குழந்தைகளுக்கு அம்மை வராமல் தடுக்க முடியுமா? மருத்துவர் விளக்கம்! | How to prevent chickenpox in kids

வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (23/02/2019)

கடைசி தொடர்பு:19:34 (25/02/2019)

குழந்தைகளுக்கு அம்மை வராமல் தடுக்க முடியுமா? மருத்துவர் விளக்கம்!

அம்மை வராமல் தடுக்க முடியுமா, வந்தால் என்ன செய்வது, தடுப்பூசிகள் இருக்கின்றனவா, அம்மையை ஏன் அம்மனோடு இணைத்துப் பேசினார்கள்? - விளக்கமாகச் சொல்கிறார் மருத்துவர்.

ந்த வருடத்துக்கான வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. `இப்பதானே பனிக்காலம் முடிஞ்சது. சுள்ளுனு அடிக்காம கொஞ்சம் இதமா ஆரம்பிக்கலாமே' என்றெல்லாம் இந்த முறை சூரியன் பெரிய மனசு வைக்கவில்லை போலும். பிப்ரவரி இறுதியிலேயே எட்டு, எட்டரைக்கெல்லாம் முகம் எரிகிற அளவுக்கு தன் கடமையை ஆற்ற ஆரம்பித்துவிட்டது. விளைவு, கத்திரி வெயிலில் வருகிற அம்மை இப்போதே குழந்தைகளுக்கு வர ஆரம்பித்துவிட்டது. அம்மை வராமல் தடுக்க முடியுமா, வந்தால் என்ன செய்வது, இதற்குத் தடுப்பூசிகள் இருக்கின்றனவா என்ற கேள்விகளுக்குப் பதில் சொன்னதோடு, அந்தக் காலத்தில் அம்மையை ஏன் அம்மனோடு இணைத்துப் பேசினார்கள் என்பதற்கான காரணத்தையும் விளக்கினார் குழந்தை நல மருத்துவர் பழனிராஜ். 

அம்மை

மாடல் படம் மட்டுமே...

வராமல் தடுக்க முடியுமா?

குழந்தை நல மருத்துவர் பழனிராஜ்``இப்போதே சின்னம்மை எனப்படுகிற சிக்கன்பாக்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்னிடம் சிகிச்சைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்னை மக்கள்தொகை நெருக்கமாக இருக்கிற பகுதிகளில் வரும். ஏனென்றால் அங்கெல்லாம் சுத்தம், சுகாதாரம் குறைச்சலா இருக்கும். அதனால், உங்கள் வீட்டுக்குள் மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். மற்றபடி, குழந்தைகளை அதிக நேரம் வெயிலில் விளையாட விடாதீர்கள். பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடனே டிவி பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள். அவர்களை வற்புறுத்தியாவது நிறைய தண்ணீர் குடிக்க வையுங்கள். தர்பூசணி மாதிரி சம்மர் சீசன் பழங்களைத் தினமும் சாப்பிடக் கொடுங்கள். குழந்தைகள் தினமொரு கீரைச் சாப்பிட வேண்டியது இந்த சீசனில்தான்.  சமையலில் நிறைய நீர் காய்கறிகள் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் இரண்டு வேளைப் பிள்ளைகளை குளிக்க வையுங்கள். உங்கள் ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் என்றால், மாலையில் ஈர டவலிலாவது குழந்தைகளைத் துடைத்து விடுங்கள். இவற்றையெல்லாம் செய்தால், குழந்தைகளுக்குச் சின்னம்மை வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.''

வந்து விட்டால் என்ன செய்வது? 

பழங்கள்

``சின்னம்மை வராமல் தடுக்க தடுப்பூசி இருப்பதுபோல, வந்துவிட்டால் சரி செய்ய மாத்திரையும் இருக்கிறது. அம்மை அறிகுறி வந்த 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையைச் சாப்பிட ஆரம்பித்தால், 5 நாளில் அம்மை வந்த சுவடே தெரியாமல் அப்படியே அமுங்கி விடும். இந்த மாத்திரையைக் குழந்தைகளும் சாப்பிடலாம். அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகவும் கிடைக்கிறது.''

சின்னம்மை வராமல் தடுக்க என்ன தடுப்பூசி போட வேண்டும்?

தண்ணீர் குடிக்க வேண்டும்

``பொதுவாகத் தட்டம்மை, பொன்னு வீங்கி போன்ற அம்மைகள் வராமல் தடுப்பதற்கு பிரைவேட் மருத்துவமனைகளில் எம்.எம்.ஆர். தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் என்றால் எம்.ஆர். தடுப்பூசி போடுகிறார்கள். ஒரு குழந்தையின் ஒன்பதாவது மாதத்திலேயே இந்தத் தடுப்பூசியைப் போடலாம். இதைத் தவிர, சிக்கன்பாக்ஸுக்கும் தடுப்பூசி இருக்கிறது. சிறு குழந்தைகள் என்றால், ஒரு டோஸ் போட்டுக்கொண்டாலே போதும். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால், ஒரு மாதத்தில் இரண்டு டோஸ் கொடுக்க வேண்டும். வெறும் டோஸ் மட்டும் போட்டால் எதிர்ப்புசக்தி முழுமையாகக் கிடைக்காமல் சின்னம்மை வந்துவிடலாம். உங்கள் குழந்தைகளுக்கு மேலே சொன்ன தடுப்பூசிகளை போடப் போடுகிறீர்கள் என்றால், இவற்றைப் பற்றியெல்லாம் உங்கள் மருத்துவரிடம் தெளிவாக கேட்டு, பிறகு போட்டுக் கொள்ளலாம்.''

அம்மனோடு ஏன் அம்மையை இணைத்தார்கள்?

``அந்தக் காலத்தில் அம்மை வந்தால் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா? அப்போது அம்மை வராமல் தடுக்க தடுப்பூசியோ, வந்துவிட்டால் சரி செய்ய மருந்தோ கிடையாது. அம்மை வந்தவர்கள் வெளியே போனால், மற்றவர்களுக்கும் பரவிவிடும் என்பதால் அவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வைத்தார்கள். இதைச் சாதாரணமாக சொன்னால் கேட்க மாட்டார்கள் என்பதால்தான், அம்மைக்கும் அம்மனுக்கும் தொடர்பு ஏற்படுத்தி அம்மையைப் பரவாமல் பார்த்துக்கொண்டார்கள். வாசலில் வேப்பிலையைச் சொருகி, மற்றவர்கள் அந்த வீட்டுக்குள் போகாமல் தடுத்தார்கள். தவிர, வேப்பிலைக்குக் கிருமிகளை கொல்லும் குணமும் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே.'' 

அம்மை தொல்லை இல்லாமல் குழந்தைகளைக் காப்போம். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close