தேர்வுக்கு முன்னரும்... தேர்வின்போதும் மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன... உளவியல் ஆலோசனை! | What do students need to do during exams ... psychological advice!

வெளியிடப்பட்ட நேரம்: 08:38 (21/02/2019)

கடைசி தொடர்பு:09:12 (21/02/2019)

தேர்வுக்கு முன்னரும்... தேர்வின்போதும் மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன... உளவியல் ஆலோசனை!

மாணவர்கள் படித்ததை நினைவிலிருந்து கொண்டு வர வேண்டுமென்றால், அவர்களுடைய மனநிலையை இயல்பாகவும் மென்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பதற்றம் வரும்போது மறதி என்பது இயல்புதான்.

தேர்வுக்கு முன்னரும்... தேர்வின்போதும் மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன... உளவியல் ஆலோசனை!

கோடைக்காலத்துக்கு முன் தேர்வுக் காலம் வந்துவிடும். பள்ளித் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் என வரிசைகட்டி நிற்கும். இதில் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் பத்தாம், 12-ம் வகுப்பு மாணவர்களின் நிலை கொஞ்சம் சிக்கலானது. எப்போதும் பதற்றமும் பயமும் கலந்தே காணப்படுவர். பசி, தூக்கம் மறந்து படித்துக்கொண்டிருப்பார்கள். இது அவசியமில்லை என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன். மேலும், தேர்வைப் பதற்றமின்றி எதிர்கொள்வது எப்படி என்றும் அவரே கூறுகிறார்.

தேர்வு

``ஒரு பாடத்தை எவ்வளவு தூரம் மாணவர்கள் உள்வாங்கியிருக்கிறீர்கள்; புரிந்துகொண்டிருக்கிறீர்கள்; அதற்கானத் தெளிவை எந்தளவுக்கு அடைந்திருக்கிறீர்கள் என்பதைப் பரிசோதிப்பதுதான் தேர்வு. இதை முதலில் எல்லா மாணவர்களும் மனதில் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவது, தேர்வு நேரத்தின்போது பயமும் பதற்றமும் வருவது இயல்பான ஒன்றே. தேர்வு மட்டுமில்லை, பொதுவாக, பிறரிடம் நம்முடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கும்போது பதற்றம் ஏற்படும். 

தான் படித்தது தேர்வின்போது ஞாபகத்துக்கு வருமா அல்லது மறந்துவிடுமா என்கிற சந்தேகத்தில்தான் மாணவர்களுக்குப் பதற்றம் வந்துவிடுகிறது. அதேபோல, பாடத்தையே படிக்காத மாணவர்களுக்குப் பதற்றம் ஏற்படாது. ஏனென்றால், அவர்களுக்கு அந்த சந்தேகமே தோன்றாது.மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

தேர்வு எழுதும்போது படித்தது நினைவில் வருமா என்கிற சந்தேகம் பாடத்தை முழுவதுமாகப் படித்தவர்களுக்கே ஏற்படும். `நிறைய படித்திருக்கிறேன். இதையெல்லாம் சரியா எழுதிவிடுவேனா?’ என்று நினைக்கும்போது இயல்பாகவே மாணவர்களுக்குள் பதற்ற மனநிலை வந்துவிடும்.

மாணவன்

 

தேர்வு அறையில் அமர்ந்துகொண்டு யோசிப்பது, தேர்வு அறைக்குச் செல்வதுக்கு முன் யோசிப்பது ஆகிய இரண்டும் வேறு வேறு. இரண்டுக்குமே வேறுபட்ட மனநிலைகள் உண்டு. தேர்வு அறைக்கு வருவதுக்கு முன் மாணவர்களுடைய மனநிலை பதற்றமாகத்தான் இருக்கும். ஆனால், தேர்வு அறைக்கு வந்தபின் அந்த நிலைமை மாறிவிடும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். தனக்குத் தெரிந்த விஷயத்தைத் தேர்வின்போது வெற்றிகரமாக எழுத முடியும் என்று நம்ப வேண்டும். 

மாணவர்கள் படித்ததை நினைவிலிருந்து கொண்டு வர வேண்டுமென்றால், அவர்களுடைய மனநிலையை இயல்பாகவும் மென்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பதற்றம் வரும்போது மறதி என்பது இயல்புதான். எனவே, தேர்வு அறையில் பதற்றத்தை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தேர்வு அறையில் அமர்ந்து கேள்வித்தாளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பதற்றம் குறைய ஆரம்பித்துவிடும். முழுத்தாளையும் பார்த்த பிறகு, பதற்றமே இருக்காது. இப்போது, மாணவர்கள் தாங்கள் படித்ததை முழுமையாக நினைவில் கொண்டுவந்து தேர்வைச் சிறப்பாக எழுத முடியும்” என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

பாடம்

தேர்வுக்காகத் தயாராகும் மாணவர்களுக்காக... பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன? 
மனநல மருத்துவர் அசோகன் விளக்குகிறார்.

``முதலில், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களைவிடப் பெற்றோர் பதற்றமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தங்களுடைய கவலையைப் பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது. தேர்வு நேரத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளைத் தர வேண்டும். வெளியில் வாங்கிச் சாப்பிடும் உணவுப் பொருள்களால் சில நேரங்களில் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுத் தேர்வு எழுதுவதில் தடை ஏற்படலாம். ஆகவே, கூடுமானவரை வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. புது உணவுகளைச் சமைத்துத் தருவதை அறவே பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். ஆழ்ந்த தூக்கமும், இடையிடையே சிறு சிறு ஓய்வும் மாணவர்களுக்கு அவசியம் என்பதைப் பெற்றோர் உணருவது அவசியம். 

ஆகவே, பிள்ளைகள் நள்ளிரவு வரை கண்விழித்து படிப்பதைத் தவிர்த்து, இரவு நன்றாகத் தூங்கி, காலையில் எழுந்து படிப்பதை வலியுறுத்துங்கள். காலையில் படிக்கும்போது கடினமான விஷயங்கள்கூட எளிதாகப் புரியும்.

மாணவி

பதிதல், வைத்திருத்தல், நினைவுகூர்தல் இந்த மூன்றும் படிக்கும்போது மாணவர்களுக்கு முக்கியம். முதலில் படிக்கிற விஷயங்கள் மனதில் பதிய வேண்டும். பதிந்த விஷயங்கள் மனதில் தங்கியிருக்க வேண்டும். தங்கியிருந்த விஷயங்களைத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். இதுதான் நினைவுத் திறனுக்கு அடிப்படை. இந்த வரிசையில் பாடங்களைப் படிக்கப் பழக்குங்கள். 

உளவியல் நிபுணர் அசோகன் ஆசிரியர் தொடர்ந்து பாடம் எடுத்து எடுத்து ஒரு கட்டத்தில் அவரால் கண்ணை மூடிக்கொண்டே ஒரு பாடத்தைத் தெளிவாகக் கற்பிக்க முடியும். அதேபோலத்தான் பாடமும். முதல்நாள் ஒரு எஸ்ஸேயைப் படிக்க ஒரு மணிநேரம் ஆகும். தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாள் அதைப் படிக்க குறைந்த நேரமே தேவைப்படும். இதைப் பிள்ளைகளிடம் எடுத்துக் கூற வேண்டும். சில கஷ்டமான கேள்விகளை விஷுவலாக நினைத்துப் பார்ப்பது பயனளிக்கும். தேர்வின்போது அந்த விஷுவல் கைகொடுக்கும். தேர்வுக்காகக் கஷ்டப்பட்டு படிக்காமல், இஷ்டப்பட்டுப் படிக்கப் பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள். 

சாப்பிடும்போது சில உணவுப் பொருள்களை மென்றும் விழுங்கியும் குடிப்பது போல, தேர்வுக்காகத் தயாராகும் மாணவர்கள் சில விஷயங்களை மனப்பாடம் செய்து, எழுதிப் பார்ப்பது நல்லது. சிலவற்றை க்விஸ் மாதிரி வைத்துக்கொள்ளலாம். இதற்கெல்லாம் பெற்றோர்கள் உதவலாம். தேர்வுக்காகப் படிக்கும் பிள்ளைகளிடம் எப்போதும் கண்டிப்போடு நடக்க வேண்டாம். அவர்களைச் சந்தோஷமான மனநிலையில் வைத்திருங்கள். அவர்களுக்குப் பிடித்த இசையைக் கொஞ்சநேரம் கேட்கவும் பிடித்த விளையாட்டைக் கொஞ்சநேரம் விளையாடவும் அனுமதியுங்கள்.

மாணவர்கள்

தேர்வுக்கு முன்பே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பேனாவை வாங்கித் தருவது அவசியம். அந்தப் பேனாவால் ஒரு நோட்டில் படிப்பதையெல்லாம் குறிப்பெடுக்கக் கூறுங்கள். தேர்வின்போது அந்தக் குறிப்புகள் சிறப்பாக எழுத உதவும். தேர்வுக்குப் போனால் பிறரிடம் பேசுவதைத் தவிர்க்கச் சொல்லுங்கள். அது தேவையற்ற மனப் பதற்றத்தைக் குறைக்க உதவும். தேர்வு அறையில் வினாத்தாளை வாங்கியவுடன் உடனே எழுத ஆரம்பிக்காமல், கொஞ்சம் மூச்சை இழுத்து மெல்ல மெதுவாக வெளியேவிடச் சொல்லுங்கள். இப்படிச் செய்யும்போது மனம் சாந்தம் அடையும். சாந்தமான மனநிலையில் படித்ததெல்லாம் நினைவுக்கு வந்துவிடும். தேர்வைச் சிறப்பாக எழுத அது உதவும். 

தேர்வு எழுத ஆரம்பிக்கும்போதுதான் பதற்றம் இருக்கும். தொடர்ந்து எழுதத் தொடங்கிவிட்டால் அது மெல்ல மெல்லக் குறைந்துவிடும் என்பதைப் பிள்ளைகளிடம் கூறி, தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளச் சொல்லுங்கள்” என்கிறார் அசோகன்.   


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close