாக, அல்ட்ரா சவுண்டு உதவியுடன் கருமுட்டையை வெளியே எடுத்தோம். பிறகு அதை, அவருடைய கணவரின் உயிரணுக்களுடன் இணைத்து, டெஸ்ட் டியூபில் வைத்தோம். கரு உருவானவுடன், அதை வாடகைத்தாயின் கருப்பையில் வைத்தோம்'' என்ற டாக்டர் செல்வராஜ், இந்த சிகிச்சையின்போது தான் சந்தித்த சவால்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.  

``முதல் தடவை, அந்த இளம்பெண்ணிடமிருந்து கருமுட்டை எடுத்தபோது ஒன்றே ஒன்று மட்டும்தான் கிடைத்தது. அதை, அவள் கணவர் உயிரணுவுடன் இணைத்து, டெஸ்ட் டியூபில் வளர்த்து வாடகைத்தாயின் கருப்பையில் வைத்தோம். ஆனால், அந்தக் கரு சில வாரங்களிலேயே கலைந்து விட்டது. இரண்டாவது முறையாக முயற்சி செய்தோம். இந்த முறை கருவே உருவாகவில்லை. மனமொடிந்து போய் விட்டாள் அந்தப் பெண். அவள் மனம், உடல் என இரண்டையும் தேற்றி, மூன்றாவது முறையாக முயற்சி செய்தோம். இந்த முறை அந்த மருத்துவ அதிசயம் நடந்துவிட்டது. வாடகைத்தாயின் வயிற்றில் வைத்த கருவானது நல்லபடியாக வளர ஆரம்பித்தது.

இதோ, சனிக்கிழமை அழகான பெண் குழந்தையும் பிறந்துவிட்டது. கருப்பை இல்லாத பெண்ணுக்கு, தோல் வழியாக கருமுட்டையை எடுத்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற வைத்தது இந்தியாவில் இதுவே முதல் முறை'' என்று பூரிப்பும் பெருமிதமுகமாகச் சொல்கிற டாக்டர் கமலா செல்வராஜ், சில தினங்களுக்கு முன்னால் வரை வேலை நிமித்தமாக ராஜஸ்தானில் இருந்திருக்கிறார். வாடகைத் தாய்க்கு டெலிவரி இன்றுதான் (19-2-19) என்று இருந்த நிலையில், உள்ளுணர்வு காரணமாக சீக்கிரமே சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். நினைத்தபடியே சென்ற வாரம் சனிக்கிழமை அந்த வாடகைத்தாய்க்குப் பிரசவ வலியெடுத்து, பெண் குழந்தை பிறந்திருக்கிறது. கருப்பையே இல்லாத அந்த இளம்பெண்ணை, மருத்துவம் மூலம் அம்மாவாக்கி அழகு பார்த்திருக்கிறார் டாக்டர் கமலா செல்வராஜ். வாழ்த்துகள் டாக்டர்! 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close