முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மெமோ கொடுத்த விவகாரம்... நடந்தது என்ன? | Story about madras medical college post graduate students memo issue

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (26/02/2019)

கடைசி தொடர்பு:16:47 (26/02/2019)

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மெமோ கொடுத்த விவகாரம்... நடந்தது என்ன?

ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டுக்குப் போகாததால் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மெமோ தரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மெமோ கொடுத்த விவகாரம்... நடந்தது என்ன?

ளுநர் மாளிகையில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் தாயாரைக் கவனித்துக்கொள்ள, முதுநிலை மருத்துவ மாணவர்களை ஷிப்ட் முறையில் அனுப்பியதாகவும் செல்ல மறுத்த மாணவர்களுக்கு மெமோ அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான செய்திகள், புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் உலவி வருகிறது. மருத்துவச் செயற்பாட்டாளர்கள் பலரும் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள்.

மெமோ

இந்தச் சம்பவம் குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் நம்மிடம் பேசினார்.ரவீந்திரநாத்

``கவர்னர் மாளிகையில், தலைமைச் செயலர் ரேங்கில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பணிபுரிந்து வருகிறார். அவரின் தாயார் ஆஸ்துமா தொந்தரவால் உடல்நிலை சரியில்லாமல்  கடந்த சில நாள்களாக அவதிப்பட்டிருக்கிறார். அதனால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். அப்போது முதுநிலை மாணவர்களுக்கு இடைவிடாது ட்யூட்டி போடப்பட்டு அவர் கவனிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், டிஸ்சார்ஜ் ஆன பிறகும் இது தொடர்ந்துள்ளது. வீட்டில் படுத்த படுக்கையாக இருப்பவரைக் கவனித்துக்கொள்ள முதுநிலை மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் செல்ல மறுத்ததால் அவர்களுக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. வி.ஐ.பி ட்யூட்டிக்குச் செல்ல மறுத்ததால் மெமோ தரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அம்மா எப்படி வி.ஐ.பி ஆவார் என்று தெரியவில்லை. அதோடு வீட்டுக்குச் சென்று சிகிச்சையளிக்க வேண்டிய அவசியமே இல்லை. இது தவறான ஒரு செயல். மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் விதிகளுக்கு எதிரானது. 

இன்றைக்கு ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் அம்மாவுக்காக வீட்டுக்குச் சென்று சிகிச்சை வழங்க அனுமதித்தால், நாளை இதர ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வீட்டுக்குச் சென்றும் ட்யூட்டி பார்க்கும் நிலை ஏற்படும்.இந்த நிலை கண்டிக்கத்தக்கது. இது அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகம். தமிழக அரசு வேண்டுமானால் ஆளுநரிடமும் ராஜ்பவனில் பணிபுரியும் அதிகாரிகளிடமும் அனுசரித்து அடிபணிந்து போகலாம், மருத்துவர்கள் அப்படிப்போக வேண்டிய அவசியமில்லை. 

அட்டவணை

முதுநிலை மாணவர்களுக்கு மெடிக்கல் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில்தான் ட்யூட்டி போட வேண்டும். வி.ஐ.பி வீடுகளில் உள்ளவர்களை எல்லாம் கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இப்படி வீடுகளுக்குச் சென்று சிகிச்சையளிக்கும்போது அவர்கள் அநாகரிகமாக நடத்தப்பட வாய்ப்புள்ளது. பெண் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உண்டாகும். ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பணியில் இருக்கும் மருத்துவர்களை அடிக்கவோ துன்புறுத்தவோகூட வாய்ப்புள்ளது. 

ஆளுநர் மாளிகை அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர், அங்கு பணியாற்றும் ஊழியர்கள், அந்தப் பகுதிவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் ஆளுநர் மாளிகை அருகில் அரசு ஒரு மருத்துவமனையை அரசே உருவாக்கலாம். அதைவிடுத்து, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதும், அதற்குத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை, அரசு மருத்துவமனை டீன் மற்றும் மயக்க மருந்தியல் துறைத் தலைவர் உள்ளிட்டோர் உடந்தையாக இருப்பதும் கண்டனத்துக்குரியது...’’ என்றார் மருத்துவர் ரவீந்திரநாத்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மெமோ கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட முதுநிலை மாணவர்களைத் தொடர்புகொண்டோம். அழைப்பு எடுத்த ஒருசிலர், `இந்தச் சம்பவம் குறித்துப் பேசத் தயாரில்லை’ என்றனர். ஒரு சில மாணவர்கள், ஊடகத்தில் இருந்து அழைப்பதாகச் சொன்னதும் இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.

ஆளுநர் மாளிகை

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் ஜெயந்தியிடம் இதுகுறித்துப் பேசினோம்,

``ராஜ்பவனில் செயல்பட்டுவரும் மருத்துவமனை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரிவதற்காகத்தான் முதுநிலை மாணவர்களுக்கு ட்யூட்டி போடப்பட்டிருக்கும்... அவ்வளவுதான்’’ என்றவரிடம்,
மாணவர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது குறித்துக் கேட்டோம்.

``ஆபரேஷன் தியேட்டருக்குச் செல்லாததால் அந்தத் துறைத் தலைவர், துறை சார்ந்த நடவடிக்கை எடுத்துள்ளார். சரியாகச் செயல்படாத மாணவர்களின் மீது எப்போதும் எடுக்கப்படும் ஒரு நடவடிக்கைதான். அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை’’ என்றார் அவர்.

தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவிடம் இந்தச் சம்பவம் குறித்துப் பேசினோம்,

``இந்தச் செய்தியை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. விசாரித்து, தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார் அவர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close