சிகரெட்டிலிருந்து சிதறும் துகள்கள் உயிரையே பறிக்கலாம்... குழந்தைகள் பத்திரம்! #ThirdHandSmoking | Third Hand Smoking is dangerous for Kids and Pets

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (04/03/2019)

கடைசி தொடர்பு:11:37 (04/03/2019)

சிகரெட்டிலிருந்து சிதறும் துகள்கள் உயிரையே பறிக்கலாம்... குழந்தைகள் பத்திரம்! #ThirdHandSmoking

``சுற்றி இருப்பவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என நினைப்பவர்கள், புகையில்லா சூழலை உருவாக்குவதுதான் சிறந்த வழி. அதாவது, புகைபிடிக்காமல்  இருப்பது.’’

சிகரெட்டிலிருந்து சிதறும் துகள்கள் உயிரையே பறிக்கலாம்... குழந்தைகள் பத்திரம்! #ThirdHandSmoking

`புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும்’ என்ற விளம்பரத்தைத் திரையரங்கில் அப்போதுதான் பார்த்திருப்பார்கள். வெளியே வந்து உடனே புகை பிடிக்கத் தொடங்கிவிடுவார்கள். காரணம், புகைப்பழக்கத்தைக் குறித்த இத்தகைய பாடங்கள் அவர்களுக்குப் புதிதல்ல. புகைப்பழக்கம் இருப்பவர்கள் அனைவருக்குமே, அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய முழு புரிதலும் இருக்கும். `இன்னும் ஒரு வாரம்தான். அதற்குப் பிறகு சிகரெட்டைத் தொடவே மாட்டேன்’ என்பவர்கள் தொடங்கி, `இதுதான் கடைசி சிகரெட்’ எனச் சொல்பவர்கள் வரை புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் ஏராளமானவர்கள் நம்மைச் சுற்றியும், நம் அன்றாட வாழ்வில் நம்முடன் பயணித்து வருகின்றனர். 

இரண்டாம் நிலை புகைப்பழக்கம்

புகைத்தலின்போது ஒருவர் உள்ளிழுத்து வெளியேற்றும் புகையை அருகில் இருப்பவர்கள் சுவாசிப்பதை `செகண்ட் ஹேண்ட் ஸ்மோகிங்’ (Second Hand Smoking) அதாவது இரண்டாம் நிலை புகைத்தல் என்று குறிப்பிடுகின்றனர். 

``பற்றவைத்த சிகரெட்டிலிருந்து வெளிவரும் புகை மற்றும் புகை பிடிக்கும் நபர் வெளிவிடும் புகை ஆகிய இரண்டையும் சுவாசிப்பதால், புகைபிடிக்காத ஒரு நபர், ஏறத்தாழ 7,000 ரசாயனங்களை உள்ளிழுத்துக்கொள்கிறார். அதில் அதிக நச்சுத்தன்மையுள்ள சுமார் நூறு ரசாயனங்கள் உடலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மைக் கொண்டது. அவற்றில் 70 புற்றுநோயை உண்டாக்கும்தன்மை கொண்டது.

குறிப்பாக, இரண்டாம் நிலை புகைத்தலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடுகள், சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா அல்லது உடனடி இறப்பு (Sudden Infant Death Syndrome - SIDS) போன்றவைகூட ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறது, இந்தியாவில் செயல்பட்டு வரும் பொது சுகாதார நிறுவனமான நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம். 

ஆபத்து

இரண்டாம் நிலை புகைத்தலுக்கு அடுத்தபடியாக மூன்றாம் நிலை புகைத்தல் (Third Hand Smoking) ஏற்படுத்தும் பாதிப்புகளாலும் அதிகம் பேர்  பாதிக்கப்படுகின்றனர். ஒருவர் புகை பிடிக்கும்போது, சிகரெட்டிலிருக்கும் துகள்கள் அவர் அணிந்திருக்கும் உடை, தரை, நாற்காலி, நுரையீரல் சிறப்பு நிபுணர் ஆயிஷாசோஃபா, மிதியடிகள் போன்றவற்றில் ஒட்டிக்கொள்ளும். இதைக் குழந்தைகள், செல்லப்பிராணிகள் மிக எளிதாக உட்கொண்டுவிடுவர்.

அதனால் சிகரெட் துகளிலிருந்து நிக்கோட்டின் உடலுக்குள் சென்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுதான் மூன்றாம் நிலை புகைத்தல். கடந்த வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த குழந்தைகளுக்கான மருத்துவ இதழ் `பீடியாட்ரிக்ஸ்’, மூன்றாம் நிலை புகைத்தல் குறித்த அறிவிப்பை முதன்முதலில் வெளியிட்டது.

மூன்றாம் நிலை புகைத்தல் குறித்து நுரையீரல் சிறப்பு நிபுணர் ஆயிஷாவிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.

``புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களின் குழந்தைகள், செல்லப் பிராணிகள் மூன்றாம் நிலை புகைத்தலுக்கு எளிதில் ஆளாகிவிடுகின்றனர். ஜன்னலுக்கு அருகிலோ, காற்றோட்டமான பகுதியிலோ, மின்விசிறி அல்லது ஏசியின் கீழிருந்தோ புகைப்பது வீட்டினுள் நிக்கோட்டின் பரவுவதைத் தடுக்கும்’ எனச் சிலர் நினைப்பதுண்டு. இது எல்லாமே போலியான நம்பிக்கைகள்தான். எப்படிப் புகைத்தாலும் பிரச்னை ஏற்படும். 

சுற்றி இருப்பவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என நினைப்பவர்கள், புகையில்லா சூழலை உருவாக்குவதுதான் சிறந்த வழி. அதாவது, புகை பிடிக்காமல் இருப்பது. மீறிப் புகைப்பவர்கள், மற்ற இடங்களைவிடவும் வீடு, ஹோட்டல், பார்க் போன்ற பொது இடங்களில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். ஆஷ்ட்ரே உபயோகப்படுத்துபவர்கள், அவை வைக்கப்பட்டிருக்கும் இடத்தை மிகத்தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அதைச் சுத்தப்படுத்த உபயோகப்படுத்தப்படும் துணியையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். 

ஆபத்து

சிகரெட்டிலிருந்து வெளிப்படும் ரசாயனங்கள், சுத்தப்படுத்தப்படாமல் நாள்பட்டுக் கிடந்தால் அவற்றின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கும். அதன் நச்சுத்தன்மையையும் அதிகரிக்கும். குழந்தைகள் அவற்றை உட்கொண்டால், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும். பச்சிளம் குழந்தைகளின் உடலில், நிக்கோட்டினை எதிர்கொள்ளும் அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது என்பதால் அவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்புகூட ஏற்படலாம்.

இன்றைய சூழலில் வீட்டுக்குள்ளிருக்கும் மாசுகளோடு நிக்கோட்டினும் சேர்ந்துவிட்டால், ரசாயனங்களின் வீரியம் அதிகரிக்கும். இந்த விஷயத்தில் சுகாதாரம் இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். அடிப்படையில், குழந்தையின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் கவனத்துடன் செயல்படுவதுதான் மூன்றாம் நிலை புகைத்தலை தவிர்ப்பதற்கான தீர்வு’’ என்கிறார் ஆயிஷா.

`புகை பிடிப்பவர்கள் அதிகமாக இருக்கும் இடங்களிலும் புகை பிடித்தலுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும் ஹோட்டல்கள், திரையரங்குகள், மால் போன்ற பொது இடங்கள் ஆகிய இடங்களில்தான் மூன்றாம் நிலை புகைத்தல் பிரச்னை அதிகம் ஏற்படுவதாக’ சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். புகை தனிநபருக்கு மட்டுமல்ல, ஒரு குடும்பத்துக்கான, ஒரு சமூகத்துக்கான பகை. இதிலிருந்து மீள்வது அவசியம் மட்டுமல்ல கட்டாயமும்கூட!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close