2 மாதங்களில் 14,803 பேருக்குப் பாதிப்பு - மிரட்டும் பன்றிக்காய்ச்சல்! #DataStory | 14,803 people affected, 448 deaths, the spread of swine flu!

வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (05/03/2019)

கடைசி தொடர்பு:19:43 (05/03/2019)

2 மாதங்களில் 14,803 பேருக்குப் பாதிப்பு - மிரட்டும் பன்றிக்காய்ச்சல்! #DataStory

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் 14,992 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்த வருடம் இரண்டு மாதத்தில் மட்டும் 14,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2 மாதங்களில் 14,803 பேருக்குப் பாதிப்பு - மிரட்டும் பன்றிக்காய்ச்சல்! #DataStory

ந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 14,803 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில், 448 பேர் இறந்துவிட்டார்கள். அதிகபட்சமாக ராஜஸ்தானில் 3,964 பேர் பாதிக்கப்பட்டு, 137 பேர் இறந்துள்ளனர். கடந்த வருடத்தின் பாதிப்பைவிட இந்த வருடம் பாதிப்பும், இறப்பும் அதிகமாகலாம் என்று தேசிய நோய்த் தடுப்பு மையம் (NCDC) கூறுகிறது. உலகம் முழுவதும் 5.75 லட்சம் பேர் வருடம்தோறும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.

பன்றிக்காய்ச்சல்

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் 14,992 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்தாண்டு இரண்டு மாதங்களில் மட்டும் 14,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு அதிகளவில் பரவிவந்த பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிரடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளான ராஜஸ்தான், குஜராத் மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் தீவிரமாகப் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. தென் இந்தியாவைப் பொறுத்தவரை, கேரளாவில் 180 பேரும், கர்நாடகாவில் 554 பேரும், ஆந்திரப்பிரதேசத்தில் 128 பேரும், பாண்டிச்சேரியில் 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 196 பேர் பாதிக்கப்பட்டு, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Swine flu

இது தொடர்பாகப் பொதுநல மருத்துவர் சிவராம் கண்ணன் கூறுகையில், "தொடர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தசை வலி, உடல் வலி, உடல் சோர்வு, சுவாசப் பிரச்னைகள், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்.  sivaram kannan பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், தொடர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் உடனடியாக முறையான சிகிச்சையைப் பெறவேண்டும். 

இன்ஃப்ளூயென்சா வைரஸ்களில் `ஹெச் 1 என் 1' (H1N1), `ஹெச் 3 என் 2' (H3N2) எனப் பல வகைகள் உண்டு. எனவே, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் எந்த வகையான வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது மிகவும் அவசியம். பன்றிக்காய்ச்சலைப் பரப்பும் வைரஸின் தன்மையானது அவ்வப்போது உருமாறி வருகிறது. இந்திய அரசும் ஆண்டுதோறும் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகளை அப்டேட் செய்துவருகிறது. 

அப்டேட் செய்யப்பட்ட தடுப்பூசிகளை (vaccine) எடுத்துக்கொண்டால்தான் அந்தச் சமயத்தில் பரவும் வைரஸின் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியும். எனவே பாதிப்பின் தன்மையைப் பொருத்து தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவேண்டும். பாதிக்கப்பட்டோர் `டாமிஃப்ளு' (Tamiflu) மாத்திரையைத் தினமும் இரண்டு வேளை வீதம் ஐந்து நாள்களுக்கு மருத்துவரின் ஆலோசனை பெற்று, உட்கொள்ள வேண்டும். 

HINI-vaccine

பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான H1N1 வைரஸ் தும்மல், இருமல், சளி மற்றும் வியர்வை மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு நேரடியாகப் பரவுகிறது. பரவுவதைத் தடுக்க தும்மலின்போதும், இருமலின் போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். வெளியிடங்களுக்குச் சென்று வீடு திரும்பியதும் சோப்புப் போட்டு தண்ணீரால் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். பிறருடன் கைக்குலுக்குதல், பிறரின் கண், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். கூட்டமாக இருக்கும் இடங்களிலிருந்து சற்று தனித்து இருக்கலாம். குளிர்பானங்களைத் தவிர்த்து பழச்சாறுகளை அருந்தலாம். எக்காரணத்தைக் கொண்டும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிறார் சிவராம் கண்ணன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close