4 அல்லது 5-ம் மாதத்திலேயே கர்ப்பிணிகளின் பாதம் வீங்கினால் பிரச்னையா? மருத்துவ விளக்கம் | A doctor explains whether feet are swelling in pregnancy time is normal or not

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (28/02/2019)

கடைசி தொடர்பு:18:55 (28/02/2019)

4 அல்லது 5-ம் மாதத்திலேயே கர்ப்பிணிகளின் பாதம் வீங்கினால் பிரச்னையா? மருத்துவ விளக்கம்

``பாதங்களில் இருக்கிற வீக்கமானது மெள்ள மெள்ள கணுக்கால், தொடை, வயிறு, முகம் என்று வீக்கம் பரவினால் அது நார்மல் கிடையாது. உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். இவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம்.''

4 அல்லது 5-ம் மாதத்திலேயே கர்ப்பிணிகளின் பாதம் வீங்கினால் பிரச்னையா? மருத்துவ விளக்கம்

ர்ப்பிணிப் பெண்களின் பாதங்கள் வீங்குவதை நாமெல்லாருமே பார்த்திருப்போம். அனுபவித்தும் இருப்போம். அப்படிப் பாதங்கள் வீங்கி இருக்கிற நேரத்தில், டாக்டர் சில கேள்விகளைக் கேட்டு விட்டு, ரத்த அழுத்தப் பரிசோதனையையும் செய்வார். வீட்டில் இருக்கிற பெரியவர்களோ, `கர்ப்பமா இருக்கிறப்போ கால் வீங்குறது சகஜம்தான். விடு' என்று சம்பந்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லி விடுவார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, பொதுவாகக் கர்ப்பமாக இருக்கும்போது எந்த மாதத்தில் கால் வீங்கும், எந்த மாதத்தில் கால் வீங்கக் கூடாது, கால் வீங்குவது நார்மலா அல்லது அப்நார்மலா, யாருக்கெல்லாம் இந்தப் பிரச்னை அதிகமாக வரும், தீர்வுகள் என்னென்ன..? மகப்பேறு மருத்துவர் நிவேதாவிடம் கேட்டோம். 

கர்ப்பிணி

கர்ப்பிணிகளுக்கு எந்த மாதத்தில் பாதங்கள் வீங்கும்?

பொதுவாக ஆறு அல்லது ஏழு மாதத்துக்குப் பிறகு, கர்ப்பிணிகளுக்குப் பாதங்கள் வீங்க ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் அவர்களின் உடல் எடை அதிகமாவதுதான். சில பெண்களுக்கு 4 அல்லது 5-ம் மாதத்திலேயே பாதங்கள் வீங்க ஆரம்பிக்கும். பொதுவாக இந்த மாதங்களில் வீங்கக் கூடாது. இவர்கள் உடனடியாக அவர்களுடைய மகப்பேறு மருத்துவரைப் பார்த்து ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து பார்க்க வேண்டும். ரத்த அழுத்தம் நார்மல் என்றால், பயப்படத் தேவையில்லை. 

டாக்டர் நிவேதாயாருக்கெல்லாம் இந்தப் பிரச்னை அதிகமாக வரும்?

ஆசிரியர்கள்போல ரொம்ப நேரம் நின்றபடி வேலை பார்க்கிற கர்ப்பிணிப் பெண்களுக்கும்,  ஐ.டி.இண்டஸ்ட்ரி போல ரொம்ப நேரம் உட்கார்ந்துகொண்டு காலை தொங்கப்போட்டபடி வேலை பார்க்கிற கர்ப்பிணிகளுக்கும் இந்தப் பிரச்னை அதிகமாக வரும்.   

கால் வீங்குவது நார்மலா அல்லது அப்நார்மலா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

கர்ப்பிணிகள் படுத்து ஓய்வெடுத்தாலோ அல்லது தூங்கி காலையில் எழுந்திருக்கும்போதோ இந்த வீக்கம் வடிந்து விட்டிருந்தால், பயப்பட ஒன்றும் இல்லை. இவர்கள் கால்களை அதிக நேரம் தொங்கப்போடாமல் பார்த்துக்கொண்டாலே போதும். ரொம்ப நேரம் நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோ வேலை பார்க்கிற கர்ப்பிணிகள் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலோ, காலை எதன் மீதாவது தூக்கி வைத்தபடி வேலை பார்த்தாலோ வீக்கம் சரியாகி விடுகிறது என்றால், இந்தக் கால் வீக்கமும் நார்மல்தான். இது எப்போது பிரச்னை ஆகும் என்றால், ஓய்வு எடுத்தும் வீக்கம் வடியாமல் இருப்பது, பாதங்களில் இருக்கிற வீக்கமானது மெள்ள மெள்ளக் கணுக்கால், தொடை, வயிறு, முகம் என்று வீக்கம் பரவினால் அது நார்மல் கிடையாது. உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். இவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம். 

பார்லி வாட்டர் குடித்தால் பாத வீக்கம் வடிந்து விடுமா?

கர்ப்பிணி

இது பாட்டிகள் சொல்கிற விஷயம். பார்லி வாட்டர் குடித்தால் வீக்கம் வடியும் என்பதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை என்பதால், மருத்துவர்கள் நாங்கள் இதைப் பரிந்துரை செய்வதில்லை. அது தேவையும் இல்லை. இதேபோல, `சாப்பாட்டில் உப்பைக் குறைத்தால் பாத வீக்கம் வடிந்து விடுமா டாக்டர்' என்பார்கள் சிலர். இதுவும் உண்மை கிடையாது. கர்ப்பமாக இருக்கும்போது திடீரென உப்பைக் குறைப்பதும், உப்பே இல்லாமல் சாப்பிடுவது செய்யவே கூடாது. 

வேறு ஏதேனும் தீர்வுகள் இருக்கின்றனவா? 

ரத்த அழுத்தம்

தினமும் அரை மணி வாக்கிங் போவது நல்ல தீர்வைத் தரும். தூங்கும்போதும் கால்களை தலையணைகள் மீது வைத்தபடி தூங்கலாம். வேலை பார்க்கும் இடத்திலும் காலை எதன் மீதாவது உயர வைத்தபடி வேலை பார்க்கலாம். அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை உங்கள் இடத்தை விட்டு, எழுந்து நடக்கலாம். ரத்த அழுத்தப் பிரச்னையால்தான் பாதங்கள் வீங்குகின்றன என்றாலும் பயப்படத் தேவையில்லை. அதற்கான மருந்துகள், தேவைப்பட்டால் சிசேரியன் செய்து தாய், சேய் இருவரையும் காப்பாற்றுவது என இன்றைக்கு மருத்துவ முறைகள் வளர்ந்துவிட்டன. டோன்ட் வொர்ரி!

கர்ப்ப காலத்தை சந்தோஷத்துடன் கடப்போம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close