மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கின்றனவா செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்? | What is the reason behind increasing of artificial fertility centres?

வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (21/02/2019)

கடைசி தொடர்பு:11:23 (21/02/2019)

மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கின்றனவா செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்?

மக்களின் பயத்தையும் பதற்றத்தையும் அறியாமையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கின்றனவா செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்?

குழந்தையின்மை அதிகரித்துவிட்டதால் திரும்பும் திசையெங்கும், செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துவிட்டன. விதவிதமான பேக்கேஜ்கள், தவணைமுறை போன்ற சலுகை மழை பெய்வதால் கொடிகட்டிப் பறக்கும் ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில், மருத்துவமனைகளுக்கு இணையாக செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் பெருகி வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 

செயற்கை கருத்தரிப்பு

`செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் பெருகி வருவதற்கான காரணம் என்ன' என்று மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலாவிடம் கேட்டோம். `இயற்கையாகக் கருத்தரிப்பது குறைந்து வருவதும், திருமணமான ஓராண்டுக்குள் கருத்தரித்து விட வேண்டும் என்ற அவசரமுமே செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அதிகரிக்க அடிப்படைக் காரணம்’ என்றவர் கருத்தரித்தலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து விரிவாகப் பேசினார். மகப்பேறு மருத்துவர் ஶ்ரீகலா

``கருத்தரித்தலுக்குப் பெரும் தடையாக இருப்பது உடல் பருமன். முன்பெல்லாம் திருமண வயதுள்ள பெண்கள் 45 முதல் 50 கிலோ எடைதான் இருப்பார்கள். தற்போது 60 முதல் 80 கிலோ எடையுடன் காணப்படுகிறார்கள். அதிக உடற்பருமன் காரணமாக `பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்’ (Polycystic Ovarian Syndrome) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். அதனால் கருத்தரிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதைவிட முக்கியமாக `எண்டோமெட்ரியோசிஸ்’ (Endometriosis) எனப்படும் கருப்பை அகப்படலப் பாதிப்பால் கருப்பைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, பல பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்னை ஏற்படுகிறது. அதேபோல, கருப்பையில் தொற்று பாதிப்பு இருந்தாலும் கருக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுக் கருத்தரிப்பதில் தடை உண்டாகும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயால் கருத்தரிப்பதில் சிக்கல், கருக்கலைவு, குறை பிரசவம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். 

மாறிவிட்ட உணவுப் பழக்கங்கள், மதுப் பழக்கம் மற்றும் புகைப் பழக்கத்தால் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ரத்த நாள மாற்றத்தால் விதைப்பகுதியில் சூடு அதிகரித்து விந்தணுக்கள் சிதைவதும் சிலருக்கு நடக்கிறது. அதனால் கருவுறுதலில் சிக்கல் ஏற்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு ஆண்களாலும் ஒரு பங்கு பெண்களாலும், மீதமுள்ள ஒரு பங்கு இருவராலும் எனக் குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவருமே சரிபாதி காரணமாக இருக்கிறார்கள். 

உடற்பருமன்

காலம் தாழ்த்தி திருமணம் செய்வதும்கூட குழந்தையின்மைக்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. அதனால் பெண்கள் 20-லிருந்து 25 வயதுக்குள்ளும் ஆண்கள் 30 வயதுக்குள்ளும் திருமணம் செய்ய வேண்டியது அவசியம். அதேபோல, திருமணமான ஒரு வருடத்துக்குள்ளாகவே குழந்தை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணமும் பலருக்கு இருக்கிறது; அதுவும் தவறு. குறைந்தது மூன்று, நான்கு ஆண்டுகள் காத்திருக்கலாம். மாறாக, உடனடியாக செயற்கைக் கருத்தரிப்பு மையங்களை நோக்கி ஓடத் தேவையில்லை’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா.

திருமணமாகிப்  பல ஆண்டுகளாகியும் குழந்தை பெறமுடியாத தம்பதிகளுக்கு செயற்கைக் கருத்தரிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால், திருமணமாகிக் குறுகிய காலத்திலேயே சிகிச்சைக்குச் செல்வதும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை குழந்தை பெற்றுவிட வேண்டும் என்று நினைப்பதுமே செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அதிகரிக்க முக்கியமான காரணங்கள். குழந்தை பெற்றுக்கொள்ள சரியான உடற்தகுதிகள் இருந்தாலும், இந்த நாளில், இந்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஜோதிட நம்பிக்கைகளுக்காகச் சிலர் கருத்தரிப்பு மையங்களை நோக்கிச் செல்வதும் இங்கு நடக்காமல் இல்லை. அதனாலேயே வரைமுறை இல்லாமல் லட்சங்கள் கொழிக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டன செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள். 

செயற்கை கருத்தரிப்பு

செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில் சமீபகாலமாக மோசடிகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. என்ன மாதிரியான மோசடிகள் நடக்கின்றன என்று மகப்பேறு மருத்துவரும் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளருமான மருத்துவர் சாந்தியிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார். 

``இயற்கையாகக் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளவர்கள், செயற்கைக் கருத்தரிப்பு மையங்களுக்குச் செல்ல நேரிட்டால் அவர்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்கப்படுவதில்லை. அத்துடன் உண்மையை மறைத்து அவர்களை செயற்கையாகக் கருத்தரிக்க வைக்கிறார்கள். ஒருமுறை அந்த மையங்களுக்குள் சென்றுவிட்டால் ஆண் குழந்தை, ஆரோக்கியமான குழந்தை, பேக்கேஜ், சலுகைகள் என ஆசைவார்த்தைகள் காட்டி ஆயிரக்கணக்கில் பணத்தை அறுவடை செய்துவிடுகிறார்கள். செயற்கைக் கருத்தரிப்புக்கு நம் நாட்டில் இருக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளால், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற வெளிநாடுகளுக்கு மொத்தமாக அனுப்பி சிகிச்சையளிக்கிறார்கள். அதற்கும் பலவிதமான பேக்கேஜ்கள் இருக்கின்றன. 

அதேபோல செயற்கைக் கருத்தரிப்புக்கான சிகிச்சைகளைத் தொடங்கிவிட்டால், அவர்கள் வீட்டில் இருப்பதைவிட மையங்களின் கண்காணிப்பில் தங்கி இருப்பதே பாதுகாப்பு எனச் சொல்லி அதற்கென உள்ள வீடுகளில் தங்கவைத்து கொள்ளைக் கட்டணம் வசூலிக்கிறார்கள். மக்களின் பயத்தையும் பதற்றத்தையும் அறியாமையையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, வளைகாப்பு நடத்துவது, அதற்குப் புகைப்படம் எடுப்பது என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணங்கள் வசூலித்து விடுவார்கள். தேவையற்ற ஹார்மோன் ஊசிகளைச் செலுத்துவது, போடாத ஊசிகளுக்குப் பணம் பறிப்பது எனப் பல வகையில் மோசடி செய்து வருகிறார்கள். 

அரசு மருத்துவமனை

குழந்தையின்மைச் சிகிச்சைக்காக (Assisted Reproductive Technology Bill) ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் சட்டமும் போதிய பலனளிக்கவில்லை. அதில் பல்வேறு விதமான உள்நோக்கங்கள் இருக்கின்றன. தற்போதைய சூழலுக்கு, தேவைக்கேற்ப அதில் நிறைய மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும். அரசு, செயற்கைக் கருத்தரிப்பு மையங்களை மிகத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இவைதவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இலவசக் கருத்தரிப்பு மையங்கள் (Fertility centre) ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு இலவசமாக ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். நாளடைவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் தனியார் கருத்தரிப்பு மையங்களின் பிடியிலிருந்து அப்பாவி மக்களை மீட்க முடியும்’’ என்கிறார் மருத்துவர் சாந்தி.சித்த மருத்துவர் சிவராமன்

`மக்கள் தங்களின் வாழ்வியலைச் சரியான முறையில் அமைத்துக்கொண்டால் இதுபோன்ற மையங்களை நோக்கிச் செல்லத் தேவையே இருக்காது’ என்று சொல்லும் சித்த மருத்துவர் சிவராமன், அவை குறித்து விரிவாகப் பேசினார். 

``பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாட்டுக்கு முக்கியக் காரணியாக இருக்கிறது. முன்பு, ஆண் விந்தணுவின் சராசரி எண்ணிக்கையைக் கணக்கிட்டால், ஒரு மி.லி விந்தணுவில் 40 - 120 மில்லியன் உயிரணுக்கள் இருந்தன. இப்போது அது 20 மில்லியனாகக் குறைந்துவிட்டது. எனவே, இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும்.

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைப் பருவத்தில் அதிகமாக இனிப்புகளைச் சாப்பிடுவதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாகின்றன. அதனால் மாதவிடாய் தள்ளிப் போவதுடன் கருமுட்டை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுக் கருவுறுதலில் பிரச்னை உண்டாகிறது. எனவே, இனிப்புப் பண்டங்கள் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

உயிரணுக்கள்

உடல் எடைக்குத் தகுந்த உழைப்பைச் செலுத்தாமல் இருப்பது, அதிகமான மன அழுத்தங்களால் அவர்களது குழந்தைமனம் சிதைந்துபோவதும் பெண்களின் ஹார்மோன் சுரப்பதில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அதனால் சினைமுட்டை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுக் கருத்தரித்தலில் சிக்கல் உண்டாகிறது. குறிப்பாக, தைராய்டு ஹார்மோன் பிரச்னை அதிகரித்திருப்பதும் குழந்தையின்மைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. 

ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிவதால், உடல் உள்ளுறுப்புகளுக்குப் போதிய காற்று செல்லாததாலும், உறுப்புகள் தளர்வாக இல்லாமலிருப்பதாலும் உடல் சூடு அதிகரிக்கிறது. அதனால் ஆண்களின் விதைப்பையும் பெண்களின் சினைப்பையும் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க, இறுக்கமான உடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். 

பொதுவாகத் தம்பதிகளுக்கிடையிலான காதல், ஈர்ப்பு குறைந்து, வாழ்க்கையை இயந்திரத்தனமாக மாற்றிக் கொண்டதும் குழந்தையின்மைப் பிரச்னைக்கு முக்கியக் காரணம். குழந்தை பெற்றுக்கொள்வதைத் தங்களது விருப்பத்துக்கேற்ப அவசரப்படுத்துவதும், தாமதப்படுத்துவதும் ஒரு சில வீடுகளில் நடக்கின்றன. இயற்கையாக நிகழும் ஒரு விஷயத்தை தங்களுக்கு ஏற்றவாறு வளைப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. 

ஜீன்ஸ்

உணவில் பழங்கள், பயறுகள், கீரைகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கீரைகளில், சிறுகீரை, தாளிக்கீரை, முருங்கைக்கீரை, தூதுவளைக் கீரை ஆகியவற்றை இளம்வயதில் அதிகளவில் சாப்பிட வேண்டும். திருமணமானவர்கள் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும். கீரை பாலியல் உணர்ச்சியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இவை தவிர கீரைகளில் இருக்கும் போலிக் ஆசிட் கரு முட்டை வளர்ச்சிக்கும் கருத்தரித்த பிறகு கருவின் வளர்ச்சிக்கும் மிகவும் உதவி புரியும். பயறுகளை எடுத்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான புரதச் சத்துகள் கிடைக்கும். 

ஆண்கள் காலை, மாலை என இரண்டு வேளை குளிக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு. நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். அதிலுள்ள நிறமிச் சத்துகள் கருத்தரிப்பை ஊக்குவிக்கக்கூடியவை. அதனால் ஒருநாளைக்கு சாப்பிடும் உணவில்  20 முதல் 30 சதவிகிதம் பழங்கள் சாப்பிட வேண்டும்.  

குழந்தை

இரவில் நீண்டநேரம் விழித்திருப்பதால் உடல்சூடு அதிகரித்து விந்தணுக்களைப் பாதிக்கும். எனவே, வெகு சீக்கிரமாக தூங்கிவிட வேண்டும். ஆண், பெண் இருவருமே காலை, மாலை இரண்டு வேளையும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சிறு சிறு உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். புகைப் பழக்கம், மதுப் பழக்கம் போன்ற தீய பழக்கங்களைக் கைவிட வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகச் செய்தாலே எந்தப் பிரச்னையும் அணுகாது’’ என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன் 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close