முழங்கால் ஜவ்வு, வால் எலும்பைப் பாதிக்கும் சாலை மேடு பள்ளங்கள்... வாகன ஓட்டிகளுக்கு ஒரு அலர்ட் | Knee jaws, road craters that affect the tail bone ... Alert for motorists

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (20/02/2019)

கடைசி தொடர்பு:07:20 (20/02/2019)

முழங்கால் ஜவ்வு, வால் எலும்பைப் பாதிக்கும் சாலை மேடு பள்ளங்கள்... வாகன ஓட்டிகளுக்கு ஒரு அலர்ட்

இருசக்கர வாகனத்தில் பயணிப்போருக்கு முதுகுக்கு எந்த சப்போர்ட்டும் இருக்காது. தொடர்ந்து பயணிக்கும்போது முதுகில் சிரமம் ஏற்படும். மேடு, பள்ளமான சாலையில் ஒவ்வொருமுறையும் வாகனம் விழுந்து, எழும்போது இந்தச் சிரமம் இன்னும் அதிகமாகும். இதனால் முதுகுவலி ஏற்படும்.

முழங்கால் ஜவ்வு, வால் எலும்பைப் பாதிக்கும் சாலை மேடு பள்ளங்கள்... வாகன ஓட்டிகளுக்கு ஒரு அலர்ட்

நீண்ட சாலைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது இந்தியா. சுமார் 33 லட்சம் கி.மீ நீளத்துக்கு சாலைகளைக் கொண்டிருக்கிறது.  80 சதவிகிதம் மக்கள் போக்குவரத்தும் 65 சதவிகிதம் சரக்குப் போக்குவரத்தும் சாலைகளின் வழியே நடக்கின்றன. ஆனால், மோசமான சாலைகளை கொண்ட நாடாகவும் இந்தியாதான் இருக்கிறது. 

மூட்டு வலி

சமதளமற்ற, குண்டும் குழியுமான சாலைகள், அறிவிப்புப் பலகை இல்லாத வேகத்தடைகள், சாலைகளில் துருத்திக்கொண்டிருக்கும் கழிவுநீர்க் கால்வாய் மூடிகள், குடிநீர், கழிவுநீர், மின்சாரம் போன்றவற்றுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் என விபத்தை ஏற்படுத்துவதற்கான காரணிகள் ஏராளம். இதுமட்டுமல்ல... முதுகுவலி,  தோள்பட்டை வலி, முதுகுத்தண்டில் வலி எனப் பல பிரச்னைகளுக்கு அடிப்படையே இந்த மோசமான சாலைகள்தான் என்பது பலர் அறியாதது.

எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் அருண் கண்ணன்``அண்மைக்காலமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதே அளவுக்கு விபத்துகளும் அதிகரித்திருக்கின்றன. அண்மையில் நடந்த ஒரு சம்பவமே அதற்கு உதாரணம். வயதான தம்பதியர் தங்களின் மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்கப் புறப்பட்டுப்போனார்கள். அறிகுறியில்லாத வேகத் தடையைக் கடக்கும்போது  அவர்களது வண்டி நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துவிட்டனர்.

இதில், கணவருக்கு எந்தப் பாதிப்புமில்லை. ஆனால், 60 வயது மதிக்கத்தக்க அவரது  மனைவியின் வலதுபுற மணிக்கட்டிலும் இடது கையிலும் எலும்பு முறிவு. நரம்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. முகத்திலும் நிறைய இடங்களில் காயங்கள். இவருக்கு 5 மணி நேரங்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. வேகத் தடை இருந்த இடத்தில் ஓர் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம். 

சாலை

இதுபோல சாலைகளில் சரியாக மூடப்படாத கழிவுநீர்க் கால்வாய் மூடிகள், திடீரெனத் தோண்டப்படும் பள்ளங்கள் போன்றவற்றாலும் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு மட்டுமல்ல, பாதசாரிகளும்கூட சாலைகளில் உள்ள மேடு, பள்ளங்களால் பாதிக்கப்படுகின்றனர். மின்சார விளக்குகள் இல்லாத சாலைகளில் நடந்துபோகும்போது தடுக்கி விழுகின்றனர். அப்படி விழும்போது கால் பிசகி வலியால் அவதிப்படுவார்கள். கால் பிசகியவர்களுக்கு பேன்டேஜ் போடுவது, ஐஸ் ஒத்தடம் தருவது பயனளிக்கும். அவர்களுக்கு ஓய்வும் தேவைப்படும். கால் பிசகு ஏற்படும்போது சிலருக்குத் தசைநார்கள் கிழிந்துவிடும், அல்லது எலும்பு முறிவு ஏற்படும். இவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். 

இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் சாலைகளில் உள்ள பள்ளத்தில் விழுவதால் அவர்களுடைய முழங்காலில்தான் முக்கியமாக அடிபடும். முழங்காலில் முக்கியமானது `ஏசியல் லெகமென்ட்' (Axial ligament) ஜவ்வு. விபத்தில் சிக்கியவர்கள் இந்த ஜவ்வு கிழிந்து  வருவார்கள். இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 

முதுகு வலி

மோசமான சாலைகளில் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, உட்காரும் இடத்தில் அடிக்கடி அதிர்வு ஏற்படும். நம்முடைய முதுகுத்தண்டு முடியும் இடத்தில் சின்ன வால் போன்ற எலும்பு உள்ளது. இந்த வால் எலும்பில் அழுத்தம் உருவாகும். இதனால் வால் எலும்பில் பிரச்னை ஏற்படும். உட்கார்ந்தால் வால் எலும்புள்ள இடத்தில் வலி ஏற்படும். வலி ஏற்படாமலிருக்க இவர்களுக்கு `வட்ட வடிவ தலையணை' (Ring pillow) தருவோம். இந்தத் தலையணையில் உட்கார்ந்தால் வால் எலும்பில் அழுத்தம் ஏற்படாது. அதன்பிறகும் வலி தொடர்ந்தால், ஊசி போட வேண்டும். தொடர்ந்து வால் எலும்பில் வலி இருந்துகொண்டேயிருந்தால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, வால் எலும்பை எடுக்க வேண்டியிருக்கும். 

இருசக்கர வாகனத்தில் பயணிப்போருக்கு முதுகுக்கு எந்த சப்போர்ட்டும் இருக்காது. தொடர்ந்து பயணிக்கும்போது முதுகில் சிரமம் ஏற்படும். மேடு, பள்ளமான சாலையில் ஒவ்வொருமுறையும் வாகனம் விழுந்து, எழும்போது இந்தச் சிரமம் இன்னும் அதிகமாகும். இதனால் முதுகுவலி ஏற்படும்.

மோசமான சாலை

முதுகு தண்டுவட எலும்புகளுக்கு இடையே ஜவ்வு  (Disk) இருக்கும். இந்த ஜவ்வு ஒருமுறை பாதிக்கப்பட்டால், மீண்டும் அதைச் சரிசெய்வது ரொம்பக் கடினம். ஜவ்வில் பாதிப்பு ஏற்படும்போது முதுகு வலி உண்டாகிறது. ஜவ்வில் அதிக பாதிப்பு ஏற்பட்டால் தேய்மானம் அடையும் வாய்ப்புகள் அதிகம். வீக்கமடைந்து (Disc bulge) நழுவிச் செல்வதற்கும் வாய்ப்புண்டு. இதனை `டிஸ்க் ப்ரொலாப்ஸ்' (Disc prolapes) என்போம். சவ்வு விலகினால் முதுகெலும்பில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்படும். இதனால் காலிலும் வலி உண்டாகும். 

ஜவ்வு பாதிப்பு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். கூடுமானவரை, ஜவ்வில் பாதிப்பு  ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மட்டுமே இதற்குச் சரியான தீர்வு. மேலும், அதிகமாக இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். முதுகு வலி உள்ளவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு முறையாவது முதுகுக்கான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 

முதுகு வலி

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது சரியான நிலையில் அமர்ந்து பயணிக்க வேண்டும். இரவில் சாலையில் நடந்துசெல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் கையில் டார்ச் லைட் இருக்கட்டும். ” என்கிறார் அருண் கண்ணன்.   

 

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close