பிரசவத்துக்குப் பிறகு அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது எப்படி? - மருத்துவ விளக்கம்! | Can women after c section workout on exercises? doctors explain

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (01/03/2019)

கடைசி தொடர்பு:12:42 (02/03/2019)

பிரசவத்துக்குப் பிறகு அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது எப்படி? - மருத்துவ விளக்கம்!

பெண்களின் வாழ்க்கை பரிபூரணம் அடைவது அவர்கள் அடையும்போதுதான். ஒரு பெண் கருவுற்ற பிறகும், பிரசவத்துக்குப் பிறகும் உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.

பிரசவத்துக்குப் பிறகு அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது எப்படி? - மருத்துவ விளக்கம்!

பெண்களின் வாழ்க்கை பரிபூரணமடைவது அவர்கள் தாய்மை அடையும்போதுதான். ஒரு பெண் கருவுற்ற பிறகும், பிரசவத்துக்குப் பிறகும் உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக, பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது.

எடை

இளமைக் காலத்தில் உடல்  ஆரோக்கியத்திலும் பொலிவான தோற்றத்திலும் கவனம் செலுத்தும் பெண்கள் பலர், குழந்தை பிறந்த பிறகு அதில் கவனம் செலுத்தத் தவறிவிடுகின்றனர். வெகு சிலரே  குழந்தை பிறந்த பிறகும், தன் உடலில் அக்கறை செலுத்தி கச்சிதமான உடலமைப்பை மீண்டும் பெறுகின்றனர்.

`பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் உடல்எடை அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு, உடல் எடை கூடுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவு பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க முடியும்’ என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

`பிரசவத்துக்குப் பிறகு, பெண்கள் உடல்பருமனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள், உடல்பருமன் ஏற்பட்டுவிட்டால் அதைக் குறைத்து மீண்டும் பொலிவான தோற்றத்தை அடைவதற்கு என்னென்ன உடற்பயிற்சி, உணவு வழிமுறைகளைக் கையாளலாம்’ என்று மகப்பேறு மருத்துவர் டாக்டர் கனிமொழியிடம்  கேட்டோம். விரிவாகப் பேசினார்.

 

எடை

``கர்ப்பகாலத்தில் ஒரு பெண் 10 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிக்கக்கூடும். பிரசவத்துக்குப் பிறகும் அதிகரித்த எடை அப்படியே இருக்கும். அதைக் குறைப்பதற்கு பல பெண்கள் முன்வருவதில்லை. குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துபவர்கள் தங்கள் உடல்நலனைக் கனிக்கத் தவறிவிடுகிறார்கள்.
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக அளவுக்கு மீறி அதிக உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீர்ச்சத்துள்ள ஆகாரங்களும் தண்ணீரும் போதிய அளவு எடுத்துக்கொண்டாலே போதுமானது. குழந்தைக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் என்று நினைத்து, பாலுடன் சேர்த்துப் பருகும் பானங்களைக் குடிக்கக் கூடாது. இதனால் தாயின் உடல் எடைதான் அதிகரிக்குமே தவிர, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு எந்த வகையிலும் உதவாது. 

எடைதாய்ப்பால் அதிகம் கொடுப்பதால் உடல் எடை குறைய வாய்ப்புண்டு. அதனால் குழந்தை பிறந்த பிறகு இரண்டு வயது வரை தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டலாம். சாப்பிடும் உணவில் 15 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 22 சதவிகிதம் ஸ்டார்ச், 22 சதவிகிதம் கொழுப்புசத்து என்கிற விதத்தில் உணவு அட்டவணையைப் பின்பற்றினால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
சுகப்பிரசவம் ஆனவர்கள் என்றால், குழந்தை பிறந்த 6 வாரங்கள் கழித்து சிறிய உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம். சிசேரியன் அறுவைசிகிச்சை செய்திருந்தால், 2 மாதம் கழித்து உடற்பயிற்சிகள் செய்யலாம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்படும்,   உடல்எடையும் குறைந்து பிரசவத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தது போன்ற தோற்றம் ஏற்படும். 
பிரசவத்துக்குப் பிறகு ஏற்பட்ட உடல்பருமன், தொப்பை தெரியாமல் இருக்க இடுப்பில் பெல்ட் அணியும் பழக்கம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. பெல்ட் அணிவதால் தொப்பை குறையாது. மருத்துவரின் ஆலோசனையின்றி அதை அணியவும் கூடாது’’ என்கிறார் மருத்துவர் கனிமொழி.

பிரசவத்துக்குப் பிறகு உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கப் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து சித்த மருத்துவர் மல்லிகா விளக்குகிறார்.
* நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், கொழுப்புச்சத்து குறைவாகக் காணப்படும் மீன் உள்ளிட்ட கடல் உணவுகள், புரதச்சத்து நிறைந்த கோழிக்கறி, பருப்புகள், முட்டையின் வெள்ளைக்கரு, முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

docter* கொழுப்புச்சத்து நிறைந்த பொரித்த உணவுகள், பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகள், உப்புச்சுவை நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

* கிழங்கு வகைகளையும் தாய்மார்கள் உணவில் தவிர்ப்பது நல்லது.

* கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி வகைகளைத் தவிர்த்து, கம்பு, சோளம் போன்ற சிறுதானிய உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  

* சிறுதானிய உணவு வகைகள் குழந்தைக்கும் ஆரோக்கியமானது. தாயின் உடல் எடையும் குறையும். 

* பால் சுரப்பை அதிகரிக்க ஆரோக்கியமில்லாத, தேவையற்ற உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 
* பால் சுரப்பை அதிகரிக்கச் சித்த மருத்துவரின் பரிந்துரையோடு சதாவேரி லேகியம், சதாவேரி நெய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம் 

எடை

பிரசவத்துக்குப் பிறகான வாழ்க்கை ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமானது. அதனால் பிரசவத்துக்குப் பிறகு தங்கள் உடல் ஆரோக்கியத்தில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும். `உடல் பருமன் பல்வேறு தொற்றாநோய்களுக்கு வழிவகுப்பது மட்டுமன்றி, மனநலத்தையும் பாதிக்கும்’ என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நாள்தோறும் தனக்கென்று சிறிதுநேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்வதாலும், நல்ல உணவுப் பழக்கவழக்கங்களும் இருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை உறுதி!

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close