தமிழகத்தில் ஆண்டுக்கு 65,000 கருக்கலைப்புகள்... அதிகரிக்கிறது போலி மருத்துவர்களின் ஆதிக்கம்! | 65 thousand abortions per annum in Tamil Nadu

வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (03/03/2019)

கடைசி தொடர்பு:14:36 (07/03/2019)

தமிழகத்தில் ஆண்டுக்கு 65,000 கருக்கலைப்புகள்... அதிகரிக்கிறது போலி மருத்துவர்களின் ஆதிக்கம்!

16 சதவிகிதத்தினர் மட்டுமே கருக்கலைப்பை அரசு மையங்களில் செய்கிறார்கள். அதில் 3.5 சதவிகிதம் பேர் தகுதியில்லாத நபர்கள் அல்லது போலி மருத்துவர்களையே நாடுகின்றனர்.

தமிழகத்தில் ஆண்டுக்கு 65,000 கருக்கலைப்புகள்... அதிகரிக்கிறது போலி மருத்துவர்களின் ஆதிக்கம்!

`பாதுகாப்பான கருக்கலைப்புக்கு சட்டம் (MTP Act, 1971) இயற்றி, ஏறத்தாழ 50 வருடங்கள் ஆகப்போகின்றன. ஆனால், சமூகம் இன்றளவும் பெண்களை பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்துகொள்ளவிடாமல் தடுக்கிறது’ என ஆதங்கப்படுகின்றனர் மருத்துவ செயற்பாட்டாளர்கள். பெண்ணுக்குப் பாதுகாப்பான தாய்மை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு பாதுகாப்பான கருக்கலைப்பும் முக்கியம் வாய்ந்தது என்பதுதான் அவர்கள் முன்வைக்கும் வாதம். 

தேசிய சுகாதார புள்ளிவிவரத்தின்படி, தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 65,000 கருக்கலைப்புகள் நடக்கின்றன எனக் கணிக்கப்பட்டது. `கட்மேச்செர்’ என்ற ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 2015-ம் ஆண்டில் மட்டும் 7 லட்சத்துக்கும் அதிகமான கருக்கலைப்புகள் தமிழகத்தில் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. எனில், ஒவ்வொரு வருடமும் தோராயமாக 10 சதவிகித கருக்கலைப்புகள்தான் அரசிடம் பதிவு செய்யப்படுகின்றன. 90 சதவிகிதக் கருக்கலைப்புகள் தனியார் மருத்துவமனைகள், தரகர்கள், அல்லது முறைசாரா நபர்களிடம் முறையற்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.

கருக்கலைப்பு

``பாதுகாப்பான கருக்கலைப்பு என்பது, சுகாதாரமான இடத்தில், தகுதிவாய்ந்த மருத்துவரின் வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலுக்கும் உயிருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் செய்யப்படும் கருக்கலைப்பு. `பாதுகாப்பான தாய்மையைப்போல, பாதுகாப்பான கருக்கலைப்பும் அவசியம்’ என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான், அரசு கருக்கலைப்பு சேவை மையங்கள். அந்த வகையில் 20,000 மக்கள் தொகைக்கு ஒரு கருக்கலைப்பு சேவை மையம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், தமிழக அளவில் `கருக்கலைப்பு சேவைகள்’ சிறப்பாக இருக்கும் மாவட்டம் என அறியப்படும் காஞ்சிபுரத்திலேயே 70,000 மக்களுக்கு ஒரு கருக்கலைப்பு மையம்தான் உள்ளது. மற்ற மாவட்டங்களின் நிலை இதைவிட மோசம்.

16 சதவிகிதத்தினர் மட்டுமே கருக்கலைப்பை அரசு மையங்களில் செய்கிறார்கள். அதில் 3.5 சதவிகிதம் பேர் தகுதியில்லாத நபர்கள் அல்லது போலி மருத்துவர்களையும், 84 சதவிகிதம் பேர் தனியார் அமைப்புகளையும் நாடுகின்றனர். அரசு மையங்களுக்குச் செல்லாததற்கு, `சம்பந்தப்பட்ட பெண்ணின் கர்ப்பம் குறித்த ரகசியங்கள் முறையாகக் காக்கப்படுவதில்லை’ என்கிற குற்றச்சாட்டை பலரும் முன்வைக்கின்றனர். குறிப்பாக, திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு தொடர்பான ரகசியங்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தனியார் நிறுவனங்களையே அதிகம் நம்புகின்றனர். திருமணமான பெண்களில் சிலரும்கூட, `பாதுகாப்பான மற்றும் முறையான சிகிச்சைகள் தனியார் மருத்துவமனையில்தான் கிடைக்கின்றது’ என்றே தெரிவிக்கின்றனர்.

கருக்கலைப்பு

தமிழக அளவில், கருக்கலைப்பு செய்து கொள்பவர்களில் நான்கில் இருவர், அதன் காரணமாக சமூகத்திலிருந்து பாலசுப்பிரமணியன்புறக்கணிக்கப்படுவதாகவும், அவமானப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். சமூகம் கருக்கலைத்தலை பாவமாகச் சித்திரித்திருப்பதால், தயக்கப்பட்டு சிகிச்சையைத் தாமதப்படுத்துகின்றனர். முதல் 3 வாரத்துக்குள் கரு முறையாகக் கலைக்கப்படாவிட்டால், மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். அப்படியான சூழலில் தொடர் சிகிச்சைக்கு அவர்கள் உள்ளாக வேண்டியிருக்கும். இது கர்ப்பம் குறித்த அவர்களின் ரகசியத்தை வெளிப்படுத்திவிடும் என்றெண்ணி,  உடனடி சிகிச்சைகள் அளிப்பதாக வாக்களிக்கும் தனியார் மருத்துவமனைகள், அல்லது தரகர்கள், முறைசாரா நபர்களைச் சென்றடைந்து பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்குத் தங்களை உட்படுத்திக்கொள்கின்றனர். 

முறையான மருத்துவ கருக்கலைப்புக்கு ரூ.1,000 முதல் ரூ. 10,000 வரை செலவாகும். ஆனால், திருமணம் ஆகாத அல்லது வளரிளம் பருவத்தைச் சேர்ந்த பெண்களிடமும் ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்கும் பெண்களிடமும் தனியார் மருத்துவமனைகள் 20,000 முதல் 40,000 ரூபாய் வரை பெற்றுக்கொள்கின்றன’’ என அதிர்ச்சி அளிக்கிறார், `கிராமப்புற மகளிர் சமூக கல்வி மைய’த்தின் நிர்வாகி பாலசுப்பிரமணியன்.

தமிழகத்தில் நடக்கும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் தொடர்பாக மகப்பேறு மருத்துவர் குழு மற்றும் காமன் ஹெல்த் அமைப்போடு இணைந்து விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் இவர். 

கருத்தரிப்பு மையம்

பாதுகாப்பற்ற கருக்கலைப்பைத் தடுக்க, தேவையில்லாத கர்ப்பத்தைத் தடுக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். கருத்தடைச் சாதனங்கள் உபயோகப்படுத்தும் முறைகள், அதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். தேசிய சுகாதார நல ஆய்வில் (NFHS), பத்து வருடங்களுக்கு முன்பு 56 சதவிகிதமாக இருந்த கருத்தடை சாதன உபயோகம், 2015 -ம் வருடத்தில் 53 சதவிகிதமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.  சம்பத் குமாரி

கருத்தடை சாதனங்கள் குறித்தும், பாதுகாப்பற்ற கருக்கலைப்பை தடுப்பதற்கான நடவடிக்கை குறித்தும் மகப்பேறு மருத்துவர் சம்பத் குமாரியிடம் பேசினோம்.

``கருவைக் கலைக்கும் சிகிச்சையில், `மெடிக்கல் அபார்ஷன்’, `சர்ஜிக்கல் அபார்ஷன்’ என இரு முக்கியமான வகைகள் இருக்கின்றன. கருத்தரித்த ஏழு வாரத்துக்குள் சிகிச்சைக்கு உட்பட்டால் மாத்திரைகள் மூலமாக எளிதாகக் கருவைக் கலைத்துவிடலாம். ஏழு வாரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பம் என்றால், சர்ஜிக்கல் அபார்ஷன் முறைதான் செய்துகொள்ள வேண்டும். இதையும் இருபது வாரத்துக்குள் செய்துவிட வேண்டும் என்பது சட்டம். காரணம், அதற்குப் பின்னான காலங்களில் செய்யப்படும் கருக்கலைப்பு தாயின் உடலுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 

இரண்டு சிகிச்சைக்கு முன்னும் பின்னும், ஸ்கேன் மூலம் கரு கண்காணிக்கப்படும். சிகிச்சைக்கு முன், கரு கர்ப்பப்பையில் இருக்கிறதா, கருக்குழாயில் இருக்கிறதா என்ற பரிசோதனையும், சிகிச்சைக்குப் பின் கரு முழுமையாகக் கலைந்துவிட்டதா என்ற பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். கருவின் வளர்ச்சி, கரு தங்கியிருக்கும் இடம், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல்நலன் ஆகியவற்றின் அடிப்படையில், முறையான மருத்துவப் பரிந்துரையோடு சிகிச்சை செய்யப்படும். இப்படி இல்லாமல் மேற்கொள்ளப்படும் அனைத்துமே பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள்தாம்.

கருத்தடை

திருமணமாகாத, வளரிளம் பருவத்தைச் சேர்ந்தவர்களும்கூட, உடலுறவு, கர்ப்பம் தரித்தல், கருத்தடை வழிமுறைகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். நான்கு வகையான கருத்தடை முறைகள் உள்ளன. குறிப்பிட்ட நபரின் ஆரோக்கியத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர்கள் இதில் எந்தக் கருத்தடை முறையைப் பின்பற்றலாம் எனப் பரிந்துரைப்பார்கள். 

21 வயதுக்கு முந்தைய கருத்தரித்தல் தவறு என்பதால், அப்படியான பெண்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண் குறித்து முறையாகக் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தபின்னரே, சிகிச்சை அளிக்கப்படும். இதற்குப் பயந்துகொண்டு பலர் போலி மருத்துவர்களிடம் சிகிச்சைக்குச் சென்றுவிடுகின்றனர். பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கு அடிப்படையாக இருக்கும் தேவையற்ற கர்ப்பத்தை முன்னெச்சரிக்கையுடன் தவிர்ப்பது, இந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் எளிய தீர்வு!’’ என்கிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close